28 பிப்., 2015

பாரதிதாசன் கவிதைகள்-14: தூய்மை

தூய்மை

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
     தூய்மை சேரடா தம்பி!

பாரதி கவிதைகள்-25: விடுதலை - சிட்டுக்குருவி

விடுதலை - சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2.
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3.
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

சித்தர் பாடல்கள்-6: அழுகணிச் சித்தர் பாடல்

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி!

திருப்புகழ்-2: விநாயகர் துதி

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
     கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
     கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை
     மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
     அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
     அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் - பெருமாளே!    

இன்று ஒரு தகவல்-47: இந்தியாவில் 76.23 கோடி ஜி எஸ் எம் செல்போன்!

இந்தியாவில் உள்ள ஜி எஸ் எம் செல்போன்களின் 

இணைப்பு அக்டோபர் 2014 வரையிலான 

கணக்குப்படி  76.23 கோடி.


நன்றி – தினத்தந்தி நாளிதழ்

தாயுமானவரின் பராபரக்கண்ணி-63:

உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை

அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே

நலக்குறிப்புகள்-93: ஆரோக்கியம் வழங்கும் சாறுகள்

ஆரோக்கியம் வழங்கும் சாறுகள்


1.     அருகம்புல் சாறு
2.     வில்வ இலைச் சாறு
3.     வல்லாரை இலைச் சாறு
4.     ஆவாரம்பூ சாறு
5.     நெல்லிக்காய்ச் சாறு
6.     வாழைத்தண்டுச் சாறு
7.     மாந்தளிர்ச் சாறு
8.     எலுமிச்சைச்சாறு
9.     திராட்சைப்பழச் சாறு
10. சாத்துக்குடிச் சாறு
                        

ஆன்மீக சிந்தனை-62: சத்குரு ஜக்கி வாசுதேவ்

தனக்குள் கடவுளைத் தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களுடன் சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

இன்றைய சிந்தனைக்கு-189:

வீரனைப்  போரிலும் 
யோக்கியனைக்  கடனிலும்,
மனைவியை  வறுமையிலும்,
நண்பனைக் கஷ்ட காலத்திலும்

அறிந்து கொள்ளலாம் - யாரோ 

14 பிப்., 2015

பாரதிதாசன் கவிதைகள்-13: இன்பம்

இன்பம்

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா
பசி என்று வந்தால்...

பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்
பசி என்று வந்தால்...

அறத்தால் வருவதே இன்பம் -- அப்பா
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
பசி என்று வந்தால்...

மனுவின்மொழி அறமான தொருநாள் -- அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!
சினம்அவா சாதிமதம் புலைநாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
     பசி என்று வந்தால்...

பாரதி கவிதைகள்-24: ஐய பேரிகை

ஐய பேரிகை
பல்லவி

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!

சரணங்கள்

1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)

2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
[ஐய பேரிகை)

சித்தர் பாடல்கள்-5: அழுகணிச் சித்தர் பாடல்

அழுகணிச் சித்தர் பாடல்


கலித்தாழிசை


மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே 

கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே

பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்

மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!

விளையாட்டைப் பாரேனோ! 

திருப்புகழ்-1: முருகன் துதி

அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்: முருகன் துதி

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
     ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
     குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
     வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

இன்று ஒரு தகவல்-46: நீங்கள் வாங்கும் மருந்து போலியா என அறிய:

நீங்கள் வாங்கும் மருந்து போலியா என அறிய:

மருந்து பாட்டில் அல்லது பெட்டியின் மேல் ஒன்பது இலக்க எண் (UNIQUE PRODUCT IDENTIFICATION CODE) இருக்கும். அந்த எண்ணை 9901099010 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்யவும். பத்தே வினாடிகளில் அந்த மருந்தின் குழு எண், காலாவதி தேதி, தயாரிக்கும் கம்பெனியின் பெயர் (Batch Number, Expiry Date, Company Name) ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும். 

இந்த சேவையை வழங்குவோர்
PHARMASECURE.COM

நன்றி - PHARMASECURE.COM



தாயுமானவரின் பராபரக்கண்ணி-62:

நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்


காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே

நலக்குறிப்புகள்-92: அமிலத்தன்மை மிகுந்த உணவுகள்

அமிலத்தன்மை மிகுந்த உணவு வகைகளைப் பொதுவாக குறைத்துக்கொள்வது நல்லது. சில அமிலத்தன்மை மிகுந்த உணவுவகைகள்:

1.     எண்ணெயில் வறுத்தவை/பொரித்தவை
2.     காபி
3.     தேனீர்
4.     சீனி
5.     பருப்புகள்
6.     தானியங்கள்
7.     மாமிச உணவுவகைகள்
8.     அனைத்து இனிப்பு-காரப் பலகாரங்கள்
9.     மிட்டாய்கள்
10. சாக்லேட்டுகள்
11. டப்பாவில் அடைத்த் உணவுகள்
12. பேக்கரி உணவுகள்