கிராமத்துப் பக்கம் - ஓர் அறிமுகம்
கிராமத்துப் பக்கம் என்ற பெயரில் Youtube channel ஒன்று தொடங்கியுள்ளேன். அழிந்து கொண்டிருக்கும் நமது முன்னோர்கள் வளமாக வாழ்ந்த தடங்களில் ஒரு பயணம். முதலாவது நான் தேர்ந்தெடுத்த கிராமம் மலைப் பட்டி.
கோவில்பட்டியில் இருந்து கடலையூர் வழியாக முத்துளாபுரம் சாலையில் இருக்கிறது. இந்த ஊரை பற்றி தனியே நீளமாக எழுத வேண்டும். ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அங்கு மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகிறது.
இந்த பணிக்கு முக்கிய காரணமாக அமைந்த கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முதலில் நன்றி. அடுத்து ஓவியர் மாரீஸ்க்கு. அவர்தான் எடிட்டர் கமலை அறிமுகப் படுத்தினார். அவருக்கும் என் நன்றி.
இவர்களுக்கும் முன்னதாக எனது சிறு வயதிலிருந்து உடன் இயங்கும் நண்பன் குமாருக்கு பெரும் நன்றி. அவனில்லா விட்டால் இது நிகழ்ந்து இருக்காது. செல்போன் கேமராவில் படம்பிடித்து தந்தான். கேமராமேன், எடிட்டர் கமல், நான் தந்த குறைந்தபட்ச தொகையை கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை போல ஏற்றுக் கொண்ட தேவதை அவர். அடுத்தது சோ தர்மன் சார். அவரது கிராமம் சார்ந்த தீராத வேட்கை எனக்குள்ளும் புகுந்து கொண்டதாக உணர்கிறேன்.
அண்ணன் கோணங்கி அடிக்கடி சொல்வார் வாடா ரெண்டு பேரும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு போவோம். அப்படியே உச்சி வெயிலில் காட்டில் திரிவோம். உனக்கு வேண்டியது எடுத்துக்கோ. எனக்கு வேண்டியது நான் எடுத்துகரென் என்றார். பெருசா நிறைவேறவில்லை என்றாலும் ஒருமுறை குமாரபுரம் அழைத்துச் சென்றார். அவரிடம் எல்லாமும் யதேச்சையாக நிகழனும். அவருடைய சொந்தக்காரர் ஒருவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றோம். ஒரு இடத்தை காண்பித்து இங்க இருந்து இடை செவலுக்கு ஒரு ஒத்தயடி பாதை இருந்தது. கிராவும் நானும் போய் வந்திருப்பதாக சொன்னார். அந்த பாதை சிமைக் கருவேல மரங்களால் தூர்ந்து கிடந்தது.
கு.அழகிரிசாமி எழுத்தில் தவழ்ந்த அந்த ஊருக்கும் சென்றோம். பெரிய அதிர்ச்சி. புகம்பம் நிகழ்ந்தது போல மரங்கள் முளைத்து கிடக்கும் பழமையான வீடுகள். அவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கிறோம். கிராவின் பழைய நண்பர் ஒருவர் தனியே கட்டிலில் அமர்ந்திருந்தார் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். குமாரப்ரம் ரயில்வே ஸ்டேஷன் படம் பிடிக்கும்போது அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் நினைவில் வந்தார். அழகிரி சாமியின் ஆவிதான் தன்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பவரிடம் பேசி ஒருசில நிமிடங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
இந்த வீடியோவை பார்த்து முதலாவதாக கருத்து பகிர்ந்தவர் எழுத்தாளர் வண்ணதாசன். மிக நுட்பமாக இருந்தது அவர் சுட்டிக் காட்டிய குறைகள். அவரிடமிருந்து எதிர்பார்த்தது கிடைத்தது. அவருக்கு என் நன்றி.
முதலில் ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு அவசியமாக வேண்டியது தகுந்த ஒலிப்பதிவு கருவிகள். பொருளாதார நெருக்கடியால் வாங்க முடியவில்லை. அடுத்து கேமரா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய காட்சித் தொகுப்புகள் வேண்டும். அனுபவமும் சரியான கூட்டணியும் கிடைக்கும்போது மெருகேறும் என்று நம்புகிறேன்.
கோவில்பட்டி அருகாமை கரிசல் கிராம எழுத்தாளர்களின் கதைகள் தோன்றிய பகுதிகளில் ஒரு கதாபாத்திரமாக உலவியதில் எனக்கு பெரும் மனவெழுச்சி. இதன் நோக்கம் பார்த்துவிட்டு கடந்து போவதற்கு அல்ல. ஒவ்வொருவரும் இப்படி தேடிச் செல்ல வேண்டும். கிராம பண்பாட்டு விழுமியங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதுதான். நாமல்லாத பொதுவெளிக்கு நான் அதையே கூற விரும்புகிறேன்.
கிராம தற்சார்பு வாழ்வு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அங்கிருந்து வெளியேறாமல் நிலத்தை நேசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்ட அவர்களின் வாயிலாக அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த விழைகிறேன்.
தேவதச்சன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அப்போதும் எளிய நிலையில் இருந்தார்கள். ஆனால் சுய கெளரவமான , கம்பீரமான பண்பை இழக்கதிருந்தார்கள் என்றார். இப்போது அரசாங்கத்தின் ரேசன் பொருட்களை நம்பி, நீர் ஆதாரங்களை காவு வாங்கிய அரசாங்கத்திடம் இருந்தே மானியத்திற்கு கையேந்தும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள். மழையும் பொய்த்து போகிறது. மண்ணை, விதைகளை இழந்திருக்கிரார்கள்.
ஒன்றைத் தொட்டு மற்றொன்று என விரிவடைந்து கொண்டே சென்றது. எனக்கு அருகில் இருக்கும் இத்தனை ரகசியங்களை இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு எழுந்தது.
கிராம வாழ்கையில் அமைதி, தூய காற்று அனுபவிக்கும் வேளையில் இன்னும் அங்கு சாதிய பிரிவினைகள் மேலோங்கி இருந்தது வருத்தம் அளிக்கிறது. சில கிராமங்களில் இடை நிலைச் சாதியினர் தாழ்த்தப்பட்ட ஒருவரைக் கூட இன்னும் அனுமதிப்பதில்லை. இந்தப் பிரிவினை தான் நமது வீழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாகக் அதை விசமூற்றி வளர்ந்தது சாதிய தலைவர்கள்.
பெரும்பாலான கிராமங்களில் கிறிஸ்துவ மிஷினரிகளின் ஆதிக்கம் வேறு அவர்களுக்கு பொருளாதார வாழ்வுக்கு எவ்வித முன்னெடுப்பு செய்யாமல் வறுமையை அவர்களின் மதப் பிரசங்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கிராமத்து மனிதர்களுக்கு எல்லாம் விளங்கியிருக்கிறது. இயற்கை விவசாயம் விட்டு மண்ணை பாழ்படுத்தி கொண்டிருப்பது அவர்கள் அறிந்தது தான். எனவே அவர்களை குற்றம் சொல்ல எதுவும் இல்லை. வளரும் தலைமுறைக்குதான் நாம் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு தற்சார்பு வாழ்வின் மூலம் கார்பரேட் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள கற்றுத் தர வேண்டியிருக்கிறது.ஒரு நூறு பேர் ஒரு கிராமத்தில் ஒருமனதாக கூடினால் மகத்தான காரியங்களை நிறைவேற்றி விடலாம் .
இதுவரை பத்து கிராமங்கள் வரை ஆவணம் எடுத்துள்ளோம். தொடர்ந்து வாராவாரம் வெளியிடுவோம். இந்த பணியில் தொடர்ந்த எடுபட நண்பர்கள் ஆதரவைக் கோருகிறேன். வேகாரியாய் திரியும் என் போன்றோர் களுக்கு ஊக்கம் அளியுங்கள். மிக்க நன்றி.
https://youtu.be/OfEhn-_M3mc
வாழ்த்துக்கள் திரு.ஆகாசமூர்த்தி.
நன்றி : முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக