அன்பு நண்பர் கிரேசி மோகன் பற்றிய நினைவுகளோடு ஓர் ஆண்டு கடந்து விட்டது... கண்ணீர் அஞ்சலிகளோடு
Missing you, Mohan - இரா.முருகன்
-----------------------------------------------
கிரேசியை சந்தித்தேன் - 1
‘ஒரு பெயிண்டிங் ப்ரேம் செய்யணும். எங்கே கொடுக்கலாம்?’
பிரபல கேலிச் சித்திரக்காரர் கேஷவைக் கேட்டேன்.
‘நீங்க படம் கூட வரைவீங்களா?’
வசீகரமாகச் சிரித்தார் கேஷவ். ஹிந்து பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி இருக்கும் கலைஞர். அரசியல், சங்கீதம், பொருளாதாரம் இப்படி அவருடைய கூர்மையான பார்வைக்கும் ஆழமான நகைச்சுவை உணர்வுக்கும் சாட்சியான ஏகப்பட்ட கார்ட்டூன்களை தினசரி காலையில் முதலில் பார்த்துவிட்டுத்தான் பத்திரிகையைப் புரட்டும் வாசகர்கள் லட்சக்கணக்கில் உண்டு. ஆனால் அவர்களில் பலருக்கு கேஷவ் ஒரு கை தேர்ந்த மரபு சார்ந்த ரியலிச பாணி ஓவியர் என்று தெரியாது. கண்ணனை அற்புதமான ஓவியங்களாக வரைந்து இரண்டு கண்காட்சி நடத்தி விட்டார் இதுவரை. அவருக்குப் போட்டியாக இனிமேல்தான் நான் கற்றுக்கொண்டு படம் போட வேண்டும்.
‘நான் வரையலே கேஷவ். கிரேஸி மோகன் ஓவியம்’
‘மோகன் வரைஞ்ச ஓவியத்தை ப்ரேம் செய்யணுமா?’
‘இல்லே, என் தங்கை ஜெயா ரவி வரைஞ்ச ஓவியம்’
‘அப்ப அதிலே கிரேசி எங்கே வந்தார்’
‘படம் அவரோடது தானே’
‘அப்ப ஜெயா ரவி?’
ஊஹும். இது முடியப் போவதில்லை. கிரேசி நாடகத்தில் மாதுவோ சீனுவோ அவ்வப்போது சிண்டைப் பிய்த்துக் கொண்டு குழம்புவதுபோல் இரண்டு பேரும் ஒரு வினாடி குழப்பத்தில் இருந்தோம். கன்ப்யூஷனுக்குக் காரணமும் கிரேசிதான். அவர் ஓர் ஓவியரும் கூட என்பது தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் பாதகமில்லை, இப்போது தெரிந்து கொள்ளவும்.
சாக்லெட் கிருஷ்ணாவை ஆயில் பெயிண்டிங் ஆக ஜெயா வரைந்த படம். அதைத் தகுந்த ஃப்ரேம் போட்டு வாங்க வேண்டும். ‘சட்டம் இவங்க கையில்’ என்று கேஷவ் காட்டிய அய்யா ஆர்ட்ஸ் கேலரியில் கிருஷ்ணன் சட்டாம்பிள்ளையானார். பத்திரமாக எடுத்துக் கொண்டு கிரேசி வீட்டுக்குப் புறப்பட்டேன்.
ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிடலாமா, எழுதலாமா, வெற்றிலை ஒரு ஆவர்த்தனம் போடலாமா என்ற யோசனையில் இருந்த மோகனிடம் படத்தைக் கொடுத்தேன்.
சாப்பாடு ஒத்திப் போடப்பட்டது. வெற்றிலை பாக்கும் வெண்பாவும் கூட.
‘அப்பா, நளினி, முருகன் வந்திருக்கார் பாருங்கோ. பெயிண்டிங் கொண்டு வந்திருக்கார்’
வாத்சல்யமான சிரிப்போடு கிரேசியின் அப்பா திரு ரங்காச்சாரி சாரும், பின்னாலேயே நட்பான புன்னகையோடு கிரேசியின் மனைவி திருமதி நளினி மோகனும் உள்ளே இருந்து வந்து வாய் நிறைய வரவேற்றார்கள்.
‘பிரிக்கலாம் இல்லையா?’
மோகன் படத்தைக் காட்டிக் கேட்டார்.
எதுக்கு என் உத்தரவு? சும்மா பிரியுங்க. உங்க படம் தான்.
கிருஷ்ணன் சோபாவில் சார்த்தி வைக்கப் பட்டார்.
‘பிரமாதமா இருக்கு’
திருமதி மோகனும் ரங்காச்சாரி சாரும் ஏகோபித்த அபிப்பிராயம் சொன்னார்கள்.
‘பிரமாதம்’
மோகன் எதிரொலித்தார்.
‘கழுத்து வரையறதுதான் கஷ்டம். ரொம்ப சரியா வந்திருக்கு’.
ஓர் ஓவியராகக் கருத்துச் சொன்னார். சரியாகத்தான் இருக்கும். ஜெயராஜைக் கேட்டால் வேறே ஏதாவது சொல்வார். அதுவும் கூடச் சரியாகவே இருக்கும்.
‘வாங்க, மாடிக்குப் போகலாம்’.
மோகன் அழைக்க மாடிப்படி ஏறினேன். படிகள் தோறும் கிருஷ்ணன் காலடித் தடம்.
‘என்ன சார், கிருஷ்ண ஜயந்தி வந்து நாலைஞ்சு மாசமாகப் போறதே. இன்னும் அப்படியே வச்சிருக்கீங்களே? செண்டிமெண்டா?’
‘சண்டிமண்ட். காலைப் போடுவானேன், அழிப்பானேன். கூடவே கூடாது. பெர்மனண்டா இருக்கட்டுமேன்னு பெயிண்டிலேயே போட்டுட்டேன்’.
கால் மார்க்ஸைப் பின்பற்றுவதில் எனக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது. மாடிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அறை முழுக்க புத்தகங்கள். அதில் பலவும் ஆன்மிகம் சொல்பவை. மேஜையில் கம்ப்யூட்டர் வைத்த இடம் தவிர மீதி இடத்திலும் புத்தகங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஓரமாக நீண்டு நிமிர்ந்து ஒரு மர பீரோ.
‘இதுக்குள்ளே வேறே என்ன புத்தகம் தனியா எடுத்து வச்சிருக்கீங்க?’
பீரோவைக் காட்டிக் கேட்கிறேன்.
அதில் முக்கால்வாசி மோகன் எழுதிய நாடக ஸ்கிரிப்டாம். இதுவரை 25 வெற்றிகரமான நாடகங்கள் எழுதியிருக்கிறார்.
‘முக்கால் வசனம். மீதி?’
‘நான் வரைஞ்ச சில ஓவியங்கள், போட்டோக்கள் இத்யாதி’
நிதானமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய இடம் என்று மனதில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டேன்.
மோகன் கம்ப்யூட்டர் மௌஸை நகர்த்தி திரையில் ஒரு கார்ட்டூன் சிரிச்ச மூஞ்சியை பத்து செகண்டில் வரைந்தபடி என்னைப் பார்த்தார்.
‘கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேட்கட்டுமா’ என்ற திருவிளையாடலான பார்வை. தருமியாக முந்திக் கொண்டேன்.
‘ஆரோக்கியமான நகைச்சுவை. ரெட்டை அர்த்தம், மூணு அர்த்தம்னு எல்லாம் கிடையாது. சுலபமா புரியற கதை, வசனம். உங்களுக்கு போரடிக்கலியா? ஏன் வேறே ழானர்(genre)லே நாடகம் எழுதக் கூடாது நீங்க?’
‘துபாய்லே நாடகம் போடறபோது ஒரு பிரபல டாக்டர் என்கிட்டே இதையேதான் கேட்டார். நான் அவர் கிட்டே திருப்பி என்ன கேட்டேன் தெரியுமா?’
சொன்னாத்தானே தெரியும்?
‘நீங்க எத்தனை வருஷமா டாக்டரா இருக்கீங்க, போரடிக்கலியா? ஏன் ஒரு சேஞ்சுக்காக எஞ்ஜினீயர் ஆகக் கூடாது’?
அதானே. எம்.டெக் படித்து பத்து வருஷம் எஞ்சினீயராக வேலை பார்த்துவிட்டு ஒரு சேஞ்சுக்காக நாடக மேடைக்கு வந்தவர் அவர். மேடையில் இருந்து அரங்கைப் பார்த்து ரசிப்பது அலுக்காததால் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி விட்டார். அவர் பார்க்க விருப்பப்படுவது கம்ப்யூட்டர் திரையில் அவர் வரைந்த சிரிக்கும் முகம் போல் அரங்க நாற்காலிகளை நிறைத்து குதூகலமாக ஆயிரம் பேரை. அந்தப் பணி, தொடர பாணியை மாற்ற என்ன அவசியம்?
‘பேஷா சிரிக்கட்டும். நானும் உங்க நாடகத்துக்கு சிரிக்கத்தான் வரேன். ஆனா ஒரு சந்தேகம். ஏன் சில டெசிபெல் சத்தம் எப்பவும் அதிகமா இருக்கு?’
‘அதிகம்னா?’
‘சாக்லெட் கிருஷ்ணாவிலே நீலு சார் வர்ற சீன், இண்டர்வ்யூ சீன் இப்படி’.
‘எல்லா ஸ்டேஜ்லேயும் ஒலியமைப்பு ஒரே மாதிரி இருக்கறதில்லே. கடைசி வரிசையிலே இருக்கறவங்களுக்கு மேடை தெளிவாத் தெரியுமான்னு சந்தேகமாக சில இடத்துலே லைட்டிங் வேறே. சமயத்திலே மேடையிலேயே பக்கத்திலே நிக்கறது யார்னு தெரியாம அசமஞ்சமா வெளிச்சம். அதுவும் அணஞ்சு அணஞ்சு வரலாம். போற இடத்திலே இருக்கற சௌகரியப்படிதானே அதெல்லாம் அமையும்? யாரையும் குத்தம் சொல்லக் கூடாது. ஆகக்கூடி குரல் பலத்திலே தான் நாடகம் போட வேண்டியிருக்கு. என்ன, நான் சொல்றது சரியா?’ டபுள் ஓகே.
அமெச்சூர் நாடகம் தாம்பரம் சானடோரியத்தைத் தாண்டாது என்ற எழுதாத விதியை உடைத்து அந்தக்கால கன்னையா கம்பெனி, டி.கே.எஸ் அண்ணாச்சி போல் தமிழகம் முழுக்க நாடகம் போடுகிறவர் மோகன். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை இப்போதைக்கு சாய்சில் விட்டு விடலாம்.
‘க்ரேசி, நீங்க தினசரி நடைமுறை வாழ்க்கை சூழ்நிலையிலே இயல்பா வர்ற சம்பவங்களை வச்சு சினிமாவுலே வெற்றிகரமாக எழுதிக் குவிச்சிருக்கீங்க. சுட்சுவேஷனல் காமெடின்னாலே சட்டுனு எல்லோருக்கும் மைக்கேல் மதன காமராஜன் தான் நினைவு வருது. நாடகத்திலே ஏன் சுட்சுவேஷனல் காமெடி வைச்சு எழுதக் கூடாது?’
நான் படு சீரியஸாகக் கேட்க, வெற்றிலை குதப்பியபடி க்ரேசி சிரிக்கிறார்.
‘சூச்சு வேஷனலா ட்ரை பண்ண சபா ஏ.சியை ஐஸ் குளிராக ஜாஸ்தி ஆக்கினாலே போதும். அப்புறம் பாத்ரூம் போற கூட்டம், போய்ட்டு திரும்பற கூட்டம் இதுக்கு நடுவிலே போறதா வேணாமான்னு யோசிச்சுக்கிட்டு வாசலைப் பார்க்கற கூட்டம் இப்படித்தான் ஆடியன்ஸ் போக வர இருப்பாங்க. கமல் சார் சொல்ற மாதிரி Bladder retention capability is inversely proportional to audience retention ஒண்ணேகால் ஒண்ணரை மணி நேரத்திலே இண்டர்வெல் விட்டாகணும்..
‘அப்ப, சுச்சுவேஷனல்?’
விடாமல் பிடித்தேன்.
‘ஒண்ணு செய்யுங்களேன். நீங்க எழுதுங்க. போட்டுடலாம்.’
ஒரு வினாடியில் ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டார். சிரித்தபடி அடுத்த கேள்விக்குப் போனேன்.
‘கிரேசி கிரியேஷன்ஸ் வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க?’
‘நான் இல்லே. நண்பர்கள் தான். வாசு டீம் மேனேஜர். மேடையை விட்டு இறங்கினா ’பார்த்தா’ங்கற பார்த்தசாரதி. க்ரீன்ரூம்லே மேக்கப் இன்சார்ஜ். மேடையிலே நடிப்பு ஃபுல்சார்ஜ். அப்பா ரமேஷ் பொறக்கும்போதே அப்பாவா பொறந்துட்டான் கிரேசி கிரியேஷன் நாடகத்துக்காக. ஸ்டேட் பேங்க் சீனியர் மேனேஜரா இருந்து ரிடையர் ஆனவன் அவன் தெரியுமோ? சுப்பு ரொம்ப புகழ்பெற்ற லாயர். மேடையிலே ஏறினா சிரிக்கச் சிரிக்க தசாவதாரமே எடுத்துடுவான். சுந்தர்ராஜன் என்ன வேஷம்னாலும் வெளுத்துக் கட்டுவான். எங்க டைரக்டர் காந்தன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட். மாது பாலாஜி. ஆமா, தம்பிதான். தோளுக்கு உசராட்டாலும் தோழன் தான் பாலாஜியும். இவங்க மாதிரி, கிரேசி டீமிலே இருக்கற ஒவ்வொருத்தரைப் பத்தியும் ரோல்கால் எடுக்கற மாதிரி சொல்லிண்டே போகலாம். கேட்டு முடிச்சு நீங்க விடிகாலையிலே தான் வீட்டுக்குப் போக முடியும். அதனால் சுருக்கமாச் சொன்னா, எந்த வேலையையும் கிரேசி கிரியேஷன்ஸுக்காக எப்போதும் செய்யத் தயாரா இருக்கற என் நண்பர்கள் தான் நான் இன்கம்டாக்ஸ்லே கூட டிக்ளேர் பண்ண ஆசைப்படற என் சொத்து. எங்க பேலன்ஸ் ஷீட்டுலே அசெட் தான் அதிகம். லயாபிலிட்டி இல்லையாபிலிட்டிதான்’.
‘அது சரி மோகன், ஏன் உங்க நாடகத்திலே பெண் கதாபாத்திரங்கள் ரொம்பக் கம்மி? ஒரு மைதிலி, ஒரு ஜானகி. முக்கியமா ரெண்டு பேர்’.
‘ஆமா, முக்கியமா ரெண்டு பேர். மைதிலியும் ஜானகியும் இல்லாட்ட நாடகமே போட முடியாது. பெண்களை நான் ரொம்ப மதிக்கறேன். அவங்க வீட்டிலும் வெளியிலும் நிர்வாகம் பண்ணாட்ட, நாம நாடகம் எழுத, நடத்த, அக்கடான்னு உட்கார்ந்து பார்த்து ரசிக்க இதெல்லாம் ஒண்ணும் முடியாது. நாடகத்துலே வேறே நடிங்க, தொடர்ந்து அதுக்காக வெளியூர் பயணம் வாங்கன்னு லேடீஸை டீம்லே கூப்பிட்டா, மற்றக் கடமைகளை அவங்க நிறைவேற்ற முடியாமப் போயிடும். ஒரு தடவை ஜூராசிக் பேபி போடறபோது என்ன ஆச்சு தெரியுமா? மேடையிலே பர்னிச்சர் இடுக்கிலே சுண்டு விரல் மாட்டி, மைதிலி கேரக்டர் செஞ்ச ஆர்ட்டிஸ்டுக்கு விரலே விண்டு போய் விழுகற அளவு முறிஞ்சுடுத்து. பிராணன் போற வலி. அலற அலற ஆஸ்பத்திரிக்குத் தூக்கிண்டு ஓடினோம். நல்ல வேளை, உடனடி ட்ரீட்மெண்டுக்குப் பிறகு விரல் குணமாயிடுச்சு. நாடகம் தான் அன்னிக்கு நின்னு போச்சு. விரலை நாடகத்துக்காகக் கொடுக்கற ஏகலைவி எதுக்கு, பாவம். நமக்கு ஏக லைப் கொடுக்கறதே பெண்குலம் செய்யற பெரிய காரியம், இல்லியா?’
‘வெளியூர் நாடகம்னா, ப்ளைட்டா இல்லே ரயிலா?’
‘வெளிநாடுன்னாத்தான் ரயில் விடமாட்டாங்க. அதுனாலே ப்ளைட்டை விட்டா வேறே வழியில்லை. இந்தியாவுக்குள்ளே preferred mode of travel, ரயில் தான். ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க ரிசர்வ் பண்ணிடுவோம். அம்புட்டு டிக்கட் இருக்கு இங்கே. ஜாலியா அரட்டை அடிச்சுண்டு, வீட்டுலே பார்சல் பண்ணி எடுத்து வந்த ஹோம்லி மீல்ஸ், டின்னர், ஜங்க்ஷன் மசால்வடை, பூரி, காப்பின்னு சாப்பிட்டுண்டு, கல்யாணத்துக்கு வர்ற சம்பந்தி கோஷ்டி மாதிரி கலகலன்னு போய் இறங்குவோம்’.
‘எல்லோரும் சேர்ந்து தங்கணும்னா டார்மிட்டரி, ஹாஸ்டல் மாதிரி வேண்டி இருக்குமே. போற இடத்துலே கிடைக்குமா?’ கரிசனமாக விசாரிக்கிறேன்.
‘அதை ஏன் கேக்கறீங்க. மோகன், நீ பாவம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு மத்த எழுத்து வேலையை எல்லாம் முடிச்சுடு. உனக்கு தனி ரூம் போட்டிருக்கோம்னு ப்ரண்ட்ஸ் தாராள மனப்பான்மையோட சொல்வாங்க. இவங்க சொல்றாங்களேன்னு தனியா ஒரு ரூம்லே போய் கொட்டக் கொட்ட உக்காந்துண்டு என்ன எழுதலாம்னு யோசிச்சபடிக்கு கண்ணை மூடுவேன். திறந்து பார்த்தா, அத்தனை பேரும் சொல்லி வச்ச மாதிரி அந்த ரூம்லே ஆஜராகி இருப்பாங்க. ஏசி இங்கே நல்லா இருக்கு. பாத்ரூம் குழாய்லே அருவி மாதிரி தண்ணி கொட்டறதுன்னு ஏதாவது சாக்கு. சாக்கோ பேக்கோ, ஜோக்கா உக்காந்து திரும்ப ஜமா சேர்ந்துடும். எனக்கு தனியா தங்கறதுக்கு இடம் கிடைக்கறது இப்படித்தான்’
‘உங்க டீம் இப்படி. சரி, ஆடியன்ஸ்? அதிக பட்ச ரசிகர்கள் ஒரு ஷோவிலே எத்தனை இதுவரை பாத்திருக்கீங்க?’
மோகன் கண்ணை மூடி யோசிக்கிறார். அடுத்த வினாடி சட்டென்று சொல்கிறார் – ‘எட்டாயிரம் பேர். ஆமா சார், எய்ட் தௌஸண்ட். நாடகம் ஆரம்பிச்சாச்சு. நான் ஒருத்தரைக் கூப்பிட்டு, கடைசி வரிசைக்குப் போன்னு சொன்னேன். அது எங்கே இருக்குன்னு அவர் கேட்கறார். உத்தேசமா கையை எட்டற மட்டும் நீட்டி இதுக்கு ரொம்ப அப்புறம்னு சொல்றேன். போய் என்ன பண்ணணும்னு அந்த மனுஷர் விடாம பிடிக்கிறார். கடைசி வரிசையிலே இருக்கறவங்களுக்கு மேடையிலே பேசற டயலாக் எல்லாம் சரியானபடிக்குக் காதுலே விழறதான்னு கேட்டுண்டு வான்னு அனுப்பி வச்சேன். நாடகம் ஆரம்பிச்சு தடதடன்னு முன்னாடி போயிண்டே இருக்கு. இவர் திரும்பி வந்த பாடே இல்லை. ஒரு வழியா வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் கூட்டத்துக்குள்ளே புகுந்து புறப்பட்டுப் போய், கடைசி வரிசையை செக் பண்ணிட்டு திரும்ப ஜன சமுத்திரத்திலே நீந்தி மேடைக்கு வந்துட்டார். மோகன், எல்லாம் சரியா இருக்குன்னு குஷியாச் சொன்னார். நான் தாங்க்ஸ் சொன்னேன். அதுக்கு அஞ்சு நிமிஷம் முந்தித்தான் நாடகம் முடிஞ்சிருந்தது’.
அவர் சிரிக்காமல் சொல்ல நான் அடக்க முடியாமல் கண்ணில் நீர் தளும்பச் சிரிக்கிறேன். மூக்குக் கண்ணாடி இடைஞ்சலாக இருந்ததால் அதைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு கண்ணைத் துடைத்துக் கொள்ளும்போது மோகன் குரல் – ‘சுஜாதா சார் நாடகத்துக்கு வந்தா இப்படித்தான் சிரிச்சபடி கண்ணைத் தொடச்சுப்பார்’.
நான் மோகன் கண்களைப் பார்க்கிறேன். கலங்கியிருக்கின்றன அவை
(Excerpts from an article in our - friends of Crazy Mohan- anthology of articles about Mohan 'Crazy mudhal Crazy varai')
நன்றி: திரு.இரா.முருகன் & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக