Reading Marathon 2020 - 48/25
RM10
கெடை காடு
ஆசிரியர்-ஏக்நாத்
மேற்குத் தொடர்ச்சிமலையின் அடுத்துள்ள மலைகிராமங்களிலிருந்து மேய்ச்சலுக்காக மாடுகளை கெடை காட்டிற்கு ஓட்டிச்செல்லும் மாடு மேய்ப்பவர்களின் கதை. ஆசிரியரின் பார்வையில் காடு அற்புதமாய் விரிகிறது.அந்தக் குளிரும் பசுமையும் நாமும் அங்கிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.
நண்பர்களுடன் மேய்ச்சலுக்குச் செல்லும் உச்சிமாகாளி என்ற பாத்திரத்தின் மூலமே கதை சொல்லப்படுகிறது.கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் காட்டில் நடப்பவையுமாக இரண்டும் கலந்தே கதை நகர்கிறது.காட்டைப் பற்றிப் படிப்பது எப்போதும் சுவாரசியம் நிறைந்ததுதான்.இதிலும் ஆசிரியர் வர்ணிக்கும் காடு அப்படியே கண்முன் விரிகிறது.தேன் எடுப்பதைக் குறித்துச் சொல்லும்போது நாம் அறிந்திராத அந்தக் கடினம் நிறைந்த வேலை,உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் அவர்களின் மேல் பரிதாபத்தை உண்டாக்கும்.
காட்டில் பரண் அமைத்துத் தங்குவது,சமையல்,இரவுக் காவல்,அனைத்தும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.மிருகங்கள் மாடுகளைத் தாக்கி காயப்படுத்தினால் இவர்கள் செய்யும் வைத்தியம் கொஞ்சம் கொடுமை நிறைந்ததாய் இருந்தாலும் மாடுகளின் நன்மைக்காக எனும்போது பெரிதாகத் தோன்றுவதில்லை.காட்டில் அதிகாரிகள் தரும் தொந்தரவு,கையூட்டு பெறுவது பற்றியும் சொல்கிறது நாவல்.
கிராமத்தில் நடக்கும் சாதிய முறைகள்,சங்கத் தலைவர் தரும் தண்டனைகள்,சாராயம் காய்ச்சுவதில் நடக்கும் சண்டை,கொலைமுயற்சி என அனைத்துமே கதையில் இடையே வந்துபோகிறது.மேய்ச்சலுக்கு இவர்கள் புறப்படும்போது கிராம மக்கள் கொடுக்கும் சன்மானங்கள்,பத்திரமாகத் திரும்புவதற்கு செய்யப்படும் பிராத்தனை,காட்டுக்குள் யார் என்று தெரியாவிட்டாலும்கூட செய்து கொள்ளும் பரஸ்பர உதவிகள் அனைத்துமே நெகிழ்வானவை.வட்டாரமொழியில், இயல்பான பாத்திரப் படைப்போடு சலிப்பில்லாத நடையில் எழுதப்பட்டிருக்கிறது.அவசியம் வாசிக்கலாம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக