குஞ்சிதம்குருசாமி: தமிழ் நாட்டின் முதல் பெண் கல்வி அதிகாரி! பாரதிதாசன் நூலை முதன்முதலில் பதிப்பித்தவர்! கொள்கைகளுக்காக வேலைகளை இழந்தார்.. ஆனால் மனம் தளரவில்லை!
தந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்துக்கு குறிப்பாக பெண்கள் விடுதலைக்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கது, 1938 நவம்பர் 13-ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் நடந்த பெண்கள் மாநாட்டில்தான், 'பெரியார்' பட்டத்தைப் பெண்கள் அவருக்கு அளித்தனர். பெரியாரின் கருத்துகள், மூடப் பழக்கவழக்கங்களில் சிக்கியிருந்த சமூகத்தில்-குறிப்பாகப் பெண்களிடம் தீயாய்ப் பரவின.
இதனால், திராவிட இயக்கத்தில் பல பெண் தலைவர்கள் உருவாகினர். மூவலூர் ராமாமிர்தம், மீனாம்பாள் சிவராஜ், எஸ்.நீலாவதி, சிவகாமி என இந்தப் பட்டியல் மிக நீளமானது. அதில், குஞ்சிதம் குருசாமி மிக முக்கியமானவர். இந்தியாவின் முதல் பெண் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 89 ஆண்டுகளுக்கு முன்பே, சீர்திருத்த திருமணம் செய்துகொண்டவர் குஞ்சிதம் குருசாமி.
1929, சூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், மதம்,கடவுள், ஆகியவற்றை எதிர்த்து நாத்திகப் பரப்புரை நிகழ்த்தத் தீர்மானிக்கப் பெற்றது.
அந்த நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் பேசிய குருசாமி என்ற இளைஞர், சாதியை ஒழிப்பதற்குக் கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி என்றும், கலப்புத் திருமணத்தைத் தவிர வேறு எந்த முறையினாலும் சாதி ஒழியாது என்றும் பேசினார். சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடும் சமூகச் சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட ஆயிரம் பங்கு துணிச்சல் உள்ளவர், என்றும் பேசினார்.
பேசிவிட்டுப், பேசிய பேச்சினை அடுத்த விநாடியே மறந்துவிடும் மனிதரல்லர் அந்த இளைஞர். கலப்புத் திருமணம் என்பது அவருக்கு உயிர்க் கோட்பாடாயிற்று, அக்கொள்கையில் உறுதியாய் நின்றார்.
ஒன்றரை பிராமணர் என்று சொல்லும் அளவு ஆசாரத்தில் மூழ்கி இருந்த அந்தக் கால முதலியார் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞரின் உற்றார் உறவினர்கள் கலப்புத் திருமணம் வேண்டாமென்று வலியுறுத்தினார்கள்; தடுத்தார்கள்; பயமுறுத்தினார்கள் எனினும் இளைஞர் குருசாமி கலப்புத் திருமணம் புரிந்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.
இதனை அறிந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், சென்னை ஜார்ஜ் டவுனில் வசித்துவந்த வயலின் இசைக் கலைஞர், திருவாரூர் டி.சுப்ரமணியன்-தங்கம்மா தம்பதியினரின் முதல் மகள் குஞ்சிதத்தை குருசாமிக்கு மணமுடிக்கலாம் என்று பெரியாரிடம் தெரிவித்தார். மணப்பெண் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர். அப்பொழுது குஞ்சிதம் இராணிமேரி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.
பின்னர், 1929 டிசம்பர் 8ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் பெரியார் மனைவி நாகம்மாள் தலைமையில் குருசாமி-குஞ்சிதம் கலப்புத் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்திட விரும்பிய குருசாமியின் இரண்டாவது தங்கை-சுப்புரத்தினத்தின் கணவர், திருச்சியிலிருந்து தந்தி அனுப்பினார். தந்தியில், குருசாமியின் தங்கை கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என்று கண்டிருந்தது. பெரியாரும் மற்றவர்களும் அதிர்ச்சியுற்றனர்.
குருசாமி, "என் இருதங்கைகளில் இந்தத் தங்கை தான் நல்ல திடமனம் படைத்தவர், நிச்சயம் அவர் அவ்வாறு மூடிவு எடுக்க மாட்டார்;உயிருடன் இருப்பார்" என்று மிக நிதானமாகக் கூறினார்.அதுவே உண்மையாயிற்று.
திருமணம் என்றதும், இந்து முறைப்படியான மந்திரம் ஓதுதல் உள்ளிட்ட சடங்குகள் மட்டுமே இருந்த காலம் அது. அனைத்துத் திருமணங்களும் உறவுக்குள் அல்லது ஒரே சாதிக்குள் நடைபெறுவதாகவும் இருந்தது. திருமண மேடையில் தலைகுனிந்தவாறே மணப்பெண் வீற்றிருக்கும் காலம். ஆனால், மந்திரங்கள், சடங்குகளைத் தவிர்த்து நடந்த குஞ்சிதம் - குருசாமி சுயமரியாதைத் திருமணத்தில், மணமகள் தெளிந்த ஆங்கிலத்தில் பேசினார். 'இந்தியப் பெண்கள் விலங்குகளாகவே இதுவரை கருதப்பட்டு வந்தார்கள். இதற்குப் பெண் மக்கட்குக் கல்வியின்மையே காரணமாகும்' எனத் தொடங்கி, 'அறிவிலும் பலத்திலும் ஆண்களோடு பெண்கள் போட்டிபோட முடியாது என நம்பிய காலம் மலையேறிப் போய்விட்டது' எனக் கம்பீர உரை நிகழ்த்தினார். அவரின் பேச்சை ஆச்சர்யத்தோடு கேட்ட கூட்டம், அரங்கம் அதிரக் கைதட்டியது. இவரின் உரையை ஜே.எஸ்.கண்ணப்பர் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
குஞ்சிதமும் குருசாமியும் சாதி மறுப்பு இணையர். மாப்பிள்ளை குருசாமியிடம் பெரியார் அவர் எதிர்பாராத வேண்டுகோள் ஒன்றை அங்கே வைத்தார். "பெண்ணுக்குத் தாலி கட்ட வேண்டும்" அதிர்ச்சியடைகிறார் மணமகன். 'நீங்களா இப்படி கேட்பது?' என்கிறார். "ஆமாம். ஏனெனில் பெண் சமூகம் தாலி மறுக்கப்பட்ட இசை வேளாளர் சமுகம். எனவே இந்தத் திருமணத்தில் தாலி கட்டினால் அதுவே புரட்சி" என்றார் பெரியார். பெரியாரே சொல்லியும் அந்தப் பெரியார் கொள்கையாளர் மணமகன் அடிமைச் சின்னமாம் தாலி அணிவிக்க ஒத்துக் கொள்ளவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் தாலி அணிவித்தார் குருசாமி.
தாலி கட்டி திருமணம் செய்திருந்தாலும், தாலி பெண்ணின் அடிமைச் சின்னம் எனும் முடிவுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளில் அகற்றிவிட்டார்கள் இருவரும் தாலியை.
பூ சூடுவது, பொட்டு வைப்பது போன்றவை மத சம்பிரதாயங்கள் என்று திருமணத்துக்குப் பிறகு குஞ்சிதம் எல்லாவற்றையும் கை விட்டார். நகைகளும் அணிவதில்லை என்று முடிவெடுத்தார். எங்கே போனாலும், ‘இவர் விதவை போலிருக்கிறது’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருக்குமாம். திருமணம் நடந்த அடுத்த ஆண்டு தான், இருவருமே பி.ஏ. பட்டம் பெற்றார்கள். சேர்ந்தே பட்டமளிப்பு விழாவுக்கு போனார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து குஞ்சிதத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ‘ரஷ்யா’ என்று பெயர் வைத்தார்கள்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் இலக்கியத்தில் முதன்முறையாக எழுதப் பட்ட பெண் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலை இந்தக் குழந்தையைப் பார்க்க வந்தபோதுதான் எழுதினார்... 'சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பர் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு நகைத்தே நீ கண்ணுறங்கு'
குஞ்சிதம் சென்னை ஜார்ஜ் டவுன் டே ஸ்கூலில் படித்து பள்ளி இறுதித் தேர்வில் தங்க மெடல் பரிசு பெற்றவர். பொருளாதாரம், அரசியல் இரண்டையும் சிறப்புப் பாடமாக எடுத்து ராணி மேரி கல்லூரியில் படித்தார். லேடி வெலிங்டன் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். திருநெல்வேலி அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி யில் 1933-இல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது குருசாமி சென்னையில் வேலை செய்து வந்தார். குஞ்சிதமும் சென்னையிலேயே வேலை கிடைத்தால் நல்லது என்று நினைத்தார்.
சென்னையில் தனியார் பெண்கள் பள்ளியில் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்ததும் பள்ளி நிர்வாகி அழைத்தார்.
“உங்கள் பெயர்தான் திருமதி குஞ்சிதமா?”
“ஆமாம்.”
“நீங்கள் இந்துப் பெண் தானே?”
“ஆமாம்.”
“நெற்றியில் ஏன் பொட்டு வைக்க வில்லை?”
“அப்படியே பழகி விட்டேன்.”
“இனிமேலாவது வைத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லையே?”
“வைக்க வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறேன்”
“உங்கள் கணவர் பெயர்?”
“குருசாமி.”
“அப்படியா... நான் கேள்விப்பட்டது சரியாகிவிட்டது. உங்களைப் போன்றவர்களுக்கு எங்கள் பள்ளியில் வேலை தர முடியாது” என்று சொல்லி அனுப்பிவிட்டார். சிரித்துக் கொண்டே வந்துவிட்டார் குஞ்சிதம்.
மயிலாப்பூர் தேசிய பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். தாண்டுவது, ஓடுவது என்று பெண்களுக்கான உடற்பயிற்சி முறையை அறிமுகப்படுத்தினார். கூடைப்பந்து, பேட்மின்டன், டென்னிஸ் விளையாட்டில் பல பரிசுகளைப் பெற்றார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தது. அதற்குத் தலைமை தாங்க குஞ்சிதத்தை பெரியார் அழைத்தார். இவரும் சென்றார். மாநாட்டில் கடுமையாக முழக்கமிட்டார். இது பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிய வர, மூன்று மாத சம்பளமான ரூ.75-ஐ கையில் கொடுத்து நீக்கி விட்டார்கள், வேலையை விட்டு. இது நடந்தது 29.3.1934-இல்.
கடலூர் பெண் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தார். அப்போது சென்னை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டு, தி.மு.கவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார் குருசாமி. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ‘குஞ்சிதம் தான் சூப்பரிண்டென்ட் பதவிக்கு தகுதியானவர். அவருக்கே இந்த பதவியை தர வேண்டும்’ என்று அண்ணா கட்டளையிட்டார். தி.மு.க. ஏகமனதாக முன்மொழிய, காங்கிரஸ் வழி மொழிய குஞ்சிதத்துக்கு பதவி கிடைத்தது. கிடைத்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தார் குஞ்சிதம்.
வாழ்நாள் பூராவும் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதிலும், மாநாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார் குஞ்சிதம்.'கோயிலில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும்' என்று பேசினார். பெண்களுக்கு எதிராகச் சமூகத்தில் பின்பற்றப்படும் மூடநம்பிக்கையை எதிர்ப்பதை முழு மூச்சாகக் கொண்டு இயங்கினார். சிறந்த எழுத்தாற்றல் கொண்ட குஞ்சிதம், பெண் உரிமைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதினார். 'புதுவை முரசு' சிறப்பு மலரில், `ருதுவான பெண்கள் கைதியிலும் கேடா?' என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது.
'ஆண் மகன் பக்குவமடைந்தவுடன் அடைத்துவைக்கப்படுகிறானா? அப்படியிருக்க, பெண் மக்களை மாத்திரம் இப்படி அவமானப்படுத்துவதன் கருத்தென்ன? அற்பத்தனமான சந்தேகம்தானே காரணம்?' எனச் சாட்டையடி கேள்விகளைக் கேட்டிருந்தார். 'பெண்களே... உங்கள் அருமைக் கண்கள் நல்ல காட்சிகளைப் பார்க்கவேண்டிய காலத்தில், உங்கள் வீட்டு அடுப்பங்கரைச் சாமான்களையே சதா காலம் பார்த்து ஒளி மங்குகின்றனவே. உங்கள் ஆண் கொடுமையினின்றும் என்று மீட்பேனோ! என்னோடு வந்து நீங்களும் உல்லாசமாய், ஓடியாடித் திரிவீர்களோ! பயப்படாதீர்கள்! காற்று என்றுமே ஒரே முகமாய் அடிப்பதில்லை!' என்று நம்பிக்கையோடு முடித்திருந்தார். இந்தக் கட்டுரையை எழுதிய வருடம் 1931 எனும்போது, வியப்பு மேலோங்குகிறது அல்லவா!
திராவிட இயக்கம் மீதான கருத்தியல் தாக்குதல்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பவராக இருந்தார் குஞ்சிதம். பாரதிதாசனின் கவிதைகளை விரும்பிப் படிக்கும் குஞ்சிதம், அவற்றைத் தொகுக்கும் பணியையும் செய்தார். பாரதிதாசனின் கவிதைகளை முதன்முதலாகப் பதிப்பித்த பெருமையும் இவரையே சாரும்.
தன் வாழ்வின் இறுதி நாள் வரை பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பியவர், 1961 ஜூலை 30-ஆம் தேதி மரணமடைந்தார்! கொண்ட கொள்கையிலிருந்து கடைசிவரை மாறாமல் வாழச் சிலராலேயே முடியும்.. அந்தச் சிலரில் ஒருவராக இன்றும் நினைவுகூறப் பட்டுக்கொண்டு இருக்கிறார் இவர்!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக