ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல
நன்றி :திருவாரூர் சரவணா
------------------------------------------------------
ரா.கி. ரங்கராஜன் எழுதிய "எப்படி கதை எழுதுவது" என்ற புத்தகத்தின் இறுதியில் எழுத்தாளர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் சுஜாதாவின் சில பத்திகளும் இடம்பெற்றிருந்தன.
அவர் கதைகள், நாவல்கள், திரைப்பட வசனங்கள் போலவே நேரடியாக விஷயங்களில்தான் ஆரம்பித்திருந்தார்.
தப்பான பத்திரிகைக்கு எழுதாதீர்கள். "துருவனும் குகனும்'' என்ற 'ஞான பூமி' க்கு அனுப்ப வேண்டியதை 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.
தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வழி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது. இரவு 7 மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்கு கடிதம் எழுதக் காத்திருக்கும். (இப்போது என்றா பம்பாய் எப்போவோ மும்பை என்றாகி விட்டது என்ற வாக்கியத்தை சேர்த்திருப்பார்)
அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது உங்கள் கதை கருந்தட்டாங்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம், உங்கள் சொந்த ஊர், வீதி.
சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள், கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். "உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்' என்று சொல்வதை விட, "துப்பினான்' என்பதே மேல்.
ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர. உதாரணமாக "அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று, அந்தப் பரிணமிப்பில்' இத்யாதிக்கு பதிலாக 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து, அந்தப் பரிணமிப்பில்' பெட்டர். அதைவிட பெட்டர், பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது.
தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ, செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஒரு எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிகை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.
நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்டைப் பாதியாகக் குறைத்து அதே கதையைச் சொல்ல முடியுமா, பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதில் "போனான்'' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கிறது. அதற்காக 'னான்' என்று அற்பதமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதி வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிகைக்கு அனுப்பச் சௌகர்யம்.
பத்திரிகை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.
கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள், என்றாவது ஒரு நாள் தெரியாத்தனமாய்ப் போட்டு விடுவார்கள். எல்லாரிடமும் ஆம், எல்லாரிடமும் நல்ல கதை இருக்கிறது.
தமிழ் சினிமா வெற்றிப் பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக்கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறைய பார்க்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். குட் லக்.
- இப்படி முடிந்திருந்தது சுஜாதாவின் வார்த்தைகள்.
**********************
நன்றி :
திருவாரூர் சரவணா
மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக