10 மார்., 2021

நூல் நயம் : சி.சு.செல்லப்பாவின், "வாடிவாசல்"

"வாடிவாசல் ".
சி சு செல்லப்பா அவர்கள் எழுதியது. கிளாசிக் ஒரு நாவல் .காலச்சுவடு பதிப்பகம் விலை ரூபாய் 100 .மொத்த பக்கங்கள் 105 .முதற் பதிப்பு 1959. காலச்சுவடின் முதல் பதிப்பு 2003 .
25 ஆம் பதிப்பு 2021.

புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ சென்னையில் கடைசி நாளன்று சென்றேன். நேரே சென்றது காலச்சுவடு அரங்கு.
ஒரு நிமிடம் நின்று கவனித்தேன். வருகின்றவர்கள் எல்லாம் பார்வையை விடுகிறார்கள் .வாடிவாசல் புத்தகத்தை எடுத்துக் கொள்கிறார்கள் .சென்று கொண்டே இருக்கிறார்கள் .நான் நின்ற 20 நிமிடங்களில் இருபது புத்தகங்கள் விற்கப்பட்டு விட்டன.

சில புத்தகங்களின்  வசீகர தலைப்பு அந்த விதமாக அமைந்து விடுகிறது.
அதில் *வாடிவாசல் *ஒன்று.

########₹

         சி. சு .செல்லப்பா அவர்கள் 86 ஆண்டுகள் முழு வாழ்க்கை வாழ்ந்தார் .வத்தலகுண்டு அருகில் உள்ள சின்னமனூர் சொந்த ஊர் . சுதந்திரப் போராட்ட வீரர்.
      சிறுகதை ,நாவல் ,விமர்சனம் ,கவிதை மொழிபெயர்ப்பு ,ஆகிய துறைகளில் செல்லப்பா பங்களித்திருக்கிறார்.
          சந்திரோதயம் தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். வானம்பாடி கவியரங்க கூட்டத்தில் இவரது பெயரில் எனக்கு கல்லூரியில் படிக்கும்போது மிகவும் பரிச்சயமானது. இவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ் .மிக மோசமான பொருளாதார நெருக்கடியை பொருட்படுத்தாமல் அந்த இதழை பத்து ஆண்டுகளுக்கு மேல் கொண்டு வந்தார் .பரிசு பணம் புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரள கடைசிவரை மறுத்த படைப்பாளி அவர் .
     இவருக்கு புகைப்படம் எடுப்பதில் தனி ஈடுபாடு உண்டு .
       ஜல்லிக்கட்டு பற்றி தமிழில் வெளிவந்த முதல் படைப்பு என்று வாடிவாசலைக் குறிப்பிடலாம்.

###

       சி .சு .செல்லப்பா அவர்கள் தனது முதல் பதிப்பின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

         ஒரு தவ்வு,இரண்டு தவ்வு தொகுப்பு மூன்றாவது தவ்வுக்கும்  அவன் நின்று விட்டான்,;மூன்று தடவையும்  காளை அவனை உருட்டி ஏறிந்து கிழித்திருக்கவேண்டும் .

        ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனிதனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டில் ஒரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல்.

         அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உயிருக்கே உலை வைத்த காரி ,அதன் கொம்பில் இன்னும் அப்பன் ரத்தம் வழிந்து கொண்டு இருப்பது போன்ற பிரமை ஏற்பட, அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்றபோது அந்த கிழக்கத்திய வாலிபன் பிச்சி......

   அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம்
 சிந்தலாம் ; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது .எதன் கை ஓங்குதோ அது தான் தூக்கும் .மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அந்த விளையாட்டு தெரியாது. அதுதான் ஜல்லிக்கட்டு. மதுரை ராமநாதபுரம் வட்டாரத்தில் என்றைக்கும் பார்க்கிற விளையாட்டு .அதை வைத்து எழுதப்பட்ட கதை இது.

   புத்தகத்தைப் படித்து மூடி வைத்து விட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்கும் .இந்தக் கதை மூலம் ஒரு புது உலகத்தையே அறிமுகப்படுத்துவதாக நான் நினைக்கிறேன்," என்று தனது முன்னுரையில் சி .சு .செல்லப்பா அவர்கள் 1959இல் எழுதியிருக்கிறார்.

######

           பெருமாள் முருகன் தனது முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
அதிகாரம் ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றின் மீதான எதிர்ப்புச் சலனங்கள் வெளிப்படும் இடமாகவும் அந்த ஜல்லிக்கட்டு தளம் இருக்கிறது... 

       எதிர்ப்போர் பக்கமிருந்து ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் சக்திகள் இங்கே எள்ளி நகையாடப்படுகின்றன .
  அந்த சக்திகளின் ச, துரோகம் ஆகியவையும் மிகச் சாதாரணமாக ஒதுக்கப்படும் களமாக வாடிவாசல் அமைந்துவிடுகிறது .இது போர்க்களம். போரின் போது வெளிப்படும் எல்லா வகையான முகங்களையும் இங்கே காணமுடிகிறது .ஜல்லிக்கட்டு என்பதே இங்கு ஓர் எதிர்ப்பின் வடிவமாக மாறிவிடுகிறது...
    சி .சு .செல்லப்பா வாடி வாசலை தொடங்கி வளர்த்துச் செல்லும் விதம், பாத்திரங்களை அதனூடே  உருவாக்கும் நுட்பம் ,படைப்பு ,எட்டக்கூடிய விரிவு பற்றிய உணர்வு அனைத்தும் உயர்ந்த படைப்பாளர் ஆக அவரை காட்டுகின்றன ",என்பது பெருமாள்முருகன்  முன்னுரைக்கிறார்..

###
எனக்கு நான்கு தம்பிகள்.
எல்லோரும் நன்றாக படித்தார்கள். இரண்டாம் தம்பி கிராமத்திலேயே ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர் கல்வி பெற நகரத்திற்கு வருவதற்கு அவனால் ஏதுவாக வில்லை .எனவே எனது தந்தைக்கு உதவியாக நிலம் நீச்சு கவனித்துக் கொண்டான் .மாடு மேய்க்கவும் ஆடு மேய்க்கவும் கழனி வாழ்  மக்களோடு கலந்துரையாடவும் நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டான் .

      அவனுக்கு ஏனோ ஒரு காளைமாடு மீதும் ,சேவல் மீதும் அதன் கோழிகள் மீதும்,ரேக்ளா வண்டி ஓட்டுவதற்கும் அபிரிதமான சுகம் கண்டு கொண்டான்.

      மாடு விடும் விழாவிற்கு செல்வான்.மாடு பிடிக்க மாட்டான் .ஆனால் அதற்கான மாடு ஒன்றினை வீட்டிலேயே தயார் செய்தான். 1966 இலேயே அதன் விலை 1000 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்போதெல்லாம் சேவல் சண்டை போட்டி நடக்கும் .சேவல் கூட அவன் தயார் செய்து வைத்திருப்பான். அவ்வளவு ஆர்வம் அவனுக்கு .மிருக விளையாட்டுக்களில் உடனிருந்து விளையாடிக் கொள்ள .

         நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து காலாண்டு தேர்வு விடுமுறைக்கு வீடு சென்றபோது அவன் என்னிடம் சொன்னான் .அண்ணா அடுத்தமுறை வாடிவாசல் செல்ல வேண்டும் என்று .அவன் எதோ உளறுகிறான் என்று நினைத்தேன் .வாடிவாசல் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.அப்படியே அவன் ஒரு குறிக்கோளோடு மாட்டினையும் சேவலையும் தயார் படுத்திக் கொண்டிருந்தான். 
         அவனது பெயர் ஆனந்தன் ,நித்தியானந்தன் .கனவு நித்தியமானது .ஆம். ஆனந்தன் ஆனந்தம் ஆகிவிட்டான்.

              இப்பொழுது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அவனது ஆர்வம் மிக்க கண்களை என்னால் காணமுடிகிறது .மாடு பேசும் கலை அறிந்தவன் .அவன் சேவல் சம்பாஷிக்கின்ற மொழியை அறிந்தவன். அவன் சொல்வதற்கெல்லாம் இரண்டுமே தலையசைக்கும் ,கால் அசைக்கும் ,உடலை அசைக்கும் ,ஐம்புலனும் ஒருசேர இவனை கவனிக்கும் .என்ன செய்வது பெருமூச்சுதான் வருகிறது எனக்கு.

##########.

வாடிவாசல் நாவல் இருந்து ஒரு துளி:

         காரியின் குணத்தை அந்த வட்டாரத்தில் பார்ப்பதற்கு கிடைத்தது அது தான் முதல் சந்தர்ப்பம் .மனிதனுக்கு சரியாக அறிவோடு அது நடந்து கொண்டதுதான் பிரமிக்கத் தக்கதாக இருந்தது .அவனைப் பார்த்துக் கொண்டே குளம்புகளால் தரையை தோண்டி,பிராண்டி, மண்ணை கிளறி விட்டது .

        காளைக்குச்  சூடு ஏறி விட்டதைக் கண்ட கூட்டம் அது அந்த இடத்தை விட்டு போனால் தேவையில்லை,விளையாட்டு போதும் என்ற திகிலுடன் போ போ என்று சாந்தப்படுத்தி குரல் கொடுத்துக் கொண்டிருந்தது .
        ஆனால் காரியோ தன் சவாலுக்கு முடிவு தெரியும்வரை இம்மியும் நகரப் போவதில்லை என்ற  மன உறுதி காட்டின மாதிரி நின்ற இடத்திலேயே கால்களையும் மாறி மாறி போட்டு ,மூச்சு உதவுவதும், காலடிப்பதும் கொம்பலைப்பதுமாக  நின்றது.

         மாட்டை அடக்குவது என்பது மாட்டின் சொந்தகாரன் தன்னையே அடக்குவது போல ;ஜமீன்தாரை மடக்குவது போல .மாடு அடுக்கப்பட்டு விட்டால் ஜமீன்தாரையே அடக்கி விட்டதாக  கருதப்படுகிறது.
அதன்பிறகு காளை உயிர் வாழ்தல் அரிது.

      காளை என்பது ஜமீன்தாருக்கு தன் அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. தன் காளையை அடக்க யாராலும் முடியாது என்பது ஒருபுறமிருக்க அடக்க யாரும் வரக்கூடாது எனும்
அவரின் எதிர்பார்ப்பு மிகவும் முக்கியமானது..
     மனித ஏற்றத் தாழ்வுகள் பொது இடத்தில் அரங்கேறுகையில் உண்டாகும் சாதக பாதகங்களையும் வாடிவாசல்  படம் பிடித்துக் காட்டுகிறது.

***""
         ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் .அது ஒரு விளையாட்டும் கூட .உயர் தொழில்நுட்பம் சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷம் ஊட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதையும் ஞாபகத்தில் கொண்டு வாடி வாசலில் நிற்க வேண்டும் மாடு 
அணைபவன் .
      அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்கு காத்துக்கொண்டிருக்கும். காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை.
       அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்த கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. நுட்பமாகவும் கூட .ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது .படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை இது.

      இந்தக் குறுநாவல் 1959-ல் எழுத்து பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
பீகாக் பதிப்பகம் வெளியிட்ட வாடிவாசல் சிறுகதைத் தொகுப்பில் இந்த குறுநாவல் 1992 இல் இடம்பெற்றது.இந்தியா டுடே சிறப்பு மலர் 1994 இல் வெளிவந்தது.

       நானும் ஏதோ ஒரு ஜல்லிக்கட்டு வாடிவாசல் என்று சொல்கிறார்களே என்று பெரும் போக்காக தான் இருந்தேன். ஏறுதழுவுதல் என்று சொன்னபோதுதான் எனக்கு அந்த காலத்தில் கலித்தொகை சங்க இலக்கியங்கள் பாடல் எல்லாம் நினைவுக்கு வந்தது .

     காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறு பிறப்பிலும் விரும்பாத ஆயர் மகளிரை ,*கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்*, என்று கூறுகிறது கலித்தொகை.

       இருந்தாலும் எனக்கு அதன் தாத்பரியம் உத்வேகம் உள்ளுணர்வு எல்லாம் புரிவதற்கு வெகுநேரம் ஆனது.

        நமது சென்னை மெரினா பீச் கடற்கரையில் கூடிய கூட்டத்தை பார்க்கும் போது மலைத்துப் போனேன்.

          அதேபோல அமெரிக்கா நகரெங்கும் உள்ள தமிழர்கள் குறிப்பாக எனது மகனும் மருமகளும் மகனும் மகளும் பேரப்பிள்ளைகளும் கொடியேந்தி ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஒரு நாள் முழுக்க பட்டினி கிடந்து ,கடந்து,போராடிய போராட்டம் எனக்கு கண்முன் நிற்கிறது. அதை கண்ட பிறகுதான் எனக்கு ஜல்லிக்கட்டு வாடிவாசல் என்றால் பெருமையாக இருக்கிறது.

நன்றி :

கருத்துகள் இல்லை: