ஒற்றைத் தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு இரவில் கல்வி புகட்டி வரும் அலுவலகப் பணியாளர்...இல்லை... ஆசிரியை!
வீட்டின் வெளியே மாலையும் இரவும் சந்திக்கும் 6 மணிக்கு ஒற்றை விளக்கு
ஒளிர்கிறது.மாணவர்கள் வரிசையில் புத்தகப்பையோடு வந்து சேர்கின்றனர்.
அலுவலகப் பணி முடிந்ததும் நேரே வந்து
சேர்கிறார் ஒரு பெண்.சிறு வயது முதல்
பெரிய வயது வரை பலதரப்பட்ட மாணவர்கள் வணக்கம் சொல்லி அமர, வகுப்பு ஆரம்பமாகிறது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் சிரத்தை எடுத்துப்
பாடம் எடுக்கும் அவர் பெயர் கோமதி!
திருச்சி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் தேர்வுகள் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் கோமதி. திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குடிசைப் பகுதியான சீனிவாச நகரில் கடந்த 16 ஆண்டுகளாக இரவு நேரங்களில் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார் இவர். சாலையில், மற்றும் வீட்டின் ஒற்றைத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் கல்வி கற்றுத் தரும் இவரது பயிற்சி வகுப்பில் இருந்து, இதுவரை சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் உருவாகியுள்ளனர்.
எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை கிட்டத்தட்ட இந்த ஆண்டு மட்டும் 80 மாணவர்கள், கோமதி ஆசிரியைப் பயிற்சியில் கல்வி கற்று வருகின்றனர். வசதி வாய்ப்பில்லாத, தினக்கூலிகளாக இருக்கும் மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியில், அரசுப பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பயிற்சி வகுப்பு எடுத்து கல்வி ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் கோமதி..
ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தனது கனவு, குடும்பச் சூழலால் நிறைவேறாத பொழுதும், இந்த வாய்ப்புத் தமக்கு மனமகிழ்வைத் தருவதாகவும், நல்லாசிரியர் விருது பெற்ற அளவுக்கு மனநிம்மதி அடைந்திருப்பதாகவும் கூறுகிறார், கோமதி. ஆரம்பத்தில் அரசு சாரா தன்னார்வத் தொண்டு அமைப்பு ஒன்று மாதம் ரூபாய் ஆயிரம் கொடுத்து ஆதரவளித்தது. அந்தத் தொகையையும் மாணவர்கள் புத்தகம்,நோட்டுகள்,பேனா போன்ற எழுதுபொருட்கள் வாங்க மாணவர்களுக்கே செலவிட்டு வந்துள்ளார் கோமதி.
தற்போது நிதியை அந்த அமைப்பு நிறுத்திவிட்டதாகத் தெரிவித்த கோமதி, பயிற்சி வகுப்பை நிறுத்த மனமில்லாமல் தொடர்வதாகத் தெரிவித்தார். மேலும், இலவசமாகக் கிடைக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் மதிப்பு கிடைப்பதில்லை என்பதாலே, மாணவர்களிடம் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பு எடுப்பதாகவும் கூறுகிறார், கோமதி.
மழை போன்ற காலங்களில் சாலையில் வகுப்பு எடுப்பது சிரமமாக இருப்பதால், அப்போது அங்குள்ள இரண்டு குடியிருப்பு
வாசிகளிடம் அனுமதி பெற்று அங்கே வகுப்புகளைத் தொடர்கிறார் கோமதி.
அரசு ஒரு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் கோமதி. ஒரு ரூபாய் மட்டுமே பெற்று கொண்டு, ஒற்றைத் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க கோமதி எடுத்து வரும் முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது!
நன்றி : திரு. பாண்டியன் சுந்தரம் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக