14 ஆக., 2020

சிறுகதை நேரம் " கோமகளின், "பால்மணம்"

 "பால் மனம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் "கோமகள்" அவர்கள். 

இவரின் இயற்பெயர் ராஜலட்சுமி. திருமணத்திற்குப் பிறகு எழுதத் தொடங்கிய இவர் எண்ணற்ற சிறுகதைகள் புதினங்கள் என எழுதியுள்ளார். நிறைய பரிசுகள் வாங்கியுள்ளார் பாரம்பரிய கருத்துக்களை எதிர்க்காதவர் என்ற பெயர் கொண்ட கொண்டவர்.

 ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த குழந்தை ஆரம்பத்தில்,தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து கொண்டாடப்படுகிறது. அதன் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியப்படுத்துகிறது, சந்தோஷப்படுத்துகிறது. தெய்வமே நேரில் வந்து நமக்கு அருள் பாலித்த தாக கொண்டாடப்படும் குழந்தை பெற்றோரின் சுதாகரிப்பால் அவர்களால்....  அவர்களுக்கானவளாக வளர்த்தெடுக்கப்படுகிறாள்.

" வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் சொல்லுக்கு இலக்கணமாய் தன் செயல்களால் கிருஷ்ணா பெயருக்கேற்றாற் போல் தெய்வக் குழந்தையாகவே அவளின் சித்தப்பாவிற்கு தெரிகிறாள். கால ஓட்டத்தில் சமுதாயத்தின் ஒரு அங்கமாக வேண்டிய கிருஷ்ணாவை பெற்றோர் சுயநல பாலூட்டி வளர்ப்பதில் அவள் பால் மனம் மாறி பாழ் மனம் கொள்கிறாள்.

 இன்றைய நவீன  கதைகளை ஒப்பிடும் பட்சத்தில் வெகு எளிய அமைதியான ஓட்டத்தை கொண்ட கதை இது. கதையின் காட்சிகளுக்குப் பிறகு ஆசிரியர் தன் கருத்துக்களை கதையோட்டத்தில் முன்வைத்து நம் உணர்வுகளை கதையின் பாதையில் செலுத்தி விடுகிறார்.வாசகர்கள் யோசிக்க வேண்டிய வேலை இல்லாததால் கதையின் ஊடாக கிருஷ்ணாவாகவும் "மன்னி"யாகவும் தங்கள் பாத்திரங்களை மாற்றி மாற்றி பயணிகிறார்கள்.

 எளிய கதை எனினும் இக்கதை என்னுள் சில  கேள்விகளை  எழுப்பிச் செல்கிறது.

1.  இவ்வுலகில் வாழ தகுதி பெறுவது என்பது தான் நாம் வளர்த்துக் கொள்ளும் பண்பா?

2. கிருஷ்ணாவின் இரக்க குணத்திற்காக கொண்டாடியஅவளை அவள் பெற்றோர் மடைமாற்ற அவர்களை நிர்ப்பந்தித்தது எது?

3. எல்லா காரியங்களுக்கும் உலகை பழிக்கும் நமக்கு அந்த உலகம் நம்மை அடக்கியது தான் என்பதை உணரத் தெரியாதது ஏன்?

 இக்கதை பேசும் நிஜங்கள்:

1. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையிடம் உள்ள நல்ல உணர்ச்சிகளை சலவை செய்து அவர்களின் மனதை அழுக்கடையச்செய்கிறோம். பிறகு அந்த குற்ற உணர்ச்சியில் மரணம் வரை "குழந்தையாகவே இருந்திருக்கலாம்" என்று ஏங்கும் விந்தை மனம் கொண்ட விலங்கு மனிதன் மட்டும்தான்.

 இக்கதையில் சில நுண்ணரசியல் களும் இல்லாமலில்லை.

 குழந்தையின் தாய் தான் சமர்த்து போதாது என்று அக்குழந்தையை திசை திருப்புவதாக இருக்கிறது. காரணம் தாய் வளர்ப்பு சரியில்லை என்பதே வரலாறு குத்தும் முத்திரை. தெய்வ உருவாய்கொண்டாடும் அவளே(தாய்) இதைச் செய்யத் துணிவது பெண்ணுக்கான சமுதாய நிர்ப்பந்தமே.

|| இனி கிருஷ்ணா தனியாக பஸ்ஸில் பள்ளிக்கூடம் போய் வருவாள்//

 என்ற வரி இக்காலகட்டத்தில் நமக்கு உணர்த்தும் பொருள் அவள் தன்னை காத்துக் கொள்வாள் என்பது தானே? குழந்தையின் இரக்க குணத்தை ரசிக்கும் சித்தப்பாவும் பெற்றோர் அவளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கையில் எதிர்ப்பை பதிவு செய்யவே இல்லை. ஏனெனில் அது சமுதாயத்தின் தேவை என்பது அவருக்கும் புரிந்தே இருக்கிறது. "கிருஷ்ணா"க்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"  என்பது  தோள் மாற்றி கொடுக்கப்பட்டதால் பால் மனம் கொண்ட பாலகர்கள் பாறை மனம் கொண்டு ஈரம் தொலைத்த தரிசாகிறார்கள்.


நன்றி : Ms.கவிதா சுரேஷ், வாசகசாலை மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: