சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை
இனிய உதயம் மாத இதழை பல ஆண்டுகளாக நான் வாங்கிப் படித்து வருகிறேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி
பேட்டி. படைப்பாளிகளுடனான ஆழமான, விரிவான
பேட்டி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும். தற்போது இந்த இதழில் நிறைய மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.
2013 ஜனவரி இதழில் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள “புதுமை வேட்டலா? புரட்டு
வித்தையா?” என்ற கட்டுரை எனக்கு
மிகவும் பிடித்தது.
நாளிதழ் ஒன்றில் யாரோ எழுதிய சிலப்பதிகாரம் காலத்திற்கு ஏற்றதாக இல்லை,
சிலம்பின் பேருண்மைகள் நிலயல்ல என்று எழுதியுள்ளார். அதை மறுத்து மிகத் தெளிவாக,
மேற்கோள்களுடன் சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அற்புதமாக நிலை நாட்டியுள்ளார். இது தமிழார்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு
கட்டுரை.
ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுவது தற்போது வழக்கமாகி
விட்டது.
இந்தக் கட்டுரையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியினை மட்டும் இங்கே
பதிவு செய்கிறேன். மீண்டும் கேட்டும்
கொள்கிறேன். இந்தக் கட்டுரையை முழுமையாகப்
படித்துப் பாருங்கள்.
...
நமது இலக்கியங்கள், காப்பியங்கள் , நீதி நூல்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த,
சீர்மை செய்திடவே படைக்கப் பட்டவையாகும்.
‘அல்லவை
செயார்க்கு அறங்கூற்றாதல்’; என்றும் அறத்தின்
மீது, எல்லாக் காலத்திலும் ஆள்வோர்க்கு அச்சம் இருந்திட வேண்டும். அஃது இல்லாமல் போனதால்தான் இன்றைய அரசியலில்
அவலங்கள், அநீதிகள், அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் அரங்கேறுகின்றன.
தவறிழைத்த பாண்டியனைக் கண்ணகி தண்டிக்கவில்லை; யாரும் கொலை செய்யவில்லை.
நீதியை – அறத்தை உயிராகக்
கொண்டவன் அவனாதலின் நீதி தவறினோம் என்று உணர்ந்தவுடன், அக்கணமே உயிர் பிரிந்தது.
மிகவுயர்ந்த சாவு இது. நீதியே மன்னவன் உயிர் நிலையாயிற்று.
‘வல்வினை
வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ
லாக்கியது’
என்றார் இளங்கோ.
கண்ணகியும் காப்பிய நிறைவுக்குமுன், வாழ்த்துக் காதையில்,
‘தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோவில்
நல்விருந்தாயினன் நானவன்
தன் மகள்’
என்று சான்றளிக்கிறார்.
புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
‘இனிய
உதயம்’ மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்