1 ஜூலை, 2023

மேன்மக்கள்

மீள்பதிவாக..
நான் வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் படித்தவன். "நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே, இந்த மேசையின் மீதும் வகுப்பறையிலும், முன்பு ஒருநாள் யார் உட்கார்ந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்கார்ந்து படித்த இடம் இது" இப்படியெல்லாம் சொல்லிச் சிலாகித்துக் கொள்வார்கள் எங்கள் பேராசிரியர்கள். ஆனால், ஒருவர்கூட இந்தக் கல்லூரியில்தான் #எம்_சி_இராஜா அவர்கள் பேராசிரியராகப் பணியாற்றினார் என்று சொல்லவே இல்லை. 

அவர்கள் #எம்சி_இராஜா குறித்து எதையெல்லாம் சொல்லாமல் விட்டார்கள் தெரியுமா? 

அவர் ஒரு கவிஞர் என்பதை, 
அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை,
டென்னிஸ் வீரர் என்பதை, 
இந்தியாவின் முதல் தலித் சட்டமன்ற (1919), நாடாளுமன்ற (1927) உறுப்பினர் என்பதை, சென்னை மாநிலத்தில் சாரணர் இயக்கத்தை வடிவமைத்தவர் என்பதை,
இந்தியாவெங்கிலும் 137 மாநாடுகளை தலைமையேற்று நடத்தி இருக்கிறார் என்பதை, 
537 பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் என்பதை,
1919 இல் கௌரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை,
1927 இல் அவரது முயற்சியால்தான் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள் என்பதை, 
ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோருக்கும் நிதி உதவி அளித்திட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை,  1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றினார் என்பதை,
1933 இல் இந்திய நாடாளுமன்றத்தித்தில் தீண்டாமைக்கு எதிரான மசோதாவைக் கொண்டு வந்தார் என்பதை,
1931 இல் இராமநாதபுரம் பகுதி கள்ளர்கள் ஒன்று கூடி தாழ்த்தப்பட்ட மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்று 11 தீயத் தீர்மானங்களை இயற்றிய போது அதைக் கண்டித்து தடுத்ததை,
1937 சென்னை சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலய நுழைவு மசோதாவை வலுசேர்க்கும் வகையில் வடிவமைத்ததை, 
'ஆதிதிராவிடர்' என்ற சொல்லாடலை இவர்தான் அரசு ஆவணங்களில் சேர்த்தார் என்றதை,
அவரது அப்பா 1857 ஆம் ஆண்டு புரட்சியில் பங்கேற்றவர் என்பதை,
அவரது தாத்தாவும் இராணுவ வீரர் என்பதை, இப்படி இன்னும் பல சாதனைகளை.

- Bharath Thamizh

நன்றி :

பாரத் தமிழ்,
முகநூல் 
மற்றும் 

கருத்துகள் இல்லை: