பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)
ஏலாதி
விளக்கவுரை :-
ஏலாதி நூலை எழுதியவர் கணிமேதாவியார். கணித்தலில் மேதையாக இவர் இருப்பதாக இவரது பெயர் சுட்டுவதால் இவர் சோதிடத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இறைவாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்களைக் கொண்டது ஏலாதி. அருகக் கடவுளை இவர் வாழ்த்துவதால் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
ஏலாதி என்ற பெயர் ஏன்
ஏலாதி சூர்ணம் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் முக்கியமான ஒரு சூர்ணம். ஏலம் ஒரு பங்கும்,இலவங்கப்பட்டை இரண்டு பங்கும்,நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நாலு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் கலந்த ஒரு கலவை ஏலாதி சூர்ணம்.அரிய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சூர்ணம் உடல் நலத்தைச் சீராகக் காக்கும் ஒரு அற்புத சூர்ணம்.
இதே போல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் வாழ்வியல் நூல் என்பதால் இதற்கு ஆசிரியர் கணிமேதாவியார் ஏலாதி என்ற அதிசயப் பெயரை, அற்புதப் பெயரைச் சூட்டியுள்ளார்.அத்தோடு ஏலாதி சூர்ணத்தை உருவாக்குவதில் ஆறு மூலப்பொருள்கள் இருப்பது போல ஏலாதி பாடல்களில் ஆறு பொருள்களை கணிமேதாவியார் வகுத்து வலியுறுத்துகிறார்.
அற ஸ்பரிசஸங்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஏற்பட ஏற்பட அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பெறுதற்கரிய நான்கு பேறுகளையும் பெறலாம் என்பதை அனைத்து அறநூல்களும் வலியுறுத்துகின்றன.
இல்லற நூல், துறவற நூல், நல்லற நூல்
இந்த நூலின் சிறப்புப் பாயிரம்
“இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதையாய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து” என்று வலியுறுத்துவது போல ஏலாதி ஒரு இல்லற நூல்; அத்தோடு துறவிலக்கணம் கூறும் துறவற நூல் அனைத்து அறங்களையும் வலியுறுத்துவதால் ஒரு நல்லற நூல் என்பது நூலைப் படித்தால் விளங்கும்.
பழங்காலத்தில் உளவியல் அடிப்படையில் வாழும் நல் மன வாழ்க்கையைப் பெரியோர் பெரிதும் வற்புறுத்தி வந்தனர். அதற்கான செம்மையான நலங்களை அறநெறி நூல்கள் சுட்டிக் காட்டின.ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தோர்க்கு மனத்தினால் உண்டாகும் நோய்கள் அறவே இல்லாமல் போனது; அவர்களுக்குப் புகழுடைய வாழ்க்கையும் அமையப் பெற்றது.
யாருக்கு இந்த அறநூல் தேவை இல்லை!
கணி மேதாவியார், அற நூல் எதுவும் தேவை இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறுகையில் யாருக்குத் தேவை இல்லை என்ற வினா ‘சஸ்பென்ஸாக’ நம் மனதில் எழுகிறது.
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)
பொய்யே சொல்லாதவன், மாமிசம், மது இவற்றை நீக்கியவன், மற்றவர்க்குத் தீங்கு செய்யாதவன், சிறியவர் சேர்க்கையைக் கொள்ளாதவன் மற்றவர்க்கு இன்னாதவற்றைச் சொல்லாதவன் ஆகிய நல் குணங்களைக் கொண்டவனுக்கு மீன் போன்ற கண்களை உடையவளே அறநூல்கள் தேவை இல்லை என்ற பாடலைப் படித்தவுடன் அதில் உள்ள பொருளின் ஆழம் நமக்குப் புரியும்.
நன்றி :