8 ஏப்., 2026

ஜெயகாந்தன் நினைவுகள்


ஏப்ரல் 8: ஜெயகாந்தன் நினைவு தினம்:
..............................................
*ஜெயகாந்தன் சில நினைவலைகள்...*
*திருப்பூர் கிருஷ்ணன்*
..............................................
  *ஜெயகாந்தன் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அவ்வளவு படித்திருக்கிறேன் அவரது எழுத்துக்களை. அவ்வளவு பழகியிருக்கிறேன் அவரிடம். 

   நூல் எழுதம் அவகாசம் எப்போது வாய்க்கும் என்றுதான் தெரியவில்லை. 

   இதோ என்றோ எழுதவிருக்கும் நூலுக்கான முன்னோட்டம் போல, இப்போது ஜெயகாந்தனைப் பற்றிக் கொஞ்சமாகச் சில நினைவலைகள்...

  ஜெயகாந்தன் தற்கால இலக்கியப் படைப்பாளிகளில் மிகப் பெரிய அளவில் தடம் பதித்த ஓர் ஆளுமை. அவர் பெயரை நீக்கிவிட்டுத் தற்கால இலக்கிய வரலாற்றை யாரும் எழுத இயலாது. 

   சமூகப் பிரச்னைகளைத் தன் கூர்மையான அறிவுக் கண் கொண்டு பார்த்து, வித்தியாசமான கோணத்தில் அணுகி, அதன் நியாயம் சார்ந்த தரப்புக்காகப் படைப்பிலக்கியத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர் அவர். 

   அவர் எழுதிய `அக்கினிப் பிரவேசம்` சிறுகதை மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்ட கதை அது. அந்தக் கதை முன்வைத்த கண்ணோட்டத்தை எதிர்த்துக் கதை எழுதிய எழுத்தாளர்கள் பலர். 

  `அக்கினிப் பிரவேசம்` சிறுகதைக்கு வேறு முடிவு வைத்திருந்தால் என்ன ஆகும் என ஜெயகாந்தனே சிந்தித்தார். அந்த வகையில் அந்தச் சிறுகதை `சிலநேரங்களில் சில மனிதர்கள்` என நான் பணிபுரிந்த தினமணிகதிரிலும், பின்னர் `கங்கை எங்கே போகிறாள்?` எனக் குமுதத்திலும் நாவல்களாக வளர்ந்தது. 

   ஜெயகாந்தன் சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம் எனப் பல துறைகளில் இயங்கியவர். என்றாலும் சிறுகதைத் துறையில் அவர் சாதனையின் பரிமாணம் சற்று அதிகம் என்றே சொல்லவேண்டும். 

   முறையான கல்வி பயிலாத ஜெயகாந்தனின் சிறுகதைகளை, அவர் எழுத ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே கொண்டாடி, அவர்பாணிச் சிறுகதைகள் தமிழுக்கு மிகவும் அவசியம் என தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியவர் மாபெரும் கல்வியாளரும் ஆந்திரப் பல்கலைத் துணைவேந்தராக இருந்தவருமான அமரர் கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார். 

   ஜெயகாந்தன் படைப்புக்களை ஜெயகாந்தனே ஒப்புக்கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுவதற்கும் அவரை அறிமுகம் செய்துவைத்த பெருமை சிறிது காலம் முன்னால் காலமான கே.எஸ். சுப்பிரமணியத்தினுடையது.  

   ஜெயகாந்தன் மகாகவி பாரதியின் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உடையவர். பாரதியார் கவிதைகளைக் கரைத்துக் குடித்தவர். அவரது எழுத்துக்களின் அடிநாதத்தில் பாரதியின் சமூகப் பார்வை தென்படுவதை உள்ளார்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளலாம். 

    ஜெயகாந்தனது எழுத்தின் வீச்சு மிகப் பரந்தது. அரசியல் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் திரைத்துறை சார்ந்தும் கூட அவர் பல கண்ணோட்டங்களைத் தம் கட்டுரை நூல்களில் முன்வைத்துள்ளார். 

   இந்தத் துறைகள் சார்ந்த கருத்துக்கள் அவரது சிறுகதைகளிலும் ஊடாடுகின்றன. 

  அமுதசுரபி மாத இதழின் நீண்ட கால ஆசிரியராக இருந்த அமரர் விக்கிரமன், ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவரது சிறுகதைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். 

  ஜெயகாந்தன் தனக்குத் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு அமுதசுரபி இதழில் தம் சிறுகதை வந்தால்தான் தன்னை எழுத்தாளர் என்று மணமகள் இல்லத்தார் ஏற்பார்கள் என்று சொன்னதாகவும் அதன் பொருட்டே அவரது சிறுகதை ஒன்றைத் தாம் அமுதசுரபியில் வெளியிட்டதாகவும் விக்கிரமன் குறிப்பிட்டதுண்டு.  

   ஜெயகாந்தனது எழுத்துக்களின் தீவிர ரசிகையாக இருந்தவர் தொண்ணூறு வயது நிறைவாழ்வு வாழ்ந்தவரும் இலக்கிய ரசிகையுமான என் தாயார் திருமதி கே. ஜானகி. 

   அவர் கிருஷ்ண ஜெயந்திக்குத் தான் நிவேதனம் செய்த முறுக்கு, சீடை போன்றவற்றை என் மூலம் ஜெயகாந்தனுக்குக் கொடுத்தனுப்புவார். ஜெயகாந்தனை நான் சந்திக்கும் போதெல்லாம் என் தாயாரின் நலம் பற்றி விசாரிக்க அவர் மறக்கமாட்டார். 

   நானும் ஜெயகாந்தனுமாக இணைந்து பல மேடைகளில் பேசியிருக்கிறோம். அதில் சில மேடைகள் ஜெயகாந்தன் முன்னிலையிலேயே ஜெயகாந்தன் இலக்கியத்தைப் பற்றி நான் பேசிய மேடைகள். 

   கவிதா சொக்கலிங்கம் வெளியிட்ட ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, ஞானியாரடிகள் மன்ற நிறுவனரும் நா.பா., சின்னக் குத்தூசி ஆகியோரின் நெருங்கிய நண்பருமான அ.நா. பாலகிருஷ்ணன் கடலூரில் நடத்திய ஜெயகாந்தனுக்கான பாராட்டு விழா போன்றவை அவற்றில் சில. 

    திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன் தாளாளராக இருந்த ஆர்.எம். ஜெயின் வித்யாஸ்ரம் பள்ளிக்கு ஜெயகாந்தனை அழைத்துப் போய் அவர் பேசுவதற்கும் முன்பாக அவரைப் பற்றி நான் பேசிய நிகழ்வு என்னால் மறக்க இயலாதது. 

  ஜெயகாந்தன் காலமானபின் இனியவன் நிறுவிய இலக்கிய வீதி அமைப்பு ஜெயகாந்தனுக்கான ஒரு கூட்டத்தை நடத்தியது. இடம் சென்னை மயிலை பாரதிய வித்யா பவன். 

   சிற்றரங்கில் நடைபெறுவதாக இருந்த கூட்டம், வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்த பின் பேரரங்கிற்கு மாற்றப் பட்டது. 

   தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், ஜே.கே. அன்பரான தினமணி ராஜ் கண்ணன் உள்ளிட்டு இன்னும் ஏராளமான பிரமுகர்கள் முன்னிலையில் அன்று சுமார் ஒன்றே கால் மணிநேரம் ஜே.கே. பற்றி நான் பேசிவிட்டு அமர்ந்தபோது, என் விழிகளில் நீர் நிறைந்தது. என் நெஞ்சமும் ஜே.கே. நினைவுகளால் நிறைந்திருந்தது. 

   ஜெயகாந்தனைப் பற்றிய எத்தனையோ நினைவுகள் அவ்வப்போது மனத்தில் அலைமோதுகின்றன. அவர் முரட்டு மனிதர் என்றும் கர்வம் நிறைந்தவர் என்றும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. 

   ஆனால் அவரின் இன்னொரு பக்கம் பற்றிப் பலர் அறிய மாட்டார்கள். அவரைப் போல் அன்பும் குழந்தை மனமும் கொண்டவர்கள் அபூர்வம். 

   என் ஞானகுரு தீபம் நா. பார்த்தசாரதி காலமானபோது மணியன் நடத்திய `இதயம் பேசுகிறது` இதழில் ஜெயகாந்தன், நா.பா குறித்து ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். அதில், ` என் தாயார் என் எழுத்துக்களின் ரசிகை அல்ல. ஆனால் நா.பா. எழுத்துக்களின் தீவிர ரசிகை`  என அவர் குறிப்பிட்டிருந்தார். 

   அதைப் படித்து, நா.பா.வின் மனைவி திருமதி சுந்தரவல்லி பார்த்தசாரதி அடைந்த நெகிழ்ச்சி வர்ணிக்க இயலாதது. அந்தக் கட்டுரை நா.பா.வை இழந்து வாடிய திருமதி நா.பா. வுக்கு மிகுந்த ஆறுதல் தந்தது. 

   நான் தினமணிகதிரில் சேர்ந்த புதிதில் அதன் ஆசிரியராக இருந்தவர் அமரர் கே.ஆர். வாசுதேவன். (புற்றுநோய் மருத்துவரும் அரசியல் பிரமுகருமான டாக்டர் மைத்ரேயனின் தந்தை.) 

   கேயார்வி என அழைக்கப்பட்ட கே.ஆர். வாசுதேவன் ஜெயகாந்தன் எழுத்துக்களின் பரம ரசிகர். நானும் அவருமாக ஜெயகாந்தன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் ஒரு தொடர் கேட்டோம். அதன் பின்னர் அவர் கதிரில் எழுதிய தொடர்தான் `அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்`.  

   சுஜாதா அம்பலம் இணைய இதழில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தபோது நான் அந்த இணைய இதழில் ஆசிரியராக இருந்தேன். 

  அப்போதும் சுஜாதா விரும்பியபடி ஜெயகாந்தனிடம் தொடர் கட்டுரை கேட்டேன். தொடர்ந்து அவர் அம்பலத்தில் கட்டுரைகள் எழுதினார். 

   தினமணிகதிரில் பணிபுரிந்த பிரபல கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஒருமுறை ஜெயகாந்தனைப் பேட்டிகண்டு அந்தப் பேட்டியைக் கதிரில் வெளியிட்டார். 

   அந்த முக்கியமான பேட்டியில் `சிறுகதை என்பது உரைநடையால் ஆக்கப்படும் கவிதை` என்று சொல்லியிருந்தார் ஜெயகாந்தன். உண்மை. அவர் சிறுகதைகளெல்லாம் ஏதோ ஒரு வகையில் கவிதைகள் தான் என்றே தோன்றுகிறது. 

   தமிழில் புதிதாக எழுதவரும் இளைஞர்கள் ஜெயகாந்தன் கதைகளை ஆழ்ந்து பயில்வதன் மூலம் மொழியை எப்படியெல்லாம் வெடிப்புறக் கையாளலாம், உணர்ச்சிகளை எப்படியெல்லாம் கவிதைபோல் எழுத்தில் சித்திரிக்கலாம் என்பதைக் கற்றுக் கொள்ள முடியும். 

  ஜெயகாந்தன் சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் இலக்கிய இன்பத்தை அனுபவிப்பதுடன், தங்கள் மனம் உலகளாவிய மானுட நேசத்தோடு விசாலப்படுவதை உணர முடியும். 

(மீள் பதிவு.)
..............................................

மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் 
மற்றும் 
முகநூல் 

கருத்துகள் இல்லை: