28 ஜன., 2025

சூரியின் நாட்குறிப்பு-79 : ஆமைபோல் ஐந்தடக்கல்....

🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️
சூரியின் நாட்குறிப்பு-79 :
ஆமைபோல் ஐந்தடக்கல்....
🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️


எங்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றில் அன்பர் ஒருவர் மேலே உள்ள படச்செய்திக்கு எதிர்வினையாற்றுகையில், திருக்குறளிலிருந்து *ஆமைபோல் ஐந்தடக்கல்* என்ற சொற்றொடரை மிகப் பொருத்தமாக பயன்படுத்தி, சிறப்பாக்கி இருந்தார். ஆனால் அது என் நினைவைக் கீறி, வார்த்தை சித்தர் வலம்புரி ஜானை என் கண் முன்னே கொண்டு நிறுத்தியது.

காரைக்குடி புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது. முதல் நான்கு ஆண்டுகள் முக்கிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டு செயல்படும் அரியவாய்ப்பு எனக்குக்கிடைத்தது.

அதில் ஒரு ஆண்டின் போது தொடக்கவிழா சிறப்பு விருந்தினர் முடிவாகாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

இறுதியில் வலம்புரி ஜான் அவர்களை தொலைபேசி வழி தொடர்புகொண்டு அழைத்தபோது உடனே சம்மதம் தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர் பயண ஏற்பாடுகள் செய்ய போதிய அவகாசம் தரமுடியாமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்தோம்.

*"அதெல்லாம் ஒன்றுமில்லை, புத்தகம் என்று சொல்லிவிட்டீர்கள், நடந்தேகூட வந்துவிடுவேன்"* என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். *புத்தகங்கள் மீது அவருக்கு அவ்வளவு காதல் !*

அந்த விழாவில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மடைதிறந்த வெள்ளமெனப்பாய்ந்த அவரது தேனிசை மழையில், மகுடி முன் நாகமென முழுக்கூட்டமும் கட்டுண்டு கிடந்தது.

அந்த உரையில், எவ்னளவு இனிமையான, அற்புதமான, சுவையான தகவல்கள்! தான் எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதில்லை, பள்ளிப்பருவத்திலிருந்தே அப்படித்தான் என்று  ஒரு சுவையான நிகழ்ச்சியை விவரித்தார்.

*"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து”* என்ற திருக்குறளை தமிழாசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். மாணவன் ஜான் எழுந்துநின்று, *அந்தக் குறளின் உவமையில் ஒரு சிறுபிழை இருப்பதாகக் கூற*, ஆசிரியர் அதிர்ந்து போய், *"என்னப்பா! திருவள்ளுவரிடமே குற்றம் காண்கிறாயா"* என்றார்.

*"ஐயா! இது கடலோரக் கிராமம். பிறந்ததிலிருந்தே கடலுடன் உறவு எனக்கு. எத்தனையோ ஆமைகளைப் பார்த்திருக்கிறேன். ஆமைக்கு தலை,  நான்கு கால்கள் மற்றும் ஒரு சிறிய வால்போன்ற உறுப்பும் உண்டு. அருகில் யாராவது வருவது தெரிந்தால், இந்த ஆறையும் உள்ளிழுத்துக் கொண்டுவிடும். ஆனவே "ஆறடக்கல்"; ஐந்தடக்கல் என்பது பொருந்தாத உவமை" என்றான் மாணவன் ஜான்*. 

"அதிகப்பிரசங்கி! உடாகார் என்று மண்டையில் தட்டி,  உட்காரவைக்காமல், மாணவர்களின் விழிப்புணர்வுக்கு,  சுயசிந்தனைக்கு முட்டுக்கட்டை போடாமல், பல கிறித்துவப்பள்ளிகளில், இதுபோல் ஊக்குவிக்கும் பழக்கம்  இன்றுமுள்ளது.

உவரி என்ற அந்த சிறிய கடலோரக் கிராமம், திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ளது. 

அந்தச் சாலையில் பேருந்தில் செல்கையில், ஒரு மிகப்பெரிய மாதாக்கோவிலைப்
பார்த்தேன். அந்த ஊர் வலம்புரி ஜானின் ஊர் உவரி என்பதை பின்னர் அறிந்தேன்.

கிறித்துவத்தை பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள், அந்த கிராமத்து மக்களது வாழ்க்கையே முற்றிலுமாக மாறக் காரணமானார்கள். மதப்பணியுடன், கல்விப்பணி போன்ற பல பணிகளை ஆற்றி அந்த எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள். 

வலம்புரி ஜான் போன்ற அருமையான சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர் அதனால் உருவாக முடிந்தது. 

-தொடரும்
🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️

கருத்துகள் இல்லை: