26வது அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) நினைவு தினம் இன்று (ஜனவரி 6).
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.
1888-ல் நடந்த அதிபர் தேர்தலில் பெஞ்சமின் ஹாரிசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பெஞ்சமின் அதிபரானதும், இவரை சிவில் சர்வீஸ் ஆணையராக நியமித்தார். 1894-ல் நியூயார்க் நகர போலீஸ் கமிஷனரானார். ஊழல் மலிந்திருந்த காவல் துறையை அடியோடு மாற்றினார்.
அதையடுத்து கடற்படையில் இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது நடந்த அமெரிக்க ஸ்பெயின் போரில் சிறப்பாக பங்காற்றினார். அரசியலில் மீண்டும் முனைப்புடன் இறங்கி, நியூயார்க் மாநில ஆளுநரானார்.
1896ல் வில்லியம் மெக்கின்லே அதிபரானார். இவர் துணை அதிபரானார். அதிபர் மெக்கின்லே 1901-ல் படுகொலை செய்யப்பட, துணை அதிபராக இருந்த இவர் தனது 42-வது வயதில் அமெரிக்க வரலாற்றிலேயே இளம் அதிபராக பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு, பொருளாதாரம், போக்குவரத்து சேவைகள், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து துறைகளையும் மேம்படுத்த பல சீர்திருத்த திட்டங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்தார்.
செல்வாக்கு மிக்கத் தலைவராகத் திகழ்ந்தவர், 1904 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தார். கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவியதோடு, உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல உதவிகளை வழங்கினார்.
1909-ல் பதவிக்காலம் முடிந்த பிறகு, அமேசான் வனப்பகுதிக்கு சென்று வாழ்ந்தார். மீண்டும் எழுத்துப் பணியைத் தொடங்கினார். ‘தி நேவல் வார் ஆஃப் 1812’, ‘தி வின்னிங் ஆஃப் தி வெஸ்ட்’, ‘ஆப்பிரிக்கன் கேம் ட்ரைல்ஸ்’ ஆகிய இவரது நூல்கள் மிகவும் பிரசித்தம்.
தலைவர்களாலும் மக்களாலும் ‘டெடி’, ‘டிஆர்’ என்று குறிப்பிடப் பட்டார். 1906-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். தலைமைப் பண்பு மிக்கவர், உயர்ந்த லட்சியங்கள் கொண்டவர், தொலைநோக்கு சிற்பி என்று புகழ் பெற்ற இவர் தமது 61-வது வயதில் உடல்நலம் குன்றி மறைந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை, அக்டோபர் 27, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக