19 ஏப்., 2020

உயிர் என்பது என்ன? சுஜாதா பக்கம்

சுஜாதா பக்கம், கல்கி

உயிர் என்பது என்ன ? நாம் எப்போது உயிர் பெறுகிறோம் ? பிறக்கும் போதா இல்லை சூலூரும் போதா இல்லை அதற்கும் முன்னாலா என்று கேள்வி கேட்க வைக்கிறது. டைம்ஸ் பத்திரிகை செய்திக்குறிப்பு ஒன்று. (இதை வழக்கறிஞர் டி.சி.எ. ராமானுஜம் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்)

'இன்விட்ரியோ முறை வந்து, கர்ப்பப்பைக்கு வெளியே ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் ஒரு பெட்ரி டிஷ்ஷில் சேர வைத்து மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் வசதி வந்ததும் பிரிட்டனில் உள்ள கிளினிக்குகளில், ஐம்பதாயிரம் எம்பிரியோ என்னும் கருமுட்டைகள் உறைய வைக்கப்பட்டு சூளுற தயாராக இருக்கின்றனவாம். 1990ல் பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கருவுறாத எம்பிரியோக்களை அழித்து விடலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள் .

இன்விட்ரியோ எப்போதும் வெற்றி பெறுவதில்லை. அதனால்தான் தேவைக்கதிகமாகவே முட்டைகள் கைவசம் வைத்திருப்பது வழக்கம். அதனால் சேர்ந்து போன கருக்களை என்ன செய்வது என்று தர்மசங்கடம். இவை ஒரு மணற்துகள் அளவுதான் இருக்கும். இருந்தும் இவை எல்லாம் உயிர்கள் என்கிறது வாட்டிகனின் கத்தோலிக்க மதத்தலைமை. அதனால் இவற்றைத் 'தத்து' எடுத்துக்கொள்ள இத்தாலியில் நூற்றுக்கணக்கான பெண்கள் தயாராக இருக்கிறார்களாம்.

நிஜமாகவே இவை உயிரா ? அல்லது உயிராகக் கூடிய சாத்தியமுள்ள முன்னுயிர்களா? இவற்றை அழிப்பதால் உயிரை அழிக்கிறோமா?

அறிவியல் தரும் விடையின்படி உயிர் என்பது ஒரு செல், கூட்டணு. ஆர்.என்.ஏ, டி.என்.ஏ, க்ரோமோசோம், ப்ரோடீன் கொண்ட ஒரு மிகப் பெரிய கூட்டணு. அதில் கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன், oxygen இவைதான் சரம்சரமாக உள்ளன.

உயிருள்ள கூட்டணுவுக்கும் உயிரற்ற கூட்டணுவுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் Reப்ளிகேஷன் படியெடுக்கும் திறமை. செல் பதியாகப் பிரிந்து, தன் சுற்றுப்புறத்தில் உள்ள அணுக்களுடன் சேர்ந்து ஒன்று இரண்டாகிறது. இரண்டு நாலாகிறது. அது என்ன செல் என்கிற செய்தி, அதன் ரசாயன அமைப்பிலேயே பொதிந்திருக்கிறதன்படி கண்ணாகிறது, தோலாகிறது, ரோமமாகிறது, நகமாகிறது. மனிதப்பிறப்பில் பெண் தரும் முட்டைக்கரு தானாகவே இந்த இரட்டிப்பு நிகழ்ச்சியைத் தொடங்குவதில்லை. ஆணின் விந்து வரக் காத்திருக்கிறது. அது நுழைந்ததும்தான் இதில் பாதி அதில் பாதி என்று செய்திகளைக் கொண்டு தன் இரட்டிப்பைத் தொடங்குகிறது.

எனவே, பெண்ணின் மூட்டைக் கரு முழு உயிர் அல்ல, அரை உயிர். அறிவியல் உயிரின் ரகசியத்தைத் கண்டு பிடிக்குமா? செல்களின் கட்டட அமைப்பு, அவை இரட்டிக்கும் விதம், டி.என்.எ., வம்ச அடையாளங்களில் டி.என்.எ.வின் பங்கு, நம்முள் இருக்கும் நோய்த்தடுப்பு முறைகள் இவற்றையெல்லாம் அறிவியல் அறிந்திருக்கிறது. ஆனால் உயிரின் ரகசியத்தை அறிந்து கொள்ள அறிவியல் மட்டும் போதாது; மற்றொரு ஞானம் தேவை என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். எத்தனை அறிவு பெற்றாலும் உயிரின் ரகசியத்தை அறியவே முடியாது என்கிறார்கள்.

இது ஒரு ஆழமான தத்துவ விசாரம். பார்த்து, அறிந்து, வியக்க முடிகிறதே தவிர, காரணம் என்ன என்பதற்கு, அறிவியல் விடை தருவதில்லை. வேதாந்தத்திலோ கடவுள் தத்துவதித்திலோதான் பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

நன்றி: திரு.கிருஷ்ணன் ரவி, சுஜாதாவின் கடைசி பக்க ரசிகர் குழு, முகநூல்.

கருத்துகள் இல்லை: