15 நவ., 2020

க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலம் தேற பிரார்த்தனை

இன்று காலையில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் தொடர்பான கட்டுரை வெளியானதிலிருந்து அவருடைய உடல்நிலையை விசாரித்து ஏராளமான செல்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.  நண்பர்களின் கவலையையும் அக்கறையையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், நானறிந்த அளவிலான கீழ்க்காணும் தகவல்களைப் பகிர்கிறேன்.

* திரு.ராமகிருஷ்ணன் உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மை. கடுமையான மூச்சுத்திணறலை அவர் எதிர்கொள்கிறார். செயற்கை சுவாசத்திலேயே இருக்கிறார். நேற்று மாலை நிலைமை மோசம் அடைந்தது. 76 வயது முதுமை + நீரிழிவு நோய் என்கிற இரு பெரும் சவால்களை அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எதிர்கொள்கிறார்கள்.  அதேசமயம், சில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன.

* கரோனா பிடியிலிருந்து அவர் விடுபட்டுவிட்டார். கரோனா நுரையீரலில் உண்டாக்கியிருக்கும் சேதங்களே ராமகிருஷ்ணன் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை. ஏனைய முக்கிய உறுப்புகள் அனைத்தும் பெரிய பழுதின்றி இயங்குகின்றன. சுயநினைவோடு இருக்கிறார். நேற்று காலை புதிதாக வெளிவந்த அகராதி பிரதிகளை மருத்துவர்களுக்கு அளிக்கும்போதுகூட பேச இயலாவிட்டாலும், ஒரு சில வார்த்தைகளை எழுதிக்காட்டி தகவல்களைத் தெரிவித்தாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் உறுதியான பிரக்ஞையுடன் துணிச்சலாகப்  போராடுகிறார். ஓமந்தூரார் மருத்துவமனை அரசு மருத்துவர்களும் ஊழியர்களும் ராமகிருஷ்ணன் உயிரைக் காக்க பெரும் முனைப்போடு செயலாற்றிவருகின்றனர்.

* நம்முடைய நல்லெண்ணமும், பிரார்த்தனையும்கூட செயலாற்றும்; அவர் உறுதியாக உடல்நலம் தேறிவருவார் என்று நம்புகிறேன். அவர் நம்பும் தமிழும் அவருக்குத் துணை நிற்கிறது!

நன்றி :

கருத்துகள் இல்லை: