19 ஜூன், 2020

நூல் நயம்

மோகமுள்ளைவிட செம்பருத்தியை அதிகம் பிடித்திருப்பதற்கு பழமைவாதக் கண்ணோட்டம்தான் காரணமா?

அண்மையில் நம் குழுவின் உறுப்பினர் ஆர்.வி.ராஜு ஒரு பதிவு இட்டிருந்தார். அதில்"எனக்கு மோகமுள்ளைவிட செம்பருத்தியைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது. ஒருவேளை நான் தான் சரியாகப் படிக்கவில்லையோ?" என்று எழுதியிருந்தார். அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் தங்களுக்கும் செம்பருத்திதான் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இது எனக்கு வியப்பை அளித்தது. நானும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதில் "எனக்கு செம்பருத்தியை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை" என்று கூறி, காரணத்தையும் கூறியிருந்தேன். இதைப் படித்துவிட்டு, நண்பர் முல்லைநாதன் என் பெயரை குறிப்பிட்டு"உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டமா? ஜீரணிக்க முடியவில்லையே" என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

எனக்கும் ஜீரணிக்க முடியவில்லை. ஜானகிராமனிடமிருந்து இப்படி ஒரு நாவலா(செம்பருத்தி) என்று. அதனால்தான் எனக்கு செம்பருத்தியைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.

அண்மையில் நான் ஜானகிராமனின் நான்கு நாவல்களை (மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி) அடுத்தடுத்து வாசித்தேன். மோகமுள்ளை இரண்டாவது முறையாகவும், அம்மா வந்தாளை மூன்றாவது முறையாகவும், மரப்பசுவை இரண்டாவது முறையாகவும் வாசித்தேன். செம்பருத்தியை முதன்முறையாக வாசித்தேன்.

மற்ற மூன்று நாவல்களையும் ஏற்கனவே வாசித்திருந்தபோதிலும் மீண்டும் வாசிக்கும்போது ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். செம்பருத்தியை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. மிகவும் பொறுமை தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஐம்பது பக்கம் வீதம் வாசித்ததில் ஏறக்குறைய 500 பக்கங்களை வாசித்து முடிக்க பத்து நாள் தேவைப்பட்டது. இடையில் வாசிப்பதை நிறுத்திவிடலாமா என்றுகூட யோசித்திருக்கிறேன். அந்த அளவுக்கு என் பொறுமையை சோதித்தது செம்பருத்தி. இருந்தாலும் ஒரு முறையேனும் இந்த நாவலை வாசித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாவலைத் தொடர்ந்து வாசித்து முடித்தேன். இதுபோன்ற அனுபவம் சுந்தர ராமசாமியின்"குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" நாவலை வாசிக்கும்போதும் ஏற்பட்டது.

செம்பருத்தியின் கதையும் மனதில் ஒட்டவில்லை; கதாபாத்திரங்களும் ஒட்டவில்லை. ஏன் தான் தி.ஜா. செம்பருத்தியை எழுதினாரோ என்று நொந்துகொண்டேன். மோகமுள்ளையும் அம்மா வந்தாளையும் மரப்பசுவையும் மீண்டும் பலமுறை வாசிக்க உத்தேசித்திருக்கும் நான் திரும்பவும் செம்பருத்தியை வாசிப்பேனா என்பது சந்தேகம்தான்.

பிரசன்னா ராமசாமி மோகமுள்ளை ஓவர் ரேட்டட் (மிதமிஞ்சி மதிப்பிடப்பட்ட) நாவல் என்கிறார். செம்பருத்தி ஓ.கே. என்கிறார். இது எனக்கு வியப்பை அளித்தது. ஏன் பிரசன்னாவுக்கு மோகமுள்ளைப் பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை. விமர்சகர்கள் க.நா.சுவுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் மோகமுள்ளைப் பிடித்திருந்தது.

ஏன் சிலருக்கு மோகமுள்ளைக் காட்டிலும் செம்பருத்தி அதிகம் பிடித்திருக்கிறது என்று யோசித்தேன். செம்பருத்தி சிக்கல் இல்லாத கதை. ஒழுக்கவாதிகளுக்கு, பழமைவாதிகளுக்குப் பிடிக்கக்கூடிய கதை. ஆனால் மோகமுள் அப்படியில்லை. சிக்கலான கதை. பாபு தன்னைவிட10 வயது மூத்த யமுனாவின்மேல் மோகம் கொள்கிறான். கடைசியில் தன் காதலில் வெற்றி அடைகிறான். இது எப்படி ஒழுக்கவாதிகளுக்கும், பழமைவாதிகளுக்கும் பிடிக்கும்? அவர்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்று வரும்போது ஆணைவிட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்க வேண்டும். எனவே, இந்தப் பழமைவாதக் கண்ணோட்டமே மோகமுள்ளைவிட செம்பருத்தியை அதிகம் பிடித்த நாவலாகக் குறிப்பிடத் தூண்டுகிறது.

என்னைப் பொறுத்தவரையில் மோகமுள் ஒரு அற்புதமான நாவல். செம்பருத்தி ஒரு சாதாரணமான நாவல். தி.ஜா. மோகமுள்ளை எழுதாது போயிருந்தால் நாம் சிறந்த இலக்கியத்தை இழந்திருப்போம்; செம்பருத்தியை எழுதாது போயிருந்தால் அதனால் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

Mogamul is a classic. Whereas Chemparuthi is an ordinary novel; a pointless novel.

நன்றி: திரு சுந்தர் கோபாலகிருஷ்ணன், தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம் & முகநூல்.

கருத்துகள் இல்லை: