31 மார்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-13: "வன்முறை"

நெல்லையப்பன் கவிதைகள்-13

வன்முறை

பேருந்தில் பெண்கள் நின்றுவர
பெண்கள் இருக்கையில் வசதியாய்
ஆண்கள் அமர்ந்து வருவதும்,
நியாயமான காரணம் இருந்தும்
விடுப்புதர அதிகாரி மறுப்பதும்,

புத்தம் புது ரோஜாவை
ஒவ்வொன்றாய் இதழ் பிடுங்குவதும்,
தொலைக்காட்சியில்
முரட்டுக் குத்துச்சண்டைகளை
தேடி ரசித்துப் பார்ப்பதுவும்,

தாமதமாகப் படுக்கைக்கு
புது மருமகளை அனுப்புவதும்,
பிச்சைக்காரனை அடிப்பதுவும்,
பயணத்தில் பலர் பார்த்திருக்க
தான் மட்டும் உண்ணுவதுவும்,
சப்தமாகப் பேசி
காதுகளைத் தாக்குவதுவும்,

அசந்து தூங்குபவரை
காரணமின்றி எழுப்புவதும்,
ஆயுதங்கள் பாதுகாக்கும்
என்ற நம்பிக்கையும்,
வன்முறை, வன்முறை, வன்முறை!

5 மார்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-23: "அரங்கேறும் சொற்கள் - கண்ணதாசன்"

எனக்குப் பிடித்த கவிதை-23

அரங்கேறும் சொற்கள் - கண்ணதாசன்

கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?

பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?

நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே?

3 மார்., 2008

கேள்வியும் பதிலும்-9: "புதுக்கவிதை என்றால் என்ன?"

புதுக்கவிதை என்றால் என்ன?

கவிஞர் மு.மேத்தா

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத -

கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக் கொண்ட

புதிய
மக்களாட்சி முறையே
புதுக்கவிதை!

கவிஞர் மு.மேத்தாவின் கவிதை, 'கேளுங்கள் கொடுக்கப்படுமிலிருந்து'

"ஊர்வலம்"
கவிஞர் மு.மேத்தா
திருமகள் நிலையம்
55, வெங்கட் நாராயணா ரோடு
தி.நகர்
சென்னை-600017

கேள்வியும் பதிலும்-8: "எது கவிதை? - வலம்புரி ஜான்"

எது கவிதை? - வலம்புரி ஜான்

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப் பறவை!
உயிர்ப் பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜானின் 'நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து''

ஒரு நதி குளிக்கப் போகிறது'
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கி செட்டி தெரு
சென்னை-600001