10 செப்., 2020

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலக்கிழார்

தமிழிற்காகவே உழைத்து உழைத்து மறைந்துபோன சான்றோர் மிகப் பலர். அவர்கள் உழைப்பினால் இன்று தமிழ் வாழ்ந்து கொண்டுள்ளது. அப்படிப்பட்டவர்களில் மங்கலங்கிழார் அவர்களுக்கு ஓர் மறுக்கப்படமுடியாத இடமுண்டு. தமிழ்நாட்டின் வட எல்லைப்போராட்ட வீரர் மங்கலங்கிழார்.

 மங்கலங்கிழார் (1895 - ஆகஸ்ட் 31, 1953) தமிழகத்தின் வடபகுதியில் பிறந்த தமிழறிஞர். "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படுபவர். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது.

வாழ்க்கைக் குறிப்பு 

தமிழ்நாடு வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். இயற்பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.

சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார். இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

இலக்கியப் பங்களிப்பு

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.

"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.

இதற்கிடையில், 1922-இல்  தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும்  தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை.
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும்,  இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பினார். அதன் பொருட்டு “இலக்கணப்புலி” என்று அறியப்பட்ட தமிழறிஞர்  கா.ரா.கோவிந்த சாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்தார்.  இவரோடு  தமிழறிஞர் சிந்தாமணி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை என்பவரும் இணைந்து படித்து  வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன்நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.

வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.

ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941 ஆம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு. வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.

ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.

மங்கலங்கிழார் தனக்கு கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியங்குளத்தில் இரவுநேரப்பள்ளியைத் தொடங்கி தமிழ் கற்பிக்கும் பணியில்  ஈடுபட்டார்.  அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல்  வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத் தோற்றம் மாறினாலும் உளத் தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி  அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள  தமிழர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட “அறநெறித் தமிழ்ச்சங்கம்” என்னும் அமைப்பை நிறுவினார்.

1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார் குப்பம் , மின்னல், நரசிங்க புரம், கீழ்ப்புத்தூர், மேல் புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர் பேட்டை, அத்தி மாஞ்சேரிப் பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காய்ப் பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு கிளை பரப்பியது.

மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என அழைக்கப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும்  மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர்.

அறநெறிக் கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் “மாணவர் மாநாடு” பெயரில் விழா நடத்தப்பட்டது.  அந்நிகழ்வில்  தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர்.

அது போல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும்  “திருநாள்” பெயரில் விழா கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வுகளில் ‘தமிழ்த்தென்றல்” திரு.வி.க., ச.சச்சிதானந்தம், ” சைவப் பெரியார்” சச்சிதானந்தம் , தமிழ் அகராதி தந்த பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா.இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஶ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு கூட்டங்களில்  பங்கேற்ற திரு.வி.க. மங்கலங் கிழாரை “வித்தியானந்தர்” என்றே விளிப்பது வழக்கம்.

பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவானார்கள்.  பலநூறு மாணவர்கள்  தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளி என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.

மங்கலங் கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், ‘தமிழ்மண் மீட்புப் பணி’ மறு கண்ணாகும்.
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

எழுதிய நூல்கள்

தவளமலைச் சுரங்கம்
தமிழ்ப் பொழில்
சிறுவர் சிறுகதைகள் வடவெல்லை தமிழ்நாடும் வடவெல்லையும்
சகலகலாவல்லிமாலை - விளக்க உரைநளவெண்பா - விளக்க உரைஇலக்கண விளக்கம்இலக்கண வினா - விடைநன்னூல் உரை மற்றும்தனிக் கட்டுரைகள்

"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.

தமிழ்மண் மீட்புப் போராட்டத்தின் போது பின்வரும் முழக்கங்களை தானே கைப்பட எழுதி வெளியிட்டார். அது வருமாறு:
1. வேங்கடத்தை விட மாட்டோம். 2. சென்னை ராஜ்ஜியத்தின் வடவெல்லை திருப்பதி மலை 3. நகரி பிர்க்காவை சென்னையோடு சேர். 4. புத்தூர் பிர்க்காவை சென்னையோடு சேர் . 5. சித்தூர் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்க்காதே! 6. முன்னே எல்லையைப் பிரி- பின்னே நாட்டைப் பிரி 7. நமது ராஜ்ஜியம் சென்னை ராஜ்ஜியம் 8. நமது தலைநகரம்- சென்னை நகரம் 9. சென்னையோடு சேர்ந்து வாழ்வோம் 10. சென்னை நகரம் சமீபமானது 11. விஜயவாடா- வெகுதூரம் 12. ஐதராபாத்து- அதிக தூரம் 13. சென்னையை விட்டால் – பின்னால் கஷ்டம்.

1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து  ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் மங்கலங்கிழார் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார். 25.6.1953இல்  144  தடையை மீறி மறியல் நடத்தியதால் மங்கலங்கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.

வடக்கெல்லை பாதுகாப்புக் குழு கூட்டம் மீண்டும்  10.7.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கு பாதுகாப்பு வழங்கங் கோரி பிரதமர் நேருவை சந்திக்க முடிவெடுத்தது. இக் கூட்டத்தில் ம.பொ.சி., தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், டி.எம்.திருமலைப் பிள்ளை, வேலூர் அண்ணல் தங்கோ ஆகியோரோடு மங்கலங்கிழாரும் பங்கேற்றார். இதுவே மங்கலங்கிழார் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வாகும்.

பொதட்டூரில் தமிழாசிரிரியர் பயிற்சிப் பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில்,  மங்கலங்கிழாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால்  பள்ளிப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.

நன்றி :

கருத்துகள் இல்லை: