27 ஆக., 2020

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : தெ.பொ.மீ. அவர்கள்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்..

இவரைப் போல இன்னொரு மகன் எனக்கு கிடைப்பானா என தமிழே ஏங்குமளவிற்கு ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்று தன் பணிகளால் தமிழுக்கு பெருமையும் புகழையும் ஈட்டித் தந்தவர். பன்மொழிப் புலவர்,பல்கலை வித்தகர். சங்க இலக்கிய வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக படைத்தவர். தன் முப்பத்தி ஆறாம் வயதிலேயே பன்மொழிப் புலவர் எனும் பட்டம் ஈன்ற பெருமகனார் தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார்.

பிறப்பு: ஜனவரி 8, 1901

இறப்பு: ஆகஸ்ட் 27,1980

பெற்றோர்: மொழிப் புலமை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இன்தி, பிரெஞ்சு, ஜெர்மன்.

சிறப்புப் பெயர்: தெ.பா.மீ. பன்மொழிப் புலவர்

தொழில்: தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர்

கல்வி: பி.ஏ., பி.எல்., எம்.ஏ, எம்ஓஎல் 

இலக்கிய வகை கருப்பொருட்கள்: தமிழிலக்கியம் வரலாறு மொழியியல்

விருதுகள்: கலைமாமணி, பத்மபூசன்

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தமிழகம் சென்னை சிந்தாரிப்பேட்டையில் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 8 ம் நாள் பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார்.

வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல் முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத் தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார். எதைக் கற்றாலும் அதில் முடி முதல் ஆழம் வரை கற்று அதில் புலமையும் வியத்தகு ஆற்றலும் அடையப் பெற்ற மீனாட்சியாரின் அறிவும் புலமையும் வேறொருவர் எளிதில் நெருங்க இயலாதது. அதன் காரணமாகவே பலவேறு துறைகளின் தலைமைப் பதவிகள் அவரைத் தேடி வந்து அரியணையிட்டு அமரச் சொல்லி கெஞ்சிக் கொண்டன.

எல்லாத் துறைதோறும் தலைவர் ஆவது என்பது எத்தனை சிரமம் மிக்கது என்பதை ஏதெனும் ஒருதுறையில் தலைவர் ஆகுபவரால் மட்டுமே உணர முடியும். அவர் எண்ணற்ற மொழிகளைக் கற்றிருந்தாலும் ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட மாறாத ஆர்வமும் மாசற்ற காதலுமே இதற்கு காரணம்.

1920ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., 1922ல் பி.எல். பட்டம், 1923ல் எம்.ஏ. பட்டம், பின் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் தொடர்ச்சியான முதுகலைப் பட்டம் என தன் கல்விப் பயணத்தை சாதனைப் பயணமாக மேற்கொண்டவர்.

1920: பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்

1922: பி.எல். பட்டம் பெற்றார்.

1923: எம்.ஏ. பட்டம் பெற்று, வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1923: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

1924: சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். 

1934: தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார்.

1941: நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

1944: இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார்.

1958: 1958: மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

1961: இவரது மொழிப்புலமையால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

1966: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.

1973,74: திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார்.

1974: ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.

விருதுகள்: இவருக்குத் தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" என்றும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" என்றும் விருதுகளும், தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் சார்பில் பத்மபூசன் விருதையும் அளித்துச் சிறப்பித்தனர்...

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் “கூரியர்” என்னும் இதழ்க் குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை. மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளர வைத்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.

தமிழிலக்கிலக்கியம் குறித்து இவர் எழுதிய பல ஆய்வு நூல்கள் இன்றும் என்றும் தமிழுக்கு அழியா சொத்து ஆகும். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை “நாடகக் காப்பியம்” என்றும் “குடிமக்கள் காப்பியம்” என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.

ஆர்வியின் குறிப்பு: பத்மபூஷண் விருது பெற்றவர். ஒரு காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக இருந்த (பதிபக்தி, பம்பாய் மெயில், கதரின் வெற்றி மற்றும் பல நாடகங்களை எழுதியவர்) தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் இவரது அண்ணா.

பேராசிரியர்  தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு சீவக சிந்தாமணி பதிப்பு,  அவரது ஆராய்ச்சிக்காக  தேவைப்பட்டது.  பல நூலகங்களில் தேடினார்.  உ.வே. சாமிநாதய்யர்  1883-ம் ஆண்டில் பதிப்பித்தது.  எனவே அது கிடைக்கவில்லை.  பேராசிரியர் வையாபுரி பிள்ளையிடம் சென்று கேட்டார். அது அவரிடமும் இல்லை.  ஆனால்  "உ.வே.சாமிநாதையரிடம் உள்ளது.  கேட்டுப் பாருங்கள்.  ஆனால்  கிடைப்பது சிரமம்.." என்று அவர் சொன்னார்.

பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் திருவல்லிக்கேணியில் இருந்த உ.வே சாமிநாத அய்யர் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.   அவரிடம்,  தன்  தேவையைச் சொன்னார்.  அதற்கு ஐயர், "நான்  சீவக சிந்தாமணியை மறுபதிப்பு போட ஏற்பாடு செய்து வருகிறேன்.  அதற்கு பதிப்பில் குறிப்புகள் எழுதி உள்ளேன்.  அது மறுபதிப்பு நூலுக்குத்  தேவைப்படுகிறது.  மூன்று மாதத்திற்குள் புதுப்பதிப்பு வந்து விடும்" என்றார்.

நூல் இல்லை  என்பது தெளிவாகிவிட்டது.  பேராசிரியர் தெ.பொ.மீ.  விடை பெற்றுக்  கொண்டு புறப்படத் தயாரானார்.  அப்போது, "தம்பி, பெயர் என்ன?" என்று கேட்டார் ஐயர்.

"மீனாட்சி சுந்தரம்"                                                                        

"என் ஆசிரியர் பெயரைக் கொண்டு இருக்கிறீர்கள்.  உங்களுக்கு இல்லை என்று எப்படிச் சொல்வது?" என்று உள்ளே சென்று தான்  குறிப்புகள் எழுதி  வைத்திருந்த சீவக சிந்தாமணி முதல் பதிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இது ஆசிரியர்--மாணவர் என்ற அடிப்படையிலான உறவின் அடையாளம்.

--  சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சா. கந்தசாமி எழுத்தோவியங்கள் என்ற நூலிலிருந்து.

நன்றி :

திரு சா கந்தசாமி,  சந்தியா பதிப்பகம் மற்றும்
 

கருத்துகள் இல்லை: