12 ஜூன், 2020

கவிதை நேரம் : அகண்டு விரிந்த வானின்கீழெ : தேவதேவன்

அகண்டு விரிந்த வானின்கீழெ

அத்துணை அகண்ட பேரெழிலுடன்

யார்

ஏன்

எதை

இப்படி

ஈரப்புனல்கொண்டு

இதமான சமநிலப் பரப்பினை விரித்த

பெருங்களத்தில் நின்றபடி

வெகு அக்கறையோடு குனிந்து

ஊன்றிக்கொண்டே இருக்கிறார்கள்

வரிசை வரிசையாய்? அணி அணியாய்?

புன்னகையோடு திரும்பிப் பார்த்த அவனைப்

பூரிப்போடு பார்த்த தந்தை

“நாற்று’ என்றார் “நடுகிறார்கள்” என்றார்

“வயல்” என்றார்

மிகப்பரிதாபமான தொனியுடன்
பரவாயில்லை என்பது போன்ற

கனிவும் புன்னகையும் நிறைவும்

பேரளவானதொரு ஆறுதலும் மிளிர

அவர் முகத்தை வருடின

அவன் பிஞ்சுக்கரங்கள்.

கருத்துகள் இல்லை: