15 செப்., 2020

பெற்றோர்கள் கவனத்திற்கு

         I_am_sorry_I_am_tired*

*இது அனைத்து பெற்றோர்களுக்கும் கொடுக்கப்பட்ட செருப்படி*

மேலே சொல்லப்பட்ட வாக்கியம் ஒரு குழந்தையின் இயலாமை அல்ல. நாம் வாழும் இந்த ஒழுங்கற்ற சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி. 

*RIP_Education_System*

நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற அரசியல்கள் ஒருபுறம் இருக்கட்டும். 

நீட் தேர்விற்கு ஏன் இத்தனை குழந்தைகள் பலியாகின்றன?

மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு இல்லையா?

இருக்கின்றது என்றால் அங்கே ஏன் இத்தனை தற்கொலைகள் நடைபெறவில்லை?

இல்லை அங்கும் குழந்தைகள் வெவ்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துக் கொள்கின்றன என்றால்...

நாம் குழந்தைகளிடம் எதை விதைத்து கொண்டிருக்கிறோம்?

மனோ தைரியத்தை வளர்க்க இயலாத கல்வியால் என்ன பயன்?

ஒரு குழந்தை பிறக்கும்போதே அவர்கள் பெரியாளாக வர வேண்டும் என்ற பெற்றவர்கள் மற்றும் அவர்கள் சுற்றத்தாரின் எதிர்பார்ப்பு அவர்களிடம் திணிக்கப்படுகின்றதா?

ஏன் ஒரு குழந்தை வெகு சாதாரணமானவாக வாழ்ந்து எளிமையாக வாழ்ந்து சந்தோஷமாக வாழ்ந்து முடிக்கட்டுமே. என்னவாகிவிட போகிறது.

பிறந்து மூன்று வயது ஆனவுடனே ப்ரீ.கே.ஜியில் சேர்க்கிறோம். அதிலிருந்து படி படி படி என்ற எந்நேரமும் கல்வியை சார்ந்தே குழந்தைகளை இயங்க செய்கிறோம். 

குறிக்கோள், லட்சியம், வெற்றி என்று பிள்ளைகளை ஒரு ரேஸ் குதிரையை பந்தயம் கட்டி ஓட செய்வதுப் போல ஓட செய்கின்றோம். 

என் புள்ளை பெரிய டாக்டர், என் புள்ளை வெளிநாட்டுல இருக்கான். என் பிள்ளை பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான். இப்படி பெரிய பெரிய பெரிய என்று பெரிதாக இருப்பதை பெருமை பேசிக் கொள்ளவே அவர்களை ஓடப் பழக்குகிறோம்.

என்றாவது உங்கள் பிள்ளைகளை தோற்கவிட்டு தோல்வி பெரிதல்ல மீள கூடிய ஒன்று தான் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? வாழ்க்கையை வாழ எதுவுமே இல்லாமல் போனாலும் வாழ்ந்திட முடியும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

எந்நேரமும் அக்கம்பக்கத்தாரோடு ஒப்பிட்டு பார்த்து பார்த்து அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மன அழுத்தம் ஒன்றா இரண்டா? 

இந்த சமூகமும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், சொந்த பந்தங்களும்
பிள்ளைகள் மீது திணிக்கும் எதிர்பார்ப்புகளும், புகழ் பேதங்களும் மருத்துவக் கனவுகள் மட்டுமல்ல வாழ்வில் எதில் தோல்வி அடைகின்ற போதும் அவமானம் தாங்காமல், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு பணம், புகழ், பேர் சம்பாதிப்பதை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறீர்கள். மாறாக உயிரின் மகத்துவத்தை சொல்லிக் கொடுங்கள். எதுவுமே இல்லாது போனாலும் வாழ கற்றுக் கொடுங்கள். ஒன்று இல்லாது போனாலும் மற்றொரு நல்வாழ்வு  வாழ காத்திருப்பதை உணர்த்துங்கள். 

அவர்கள் டாக்டராக விட்டால் என்ன  கம்பவுண்டராக ஆனால் கூட அவர்களுக்காக உங்கள் அன்பு என்றும் உண்டென்பதை உணர்த்துங்கள். ஒரு குழந்தை தோற்றே போனாலும் அது தோல்வி அல்ல வேறு ஏதோ நல்ல விஷயம் செய்ய காத்திருப்பதற்கான வழி என்று உணர்த்துங்கள். 

குதிரை குறிக்கோளை மட்டுமே நோக்கி ஓட செய்வது போல் வாழ்க்கையின் லட்சியத்தை மட்டுமே நோக்கி ஓட செய்வதற்கு உங்கள் குழந்தைகள் ஒன்றும் குதிரைகள் அல்ல. உயிரும் உணர்வும் உள்ளவர்கள். 

லட்சியத்தின் உச்சத்தை தொட்டவர்கள் கூட வாழ்க்கையை வாழ தெரியாமல் ஸ்தம்பித்து வாழ்வில் தோற்று போகிறார்கள். 

உங்கள் குழந்தைகளுக்கு வாழ கற்றுக் கொடுங்கள். தன்னம்பிக்கையை விதையுங்கள். இந்த உலகமே அழிந்து ஒன்றுமே இல்லாமல் கற்காலத்திற்கு இட்டு சென்றாலும் உயிர் வாழ்ந்திட உணவும், காற்றும், நீரும் மட்டும் கூட போதும். பிழைத்து புது வாழ்வு அமைத்திட இயலும் என்று சொல்லி வளருங்கள். 

நீட் தேர்வு வேண்டும் அல்லது வேண்டாம் என்ற போராட்டம் உங்கள் குழந்தைகளின் மனநிலையை குழப்பிவிடும் அளவிற்கு செல்லாமல், ஜெயித்தாலும் தோற்றாலும் பரவாயில்லை இதில் ஜெயிக்காவிடினும் வேறு ஏதோ பெரும் சாதனை செய்ய காத்திருக்கிறாய் என்று மனதை மடை மாற்றுங்கள்.

இந்த சமூகம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்களை சுற்றி , படிக்கும் வயதில் பிள்ளைகள் இருந்தாலோ சாதிக்கும் வயதில் இருந்தாலோ உங்கள் கேள்விகளுக்கும், அறிவுரைகளுக்கும் உங்கள் வன்மத்திற்கும் அவர்களை பலியாக்காதீர்கள். 

ஒரு குழந்தையின் இறப்பிற்கு அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர், சொந்த பந்தங்கள் மட்டுமல்ல அவர்களை சுற்றி உள்ள சமூகமும், வாழ்வியலை கற்றுக் கொடுக்காத இந்த கல்விமுறைகளும் தான் காரணம்.

*இந்தப் பெண்ணின் இழப்பிற்கு நீயும் காரணம் நானும் காரணம்*

நன்றி :

திருமதி சுதா ஸ்ரீதரன்,  குழந்தை வளர்ப்பு,  முகநூல் குழு 

கருத்துகள் இல்லை: