எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து :
காலைக்குறிப்புகள் 7 - ஆயிரம் நன்றிகள்
யாசுனாரி கவாபத்தா Thank You என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பேருந்து ஒட்டுநர் தன்னைக் கடந்து செல்லும் குதிரைவண்டிகள், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். உண்மையான மகிழ்ச்சியோடு அவன் தனக்காக வழிவிடும் அத்தனை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லுகிறார்.
மலைப்பாதையில் செல்லும் அந்தப் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் பயணம் செய்கிறாள். பேருந்து பயணத்தின் வழியே ஒட்டுநரின் அகம் முழுமையாக வெளிப்படுகிறது.
சாலையில் செல்லும் குதிரைகளுக்குத் தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்தக்கூடும் என்பதால் குதிரை வண்டியைக் கடந்து போகும் அவன் விளக்குகளை அணைத்து விடுகிறார். கூடுதலாக அந்தக் குதிரைவண்டியோட்டியிடம் நன்றி என்றும் சொல்கிறார். முப்பத்தியைந்து மைல் செல்லும் அந்தப் பயணத்தில் அவர் ஒரு நூறு முறை நன்றி சொல்லி விடுகிறார்.
இந்தக் கதை ஜப்பானில் Mr. Thank You என்ற பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேருந்து ஒட்டுநர்களின் உலகைச் சித்தரித்த திரைப்படங்களில் Paterson மிக முக்கியமானது. அதில் வரும் ஒட்டுநர் ஒரு கவிஞர். அவர் சாலையில் தோன்றும் காட்சிகளிலிருந்து தனது கவிதைக்கான வரிகளை உருவாக்கிக் கொள்கிறார். பேருந்து மனையிலிருந்து பேருந்து கிளம்புவதில் துவங்கி இரவு திரும்பி வருவது வரை அவரது வாழ்க்கை மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. பேருந்து ஒட்டுவதென்பது சாலையில் ஒரு திமிங்கலத்தை அழைத்துக் கொண்டு போவது போன்றதே. ஒட்டுநர் மிகப் பொறுமையானவராக இருக்க வேண்டும்.
கவாபத்தா கதையில் பெரிய திருப்பங்கள். நிகழ்ச்சிகள் இல்லை. ஆனால் கதை ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது. காரணம் அந்த ஒட்டுநரின் இயல்பான நன்றி தெரிவிக்கும் குணம். அதுவும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிப்பது.
நன்றி தெரிவிக்கும் பழக்கத்தைச் சிறுவயதில் வீட்டில் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் அது மனதில் பதியாது. வாழ்க்கை தான் நன்றியின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைக்கிறது. ஆனாலும் பலர் அதை உணர்வதேயில்லை. நன்றி தெரிவிப்பது என்பது வெறும் சம்பிரதாயமில்லை. அதையும் கடந்த ஒன்று.
ஜப்பானின் இயல்பு வாழ்க்கையில் நன்றி சொல்லுதல் கலந்திருக்கிறது. ஜப்பானுக்குச் சென்ற நாட்களில் அதை முழுமையாகக் கண்டிருக்கிறேன். ஒரு நாளில் எத்தனை முறை நன்றிசொல்வார்கள் என்று கணக்கேயில்லை. மனிதர்களுக்கு மட்டுமில்லை இயற்கைக்கும் ஜப்பானியர்கள் நன்றி சொல்கிறார்கள்.
கவாபத்தா கதையில் வரும் ஒட்டுநரைப் போலவே எழுத்தாளனும் நிறைய நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்பது முடிவில்லாத பட்டியல். என் முதற்கதையைக் கணையாழிக்கு அனுப்பிய போது யார் என்று என்னை அறியாத அசோகமித்திரன் அதைத் தேர்வு செய்து கணையாழியில் வெளியிட்டாரே அதற்கு வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் தானே.
ஒரு பள்ளிச்சிறுவனாக இருந்த என்னை எழுத்தாளராக உருமாற்றிய கவிஞர் தேவதச்சனுக்கு எவ்வளவு முறை நன்றி சொல்வது. தேடித்தேடி புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்துப் படிக்கச் சொல்லி எழுதச்சொல்லி ஊக்கம் தந்த தோழர் எஸ்.ஏ.பி. என்றும் நன்றி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியவர் தானே. இவர்களைப் போல எத்தனையோ பேர் நான் எழுத காரணமாக இருந்திருக்கிறார்கள். சிலர் நேரிடையாகவும் பலர் மறைமுகமாகவும் உதவியிருக்கிறார்கள். இந்த ஒட்டுநர் போலவே மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்லி வருகிறேன்.
கதை ஒட்டுநரைப் பற்றியதாக இருந்தாலும் அவர் மீது துவங்குவதில்லை. இது பெர்ஸிமன் பூக்களுக்கு உகந்த வருஷம் என்றே துவங்குகிறது. மலைகளின் இலையுதிர்காலம் மிக ரம்மியாக இருந்தது என்று கதை நகருகிறது. பெர்ஸிமன் பூக்களைப் போலவே தான் ஒட்டுநரும் பிறரை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறார். இயற்கை மனிதர்களை மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறது. அதை மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை. அரிதாகவே உணர்ந்து கொள்கிறார்கள்.
Gratitude is when memory is stored in the heart and not in the mind என்பார்கள். அதன் அடையாளமே அந்த ஒட்டுநர்.
கதையில் பேருந்து ஒட்டுநருக்குக் பெயரேயில்லை. புத்தர் ஒருவேளை அந்தப் பேருந்தின் சாரதியாக இருந்திருந்தால் இப்படித் தான் நடந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இரண்டு பக்க அளவுள்ள ஒரு கதையின் வழியே நிரந்தரமாக ஒரு கதாபாத்திரத்தை வாசகன் மனதில் பதியச் செய்துவிடுவதே எழுத்தின் வெற்றி. இதனால் தான் கவாபத்தா நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
நன்றி : திரு எஸ்ரா, திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக