1 ஏப்., 2026

மேன்மக்கள்: அமரர் திகசி

தி.க.சி. பிறந்த தினம்: மார்ச் 30
.........................
*தி.க.சி....*
*திருப்பூர் கிருஷ்ணன்.*
.........................
  *பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து எழுத்தாளராகவும் திகழ்பவர்கள், தாங்கள் எழுதுவதோடு மற்றவர்கள் எழுத்து வெளிவரவும் காரணமாக இருக்கிறார்கள். 

    எனவே இத்தகையவர்களுக்கு நாம் கூடுதல் மரியாதை தரவேண்டியது அவசியம். 

  மணிக்கொடி பி.எஸ். ராமையா, எழுத்து சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, கணையாழி கி. கஸ்தூரிரங்கன், பிரசண்ட விகடன் நாரண துரைக்கண்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் அத்தகைய கூடுதல் மரியாதையைப் பெறத் தகுதியுள்ளவர்கள். 

   நாரண துரைக்கண்ணன், நா.பா,வின் முதல் சிறுகதையையும் லட்சுமியின் முதல் சிறுகதையையும் தாம் நடத்திய பத்திரிகையான பிரசண்ட விகடனில் வெளியிட்டவர். 

   அவரால் இனங்காணப் பட்டதால்தான் நா.பா., லட்சுமி என்ற இரு நட்சத்திரங்கள் தமிழின் தற்கால இலக்கியத்திற்குக் கிடைத்தார்கள். 

   1942 இல், தி.க.சி.யின் முதல் சிறுகதையை வெளியிட்டதும் பிரசண்ட விகடன்தான். `வண்டிக்காரன்` என்பது கதையின் தலைப்பு.   
 
 தி.க.சி. 1965 - 72 ஆகிய காலகட்டத்தில் தாமரை இதழின் பொறுப்பாசிரியராக இயங்கினார். 

   அப்போது அவரால் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கியவர்கள்தான் பூமணி, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், சி.ஆர். ரவீந்திரன், கந்தர்வன், நா.காமராசன் போன்ற எழுத்தாளர்கள். 

 என்னுடைய `நியாயங்கள் மாறுபடும்` என்ற முதல் சிறுகதையைத் தாமரையில் வெளியிட்டவர் தி.க.சி. தான். 

   அப்போது நான் திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவன். அந்தக் கதை தாமரையில் பிரசுரமான விவரம் முதலில் எனக்குத் தெரியாது. 

அந்தக் கதையை வகுப்பில் முழுமையாகப் படித்துக் காட்டி என்னை ஊக்குவித்தவர் பொதுவுடைமைவாதியும் என்மேல் மிகுந்த அன்பு கொண்டவரும் இப்போது கோவையில் வாழ்ந்து வருபவருமான என் பேராசிரியர் திரு முப்பால்மணி அவர்கள்.
 
  பத்திரிகை மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது ஒரு வகை. பத்திரிகை இல்லாமலேயே எண்ணற்ற கடிதங்கள் மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்பது இன்னொரு வகை. 

   தி.க.சி., வல்லிக்கண்ணனுக்கு முன்னால், தமிழுலகம் காணாத புதுமை அந்த வகை. 

   தற்கால இலக்கிய வரலாற்றிலேயே தி.க.சி.க்கும் வல்லிக்கண்ணனுக்கும் இணையாக எழுத்தாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதியவர்கள் வேறு யாருமில்லை. 

   தமிழகமெங்கும் எந்தப் பட்டி தொட்டிக்குச் சென்றாலும் வல்லிக்கண்ணனையும் தி.க.சி.யையும் அவர்களின் கடிதங்கள் பெற்றதால் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்பவர்கள் ஏராளமானோர் இன்னமும் இருக்கிறார்கள். 

  இப்படிப் பலன் கருதாது கடிதங்கள் எழுதுவது என்பது ஒருவகையான தியாக வேள்வி. தி.க.சி., வ.க. இருவரது நேரமும் உழைப்பும் இந்த ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுவதற்கு எத்தனை செலவிடப் பட்டிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலும் மலைப்பேற்படும். 

   ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதுவதை ஒரு முக்கியக் கடமையாகவும் பணியாகவும் கொண்டு கடிதங்கள் எழுதியவர்கள் அவர்கள். 

   அவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு, ஓயாமல் ஊறிக் கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களின் உற்சாக ஊற்று வற்றி விட்டது. 

  இவர்களால் கடிதங்கள் பெற்றவர்களில் பலரும் முதல் தலைமுறைப் படிப்பாளிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பாரம்பரிய ரீதியாக இலக்கியம் அறியாதவர்கள் கடிதம் பெற்றவர்கள். 

   அவர்களிடம் நல்லிலக்கியம் என்றால் என்ன என்ற தெளிவை வகுத்துக் கொடுத்ததில் வ.க., தி.க.சி.யின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

  வ.க.வைப் போல் தி.க.சி., படைப்பிலக்கியத் துறையில் பெரிய அளவில் ஈடுபட்டவர் அல்ல. வ.க. சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்ட படைப்பிலக்கியங்கள் பலவற்றையும் படைத்தார்.

   ஆனால் அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதியதால் அவரது படைப்பிலக்கிய முகம் பரவலாக அறிமுகம் ஆகாமல் போய்விட்டது. 

   வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை ஆசிரியர் அல்ல என்கிறார் க.நா.சு. அது அவர் கருத்து. ஆனால் வ.க.வின் சில சிறுகதைகளைப் படிக்கும்போது அவரைத் தமிழ்ச் சிறுகதைத் துறையிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணித்து விட இயலும் என்று தோன்றவில்லை. 

   நான் தினமணிகதிரில் துணையாசிரியனாகப் பணிபுரிந்தபோது என் வேண்டுகோளின் பேரில் வ.க. கதிரில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை இன்னும் என் மனத்தில் நிற்கின்றன. 

  தி.க.சி. விஷயம் அப்படியல்ல. அவர் படைப்பிலக்கியமாகக் கொஞ்சம் படைத்திருந்தாலும் அவரைப் படைப்பிலக்கியவாதி என்று சொல்ல இயலாது. 

   `வசந்த காலத்திலே, போர்வீரன் காதல், சீனத்துப் பாடகன்` ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் கூட தி.க.சி.யின் பங்களிப்புத்தான். 

  என்றாலும் இவற்றையெல்லாம் மீறி ஏராளமான விமர்சனங்களையும் முக்கியமாக அறிமுகக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். 

  `தி.க.சி.யின் திறனாய்வுகள், விமர்சனத் தமிழ், விமர்சனங்கள் பேட்டிகள் மதிப்புரைகள், மனக்குகை ஓவியங்கள், தமிழில் விமர்சனத் துறை` என்றிப்படி வெளிவந்திருக்கும் அவரது பல நூல்கள் கட்டுரை நூல்கள்தான். 

   (எழுத்தாளர் எஸ். ராஜகுமாரன் எடுத்த ஆவணப் படம் ஒன்றும் அவரைப் பற்றி வந்திருக்கிறது.) 
 
  நிறைய அறிமுகக் கட்டுரைகளை எழுதியவர் தி.க.சி. அப்படி அறிமுகக் கட்டுரைகளை எழுதி, நல்லிலக்கியத்தையும் நல்ல எழுத்தாளர்களையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் மிக முக்கியமான ஓர் இலக்கியப் பணிதான். 

    ஒருவரின் இலக்கிய ஆளுமையைக் கணிக்கிறபோது அவரின் முழுமையான இலக்கியப் பங்களிப்பு என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு அவரின் உழைப்பு எந்த அளவு பங்காற்றியிருக்கிறது என்பதைக் கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும். 

  அப்படிப் பார்த்தால் எண்ணற்ற எழுத்தாளர்களைத் தம் எழுத்தாலும் தொடர்ந்த உரையாடல்களாலும் ஊக்குவித்தவர் என்ற வகையில் தி.க.சி.க்கு இணையானவர்களாகத் தமிழ் உலகில் இன்று யாரையும் குறிப்பிட இயலவில்லை. 

   தீபம் நா. பார்த்தசாரதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். தீபம் இலக்கிய இதழோடு பல்லாண்டு காலம் நட்புறவு கொண்டிருந்தவர். 

   ஒருமுறை தி.க.சி காலில் அடிபட்டு சென்னை ஆதம்பாக்கத்தில் அவர் புதல்வர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரை நலம் விசாரிப்பதற்காக நானும் நா.பா.வும் மின்சார ரயிலில் ஆதம்பாக்கம் சென்றோம். 

  அன்பு மயமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார் தி.க.சி. பிறகு மின்சார ரயிலில் நா.பா.வின் வீடிருந்த மாம்பலத்திற்குத் திரும்பிவந்தோம். அப்போது நா.பா. என்னிடம் சொன்னார்: 

  `அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனி எனக்குக் கிடைத்தால், அதியமான் அவ்வைக்குக் கொடுத்த மாதிரி நான் எனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தி.க.சி.க்குக் கொடுப்பேன்!`  

   அதன் பொருள் இதுதான். நா.பா. தீபம் என்னும் பத்திரிகையால் ஊக்குவித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை விடவும் அதிகமான எழுத்தாளர்களை தி.க.சி. தம் கடிதங்களால் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். 

   இன்றைய தற்கால இலக்கியத்தின் ஜனநாயகப் பரவலுக்குத் தி.க.சி. செய்த பணி ஒரு முக்கியக் காரணம். தி.க.சி. நெடுநாள் வாழ்ந்தால் இன்னும் ஏராளமான பேர் எழுத்துத் துறையில் ஈடுபடுவார்கள் என்று நா.பா. நினைத்தார் என்பதே இதன் கருத்து. 

   இலக்கியத் துறைசார்ந்த நண்பர்களைச் சந்திப்பதிலும் அளவளாவுவதிலும் தி.க.சி. தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார். 

  சென்னை ராயப்பேட்டையில் வல்லிக்கண்ணன் வசித்தவரை, நான், நா.பா., தி.க.சி. மூவரும் வல்லிக்கண்ணன் இல்லத்தில் வாரம் இருமுறையாவது சந்தித்து நீண்டநேரம் அளவளாவி மகிழ்வதுண்டு. 

  தி.க.சி.க்கு வயது வித்தியாசமில்லாமல் முதுபெரும் எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை ஏராளமான பேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். 

  தலைமுறை இடைவெளியின்றி எல்லோரிடமும் பழக முடிந்ததையும் அவரது பலம் என்று சொல்ல வேண்டும். 

   சென்னையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்குச் சென்னையில் இருந்தவரை தவறாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தி.க.சி. 

  காரணம் பல இலக்கிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதும் அவர்களோடு உரையாடி மகிழலாம் என்பதும்தான். 

  புதிதாய்ச் சந்திப்பவர்களுக்கெல்லாம் மறுநாளே ஓர் அஞ்சலட்டை எழுதி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுவிடுவார். 

  தி.க.சி. எண்ணற்ற நூல்களைப் படித்துத் தள்ளினார். அவரிடம் அண்மையில் வெளிவந்த எந்த நூலைப் பற்றியும் கருத்துக் கேட்கலாம். கறாராகவும் கூர்மையாகவும் உடனுக்குடனே கருத்துச் சொல்வார். 

  படைப்பிலக்கியங்கள் பலவற்றைச் சுடச்சுடப் படித்து உடனடியாகக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அவரது சுறுசுறுப்பு வியக்கத் தக்கது. 

   கலாப்ரியா, `ஆண்டுக்கு சுமார் 300 புத்தகங்களாவது தி.க.சி. படித்திருக்க வேண்டும்` என்று தோராயமாக ஒரு கணக்குச் சொல்கிறார். 

  தி.க.சி. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை இதைவிட அதிமிருக்குமே தவிரக் குறைந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பே வாழ்வாக வாழ்ந்தவர் அவர். 

   `வீர வழிபாடு வேண்டாம்` எனத் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் புதுமைப்பித்தனைப் பற்றி தி.க.சி எழுதினார். தி.க.சி. பற்றியும் கூட வீர வழிபாடு தேவையில்லைதான். 

  ஆனால் அதே நேரம் உண்மைக்கு முற்றிலும் மாறான அணுகுமுறையோடு தி.க.சி.யை அணுகத் தேவையில்லையே? 

   ஜானகிராமன் கவிதை எழுதவில்லையே என்றா குறை சொல்வது? ஜானகிராமன் கவிஞர் அல்ல, அதனால் அவர் கவிதை எழுதவில்லை, அவ்வளவுதான். 

   தி.க.சி. போஸ்ட் கார்ட்களை அதிகமாக எழுதினாரே தவிரப் படைப்பிலக்கியமாக அதிகம் எழுதவில்லை என்று நாம் ஏன் அவரை மதிப்பிட வேண்டும்? 

   அவர் என்னவாக இருந்தாரோ அந்த எல்லைக்குள் நின்று அவரை மதிப்பிடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். 

  `அவருடைய ஆயுதம் தபால் அட்டை. அவரும் சரி வல்லிக்கண்ணனும் சரி கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். மிக்க அன்புடன் என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்து தான் கற்றேன்` என்று அசோகமித்திரன் தி.க.சி.யைப் பற்றிய தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. 

    தி.க.சி கடித எழுத்தாளர்தான். அந்தக் கடிதங்கள் இலக்கிய உலகில் பெரும் விளைச்சலை ஏற்படுத்திய கடிதங்கள் என்பதே அவற்றின் பெரிய பலம். 

    நாவல்களாலும் சிறுகதைகளாலும் இலக்கியத்தை வளர்த்தவர்களை விடவும் கூடுதலாகத் தம் கடிதங்களால் இலக்கியத்தை வளர்த்தார் தி.க.சி. என்பதே உண்மை. 

   இப்போதும் தி.க.சி. நினைவில் சற்றுக் கண்ணை மூடினால், கண்ணுக்குள் முத்து முத்தான கையெழுத்தில் அஞ்சலட்டைகளில் அவர் எழுதியவை வரிவரியாய் ஓடுகின்றன. 

   எப்பேர்ப்பட்ட திடசித்தம் இருக்க வேண்டும் தொடர்ந்து ஓயாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பதற்கு என்று மனம் மலைக்கிறது. 

 காந்திக்கும் ராஜாஜிக்கும் கடிதம் எழுதினால் சுவரில் எறிந்த பந்துபோல் உடனுக்குடன் பதில் வரும் என்பார்கள். தி.க.சி.யும் அப்படிப் பட்டவர்தான். 

  இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதுவதே இல்லை. எல்லாம் குறுஞ்செய்திதான். வாட்ஸ்அப் தான். மின்னஞ்சல் தான். 

   கடிதக் கலாசாரத்தின் கடைசிப் பிரதிநிதியாக, அஞ்சலட்டை வீரராக தி.க.சி. வாழ்ந்து மறைந்துவிட்டார். 

  அந்தக் கடிதங்களுக்கு என்றென்றும் அழிவே இல்லை. ஏனென்றால் அவற்றை அவர் தபால்பெட்டியிலா போட்டார்? நம் மனசுக்குள் அல்லவா போட்டிருக்கிறார்!

(மீள் பதிவு)

----------
நன்றி:
திரு.திருப்பூர் கிருஷ்ணன்.
மற்றும் 
முகநூல் 

கருத்துகள் இல்லை: