பொன்விழா காணும் தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தெய்வ வணக்கம் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலாக அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று!
இன்றைய தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, குலசேகரன்பட்டிணம் என்ற பழம்பெரும் நகரை பூர்வீகமாக கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசு பணி நிமித்தமாக இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழாவில் குடியமர்ந்த சைவத்திரு பெருமாள் பிள்ளை − மாடத்தி அம்மாள் தம்பதியினருக்கு 04/04/1855 ல் மகனாக பிறந்த குழந்தைக்கு சுந்தரம் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள்.
சிறு வயதிலேயே சைவ சமயத்தின் மீது கொண்ட அளவு கடந்த பற்றால் பன்னிரு திருமுறைகளையும் முறையாக கற்று தேர்ந்தார். இவர் 1876ம் ஆண்டு இளங்கலை தேர்வில் தேர்ச்சி பெற்று 1877ல் தமது ஆசிரியர் பணியை துவங்கினார். திருநெல்வேலி ஆங்கில தமிழ் கல்வி சாலையின் தலைவராக பணியாற்றி அக்கல்வி சாலையை இந்து கல்லூரி என தரம் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் பெ.சுந்தரம் பிள்ளை.
திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினை நிறுவி சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் பெருந்தொண்டாற்றினார். இவர் 1891ம் ஆண்டு "மனோன்மணியம்" என்ற நாடக காவியத்தை இயற்றினார். அது இவர் இயற்றிய நூல்களில் ஒப்பற்றதாகும். பெ.சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு ஞானாசிரியராக திகழ்ந்தவர் திருநெல்வேலி − கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவார். இத்தொடர்பே மனோன்மணியம் நாடகத்தில் சுந்தர முனிவர் என்ற பாத்திர படைப்பிற்கு காரணமாக இருந்தது. மேலும் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனத்தின் கிளை மடமான திருநெல்வேலி உமையொருபாகம் குருக்கள் மடத்தில் சமய தீக்ஷை பெற்றதாகவும் செவி வழி செய்தி உண்டு.
பொதுவாக ஒரு காப்பியத்தில் ஆசிரியர் இறைவணக்கம் தான் முதலில் பாடுவர். ஆனால் மனோன்மணியம் நாடகத்தில் ஆசிரியர் அவர்கள் "தமிழ்த்தெய்வ வணக்கம்" என்ற தலைப்பில் கீழ்க்கண்ட பாடலை இயற்றியுள்ளார்.
தமிழ்த் தெய்வ வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!
இந்த பாடலில் "படைத்தளித்து", "பரம்பொருள்" ஆகிய வார்த்தைகள் வரும் வரிகளையும், அண்டை மாநில மொழிகள் பற்றி வரும் வரிகளையும், "ஆரியம்" என்ற வார்த்தை வரும் வரியையும் நீக்கம் செய்து 17/06/1970 அன்று அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் "தமிழ்த்தாய் வாழ்த்து" என்று அறிவிக்கப்பட்டது.
மெல்லிசை மாமன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையில் பிரபல பின்னணி பாடகர்களான T.M.செளந்தரராஜன் மற்றும் P.சுசீலா ஆகியோரின் பின்னணி குரலில் அந்த பாடலுக்கு இறுதி இசை வடிவம் கொடுக்கப்பட்டது. தற்போது உள்ள பரிணாம வளர்ச்சியில் அந்த பாடலுக்கு பல மெட்டுக்களில் பல இசயமைப்பாளர்கள் இசையமைத்து வருகின்றனர். அரசு விழாக்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலிக்கும் "நீராருங் கடலுடுத்த" என்ற தமிழ்த்தெய்வ வணக்க பாடல் "தமிழ்த்தாய் வாழ்த்து" என்று அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று (ஜூன் 17).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக