❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
" சார் உங்களுக்கு கொரானா பாசிட்டிவ். எங்கே இருக்கிறீர்கள்?" என்ற அழைப்பு என் எண்ணிற்கு வந்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் பற்றிக்கொண்டது. என் மீது பற்று மிக்க சிலரிடம் விவரம் சொன்னதும் அட்மிட் செய்ய பல தனியார், அரசு மருத்துவமனைகள் பரிசீலிக்கப்பட்டாலும், மருந்தே இல்லாத நோய்க்கு என் சொந்த மாவட்டமான தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர நான் தீர்க்கமாக முடிவெடுத்தேன்.
நான் நீதிபதியாக பணி செய்து வருவதால் எனக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. இருந்ததாலும், நான் முழுமையாக அரசு மருத்துவமனையை நம்பினேன். காரணம் எதுவானாலும் நம் ஊரிலே நடக்கட்டும் என்பதும் “மருந்தே இல்லாத நோயிக்கு அதிகம் செலவிட்டு என்ன ஆகிவிடப்போகிறது?” என எனக்குள்ளே கேள்வியும் ஆகும்
நான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நுழைந்த கணம் முதல், தனி அறை ஒதுக்கப்பட்டு, எனக்கான அத்தனை அடிப்படை வசதிகளை வழங்கி, தாயுள்ள பராமரிப்பை தொடங்கினார்கள். தனி கழிவறை, சிறப்பான படுக்கை வசதி, இலவசமாக சிடி ஸ்கேன், எக்ஸ் ரே, ECG, இரத்த பரிசோதனை, அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு என அனைத்து பரிசோதனைகளும் தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டன. அந்த விவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டதோடு, மருத்துவக் குழுவும் நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருந்தனர். சிறிய அளவில் மூச்சு விடுவதில் சிரமம் என்ற உடனேயே, முன்னெச்சரிக்கையாக ICU -க்கு மாற்றி கண்காணிப்பு செய்தனர். மூன்று நாட்கள் ஊசி போடப்பட்டது. நேரத்திற்கு மருந்துகள், கபசுர குடிநீர், ஆடாதொடா சாறு, சூரணம், சத்து மாத்திரைகள், சூடான குடிநீர், முன்று வேளையும் சுவையான, சத்தான உணவு, இரண்டு வகையான சோப்புகள், எண்ணெய், பேஷ்ட், பிரஷ், தினமும் அறையை சுத்தம் செய்வது என பல வகையில் இந்த அரசு மருத்துவமனையின் பராமரிப்பும், சிகிச்சையும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல், தேக ஆரோக்கியத்தையும் விரைவாக கொடுத்தது.
ஒவ்வொரு முறை பரிசோதிக்கச் செல்லும் போதும் தனிப்பட்ட, முழுமையான பாதுகாப்பு உடை, கையுறை, கண்ணாடி, முகக் கவசம் ஆகியவை கொடுக்கப்பட்டது வியப்பையும், பாதுகாப்புணரிவையும் ஏற்படுத்தியது.
மிக முக்கியமாக ICU வில் என் அருகே இருந்த நபருக்கு ரூபாய் 50,000 மதிப்பிலான ஊசி இலவசமாக போடப்பட்ட விவரம் அறிந்து பெருத்த நம்பிக்கை உண்டானது. ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது, பத்து நாட்களுக்கான சித்தா, அலோபதி மருந்துகளும் தெளிவான விளக்கத்தாளுடன் தரப்பட்டன.
மரியாதைக்குரிய டீன் உட்பட மருத்துவர்கள், அவர்களின் குழுவுடன் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
திரும்பிப் பார்த்தேன் தருமபுரி அரசு மருத்துவமனையை…..
என் குலதெய்வ கோயிலாக தெரிந்து, மருத்துவ குழுவினர் தெய்வங்களாய் தெரிந்தனர்!
என்றும் நன்றியுடன்...
நீதிபதி ஆனந்தன், தர்மபுரி மாவட்ட நீதிபதி
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
:
நன்றி: நீதிபதி திரு ஆனந்தன் மற்றும் Ms கோமதி வாசு, கூட்டாஞ்சோறு, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக