6 ஆக., 2020

குட்டிக்கதை : சீறும் பாம்பு

சிறுகதை : சீறும் பாம்பு

"கடைசில சாகற வரைக்கும் என்னை பாடாய் படுத்தி எடுத்து விட்டுதான் போய் சேர்ந்தது கிழம்...அப்பப்பா என்ன கொடுமை?  நின்றால் குற்றம்.... உட்கார்ந்தால் குற்றம்...கண்ணுல விரல விட்டு ஆட்டி சும்மா பம்பரம் மாதிரி சுத்த வைச்சாளே."..இறந்து போன மாமியாரை நினைத்து பெருமூச்சு விட்டாள் சாரதா..

திருமணம் ஆகி பலவித கனவுகளுடன் ஆசையாக வந்தவள் மாமியாரின் கொடுமைகளை கண்டு ஆடி போய் விட்டாள்.. அவரிடம் சொல்லி பிரயோசனம் இல்லை....யாருக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலைமையாக போய் விடுவார்..  வேலைக்கு சென்றால். பாதி நேரம் அங்கே கழிக்கலாம் என்றால் சரியான படிப்பு இல்லை.  கிராமத்திலிருந்து டவுனுக்கு உயர் நிலை பள்ளியில் அப்பா சேர்க்கவில்லை...சரி ஏதாவது கிடைத்த வேலையை பார்க்கலாம் என்றால் மாமியாருக்கும் இவருக்கும் இஷ்டம் இல்லை.

ஒரு நிமிடம் சும்மா இருக்க விடமாட்டார் மாமியார்...ஏதாவது அரைத்து, புடைத்து, இடித்து வை என்று கட்டளை.  சரியாக தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது.  செய்யும் வேலையிலும் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடிப்பார்...உன் வளர்ப்பு சரியில்லை என்று வார்த்தைகளை அள்ளி வீசுவார்.  

ஆனால் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து பேசமாட்டார்.  ,"சாரதாவுக்கு கைமணம் ..அவ வைக்கிற ரசம் மாதிரி யாரும் வைக்க முடியாது" என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்வார்.  

"அவளை வெளியிலே அழைச்சுண்டு போடா..பாவம் அவ..எப்ப பார்த்தாலும் வீடுன்னு கிடக்கிறா" என்று அவரிடம் அடிக்கடி சொல்வார்.  ஆனால் இலை நிறைய பரிமாறி ஓரத்தில் ஒரு துளி விஷம் வைத்த மாதிரி இவளிடம் கடுமையாக நடந்து கொள்வார்.

மாமியார் மறைந்தது தனக்கு ஒரு விடுதலை கிடைத்த மாதிரி உணர்ந்தாள்.  பெரிய பெண்ணுக்கு திருமணம் செய்தாகி விட்டது.  பையன் நன்றாக படித்து நல்ல வேலைக்கு வந்து விட்டான்.  அவனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..என் மாமியார் மாதிரி இல்லாமல் நான் ஒரு நல்ல அம்மா மாதிரி என் மாட்டுப்பெண்ணிடம் நடந்து கொள்வேன் என்று மனதில் உறுதியுடன் இருந்தாள்.

இதோ பையனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. மாட்டுப்பெண் படித்தவள்..வேலைக்கு செல்கிறாள்..அவளிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்டாள்...சமையல் வேலை மற்றும் வீட்டு வேலை என்று சகலமும் பார்த்துக் கொண்டாள்...பாவம் அவளும் வேலைக்கு போய் வருகிறாள்...அவளுக்கு ஓய்வு வேண்டும் என்று அனைத்து வேலையையும் தானே இழுத்து போட்டுக்கொண்டு செய்தாள்..கஷ்டம் ஒன்றும் தெரியாமல் மனதில் ஒரு சந்தோஷ அலை பரவியது..மாட்டுப்பெண்ணும் முதலில் அம்மா அம்மா என்று அன்பாக அழைத்தாள். ஆனால் விடுமுறை நாட்களில் கொஞ்சம் உதவி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது சாரதாவுக்கு..நெடுநேரம் தூங்கி மெதுவாக எழுந்து தன் வேலையை மட்டும் பார்த்தது சற்று மனதில் உறுத்தியது...அவளுக்கு வேலை செய்து பழக்கம் இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

"என்ன அம்மா சப்பாத்திக்கு எப்ப பார்த்தாலும் கிழங்கு மசால் செய்கிறீர்கள்? அவருக்கு ஒத்துக் கொள்ளாது..வட இந்திய சப்ஜி நான் சொல்லித் தருகிறேன்...நீங்கள் அதை செய்யுங்கள்" என்று ஒரு நாள் அவள் சொன்னதும்.."ஓ ..இவளுக்கு சமையல் எல்லாம் தெரிகிறது..ஆனால் ஏன் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம்.. கூட மாட ஒத்தாசை செய்தால் என்ன" என்று மனதில் மறுகினாள்..

ஒரு நாள் *என்ன அம்மா அடிக்கடி உப்புமா செய்கிறீர்கள்? இவருக்கும் அப்பாவுக்கும் பிடிக்காது* என்று சொல்ல "இத்தனை வருடம் நான் சமையல் செய்கிறேன்..இவருக்கும் பிள்ளைக்கும் எது பிடிக்கும் என்று தெரியாதா?" என்று நினைத்துக் கொண்டாள்.

"குழம்பில் காரம் அதிகம்..இத்தனை காரம் சாப்பிட்டால் உடம்பு என்னதுக்கு ஆகும்?  என் அம்மா உப்பு, புளி, காரம் எல்லாம் சரியாக மிகவும் ருசியாக வைப்பாள்.. வேலை என்று நினைக்காமல் ஈடுபாட்டுடன் செய்தால் ருசி தானாக வரும்" என்று தன்னை குற்றம் சொல்லி அவளின் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை சாரதாவுக்கு...தன் மாமியார் மாதிரி சிடு சிடுவென்று சண்டை போட வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டாள்.

அன்று ஏனோ எழுந்து கொள்ளும் போதே தலையை வலித்தது...உடம்பும் சுடுவது போல் உணர்ந்தாள்...இன்னும் கொஞ்சம் நேரம் படுத்துக் கொள்ளலாம் என்று படுத்து தூங்கி போனவளை மாட்டுப்பெண்ணின் கோபமான குரல் எழுப்பியது.

"இத்தனை நேரம் தூங்கினால் என்னாவது? நாங்கள் வேலைக்கு போக வேண்டாமா? இன்னும் சமையல் செய்யவில்லை" 

"என்ன என்று தெரியவில்லை..தலை வலிக்கிறது..உடம்பும் சுடுகிறது..படுத்துக் கொண்டே இருக்கலாம் மாதிரி இருக்கிறது" 

"தலையை வலிக்கிறது என்று முன்னாடியே சொல்லக் கூடாதா?  சரி..சரி. நாங்கள் வெளியில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறோம்"  என்று சொல்லி விட்டு விருட்டென்று கிளம்பி போனார்கள்.

"டாக்டரிடம் போகலாமா...உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்..உங்களுக்கும் சேர்த்து ஹோட்டலில் இருந்து வாங்கிக் கொடுக்கிறேன்" என்று சொல்லவில்லையே  என்று மனதுக்குள் குமைந்தாள் சாரதா.

அவரிடம் சொல்லி ஹோட்டலில் இருந்து இட்லி வாங்கி சாப்பிட்டாள்...மறுபடியும் சற்று நேரம் தூங்கியதும் உடம்பு சற்று தேவலாம் என்று இருந்தது...மாலையில் அவரை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் செல்லலாம் என்று முடிவெடுத்தாள்.

ஆனால் மனது அமைதி இல்லாமல் இருந்தது..இத்தனை செய்தும் நன்றி இல்லாமல் இருக்கிறாளே என்று வேதனைப்பட்டாள்.

"அதிகம் அன்பு காட்டியது தவறோ?  தான் அவளின் அடிமை மாதிரி நடந்து கொண்டேனோ?  குட்ட குட்ட குனிந்தது அவளுக்கு இளக்காரமாக போய் விட்டதோ?"

பாம்பாக பிறந்தால் தனக்கு ஆபத்து வரும் போது சீறாமல் இருந்தால் அது பாம்பென யாரும் நினைக்க மாட்டார்...அதைக் கண்டு பயப்படவும் மாட்டார்.. நான் ஓரளவுக்கு என்னுடைய ஸ்தானத்தை அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்..தவறு என் மீதுதான்..அவள் மீது இல்லை...இனி ஒன்றாக இருக்க முடியாது...அவர்களிடம் தனி வீடு பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டியதுதான்....இது எங்கள் வீடு...யாருக்கும் தருவதாக இல்லை என்று நினைத்துக் கொண்டாள் சாரதா.

ஏனோ.தன்னுடைய மாமியாரின் நினைவு வந்து போனது சாரதாவுக்கு..

நன்றி: திரு.ஸ்ரீதர் கோபால், சுஜாதாவின் கடைசி பக்க ரசிகர் குழு, முகநூல்.

கருத்துகள் இல்லை: