5 ஜூலை, 2020

இன்றைய தத்துவம் : அறிதலியம் (Epistemology)(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

இன்றைய தத்துவம்

Epistemology என்று அழைக்கப்படும்
அறிதலியம்

நேற்றைய பகுதியின் தொடர்ச்சி.....👇🏽
[7/5, 08:36] Neyam-Satya: 

அறிவைச் சேர்த்தல்

அறிவைச் சேர்த்தல்(acquiring knowledge) என்பது பல வழிகளில் நடை பெறுகின்றது.

புலன்சாரா அறிவும் புலன்சார் அறிவும்

புலன்சாரா அறிவு (a priori knowledge) என்பது நமக்கு நம் புலன்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன) வழியாக வராமல், வேறு வழியாக வந்த அறிவைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக, சிந்தனை செய்வதால் வரும் அறிவு புலன்சாரா அறிவு எனலாம்.

புலன்சார் அறிவு(a posteriori knowledge) என்பது நம் புலன்கள் வழியாக வருவது.

இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை விளக்க புரூசு இரசல் (Bruce Russell) ஒரு எடுத்துக் காட்டு கொடுக்கின்றார்.

2 + 2 = 4.

2 குவளை நீரில், மேலும் 2 குவளை நீரை ஊற்றினால், அது 4 குவளை நீராகும்.

2 + 2 = 4 என்ற கருத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டால், அந்தக் கருத்து அவரது புலன்சாரா அறிவு ஆகும். ஏனெனில், இந்தக் கருத்து அவர் சிந்தனையால் வந்தது; புலன்களின் பட்டறிவால் (experience) வந்ததன்று. ஆனால், 2 குவளை நீரும் 2 குவளை நீரும் சேர்ந்தால் 4 குவளையாகும் என்பது புலன் சார்ந்த அறிவு; பட்டறிவினால் வந்தது.[4]
படிமலர்ச்சி உளவியல் (Evolutionary psychology) - இன் படி, மனிதரிடத்தில், புலன்சாரா அறிவு என்பது மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றது; பெரும்பாலான அறிவு புலன்சார் அறிவே.

பகுப்பாய்வு தொகுப்பாய்வு பாகுபாடு

இம்மானுவேல் கான்ட் (Immanuel Kant) என்ற செருமானிய மெய்யியல் அறிஞர் (1724-1804) தாம் எழுதிய பகுத்தறிவு பற்றிய திறனாய்வு (Critique of Pure Reason) என்ற நூலில், பகுப்பாய்வுக்கும் (analytic) தொகுப்பாய்வுக்கும் (synthetic) உள்ள பாகுபாட்டைக் கூறியுள்ளார். ஒரு கூற்று (proposition), அது தன் இயல்பிலேயே, உண்மையை வெளிப்படையாகக் கொண்டிருக்குமேயானால், அந்தக் கூற்று பகுப்பாய்வுக் கூற்று (analytic proposition) எனப்படும்.
எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பி எனக்குச் சித்தப்பா ஆவார்" எனும் கூற்று ஒரு பகுப்பாய்வுக் கூற்று ஆகும். ஏனெனில், இந்தக் கூற்றின் பொருளை, அதில் வரும் சொற்களையும், அவை வரும் வரிசை முறையையும் (sequence) வைத்து, நாம் கணித்துக் கொள்ளலாம். மாறாக, தொகுப்பாய்வுக் கூற்றின் (synthetic proposition) பொருள் உலக நடைமுறையோடு தொடர்பு கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பியின் தலை முடி கருப்பு" என்ற கூற்று, தலை முடியின் நிறம் என்னவென்று பார்க்காமல், சரியா தவறா என்று கூற இயலாது. குயின் ( Willard Van Orman Quine) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞர் (1908-2000), கான்ட் கூறியது முற்றிலும் உண்மை அல்ல என்று கூறி உள்ளார். அதன் பிறகு, அண்மைக் காலங்களில் வந்த கட்டுரைகள், பகுப்பாய்வுக்கும் தொகுப்பாய்வுக்கும் உள்ள பாகுபாட்டை இன்னும் தெளிவாகக் காட்டியுள்ளன.

அறிவியல் - ஒரு அறிவை ஆக்கும் பணி

அறிவியல் என்பது ஒரு செம்மைப் படுத்தப்பட்ட அறிவு பெருக்கும் பணி என்று கூறலாம். உலகில் நடக்கும் நிகழ்வுகளை நன்கு கண்டறிந்து, விதிகளை உருவாக்கி, அந்த விதிகளை வைத்துக் கொண்டு உலகைப் புரிந்து கொள்ள எடுக்கப்படும் முயற்சி அறிவியலில் செய்யப் படுகின்றது.

பின்னோக்கு வாதப் பிரச்சினை

அறிவு ஆய்வியலில், ஒரு கருத்து Q, உண்மெய்யானது எனக் கருத வேண்டுமானால், அதற்கு போதுமான ஆதாரங்கள் (justifications J1) இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆதாரங்களுக்கு ஆதாரங்கள் (J2) வேண்டும். இது மட்டுமில்லாமல், J2-வுக்கு ஆதாரங்கள் (J3) வேண்டும். மேலும், J3-வுக்கு J4 வேண்டும். இப்படியே இது முடிவில்லாமல் போக வாய்ப்புண்டு. இந்த பிரச்சினையை பின்னோக்கு வாதப் பிரச்சினை (Regress problem) என அழைப்பர்.

பின்னோக்கு வாதப் பிரச்சினைக்குத் தீர்வுகள்

பல ஆய்வாளர்கள், பின்னோக்கு வாதப் பிரச்சினைக்கு, தீர்வுகள் எனத் தாங்கள் கருதியதை முன் வைத்தனர். அவற்றில் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

அடிப்படைக் கருத்துக்கள் வாதம்

அடிப்படைக் கருத்துக்கள் வாததத்தின் படி (Foundationalism), எல்லா கருத்துக்களுக்கும் ஆதாரம் கொடுக்க தேவை இல்லை. ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை என கருத முடியும். எடுத்துக் காட்டாக, அவை நம் பட்டறிவு (experience) வழியாக வரலாம். இந்த வாதத்தில் உள்ள ஒரு சிக்கல், ஆதாரம் தேவை இல்லை என்றால், யார் ஒருவரும் தமக்கு வேண்டிய எந்த கருத்தையும் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியும்.

ஒத்திசை வாதம்

ஒத்திசை வாதத்தின் படி (Coherentism),பின்னோக்கு வாதத்தில் கூறப்படும் முடிவில்லா ஆதாரங்கள் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உண்டு. அதாவது, Q என்ற கருத்துக்கு J1 என்பது ஆதாரம் என்றால், J1-வுக்கு J2 ஆதாரம் என்றால், J2-வுக்கு J3 ஆதாரம் என்றால்; அதாவது, Q → J1, J2 → J3, ... , Jn-1 → Jn, என்றாகுமாயின், Jn, J1-க்கு ஆதாரம், அதாவது, Jn → J1 என்று திருப்பிச் சுற்றி விடலாம். இப்படிச் செய்தால், ஆதாரங்களின் தேவை முடிவில்லாமல் போய்க் கொண்டு இராது.
ஒத்திசை வாதத்திலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. இதில் ஆதாரங்கள் தவறாக இருக்கும் போதும், திரும்பிச் சுற்றி விடலாம். எனவே, ஒத்திசை வாதமும் பின்னோக்கு வாதப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையவில்லை.

அறிவு ஆய்வில் உட்பிரிவுகள்

அறிவு ஆய்வுத் துறையில், கோட்பாடுகளுக்கு ஏற்ப, கீழ்க் கண்ட உட்பிரிவுகள் (கிளைகள்) உள்ளன.

வரலாற்று அறிவாய்வியல்

வரலாற்று அறிவாய்வியல் (Historic epistemology) பிரிவில், இதுவரை அறிவாய்வியல் வரலாற்றில் அறிவு தொடர்பான கேள்விகளும், அதற்கான விடைகளும் எவ்வாறு இருந்துள்ளன என்பன பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. அறிவாய்வியலில் அன்று கேட்கப் பட்ட கேள்விகளை இன்று கேட்பதில்லை.

புலனறிவாதம்

புலனறிவாதம் (Empiricism) என்ற இந்தப் பிரிவில், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு நம் ஐம்புலன்களின் வழியாக வருகின்றது என்ற நிலைப்பாடு எடுக்கப் படுகின்றது. (கணிதம் போன்ற துறைகள் இதற்கு விதிவிலக்கு.)
நேர்க் கருத்து வாதம் (positivism), பொருள் முதல் வாதம் (realism), பொது அறிவு (common sense) வாதம் என்பன புலனறிவாதத்தின் உட்பிரிவுகளாகும்.
நேர்க் கருத்து வாதத்தின் படி, நம் அறிந்திருக்கும் ஒரு சில நேர்மறையான கருத்துக்கள் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளில் இருந்து வருகின்றன.
பொருள் முதல் வாதத்தின் படி, ஒரு பொருள், எதையும் சார்ந்திராமல், தானாகவே தனித்து நிற்கும் தன்மை பெற்றது.
பொது அறிவு என்பது நம் புலன்கள் வழியாக வரும் அறிவு; அதே நேரத்தில், நம்மில் பலருக்கும் அது பொதுவாக உள்ளது.
ஆக, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை, அறிவு பற்றிய ஆராய்ச்சியில், ஐம்புலன்களில் இருந்து வரும் அறிவு முதன்மையானது என்ற கருத்தே.

கருத்து முதல் வாதம்

கருத்து முதல் வாதம் (Idealism) கூறுவது யாதெனின், உண்மையுள்ள கருத்துக்கள் நம்முள் ஏற்கனவே பொதிந்துள்ளன; அவை புலன்கள் வழியாகப் பெறப் படுவன அல்ல; அவை உய்த்து உணரும் முறையால் (intuition) பெறப்படுகின்றன என்பதாகும். இது ( கான்ட் கருதியதைப் போல) மனத்தின் இயல்பாக இருக்கலாம்; அல்லது, ( பிளேட்டோ கருதியதைப் போன்று) அக் கருத்துக்கள், நம்மைச் சார்ந்து இராமாலேயே, தனித்து நிற்கும், வல்லமை பெற்று, (உலகில்) நிலைத்து நிற்கலாம்.

பகுத்தறிவியம்

பகுத்தறிவியம் (Rationalism) என்பது புலனறிவாதம் (Empiricism), கருத்து முதல் வாதம் (Idealism) ஆகியவற்றுடன் சிந்தனை முறை (system of thinking) என்பதை மூன்றாவது கூற்றாக இணைத்து, இந்த மூன்றும் அறிவு ஆராய்ச்சியில் சமமான நிலையில் வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

கருத்துக் கட்டுமானம்

கருத்துக் கட்டுமானம வாதம் (Constructivism) என்னும் கோட்பாட்டின் படி, அறிவு என்பது மாந்த இனம் கட்டி அமைக்கும் உண்மை சான்ற கருத்துக்களின் குவியல் என்பதாகும். எனவே, அறிவு என்பது மனிதனுக்கு அப்பால் இருக்கும் ஒரு பொருள் அல்லது எதையும் சார்ந்து இராத ஒன்று என்று சொல்வதற்கில்லை. சார்பற்ற நிலை வாதம் (objectivism), அறிவில் உள்ள கருத்தைப் பற்றி பேசுகிறது; ஆனால், கருத்துக் கட்டுமான வாதம் (Constructivism), அறிவு என்ற கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி பேசுகின்றது. எனவே, கட்டுமான வாதம், கருத்துக்கள் (உண்மைகள்) ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்ற நிலையை முன்னிறுத்தி, அறிவு என்றால் என்ன என்பதைப் பற்றியான ஒரு புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. அதாவது, இந்த வாதமுறை அறிவை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதில் கவனம் செலுத்துகின்றது.

பயன்பாட்டு முறை வாதம்

பயன்பாட்டு முறை (Pragmatism) என்னும் வாதத்தில், "உண்மை என்பது ஏதோ ஒன்று எந்தச் சார்பும் இல்லாமல் மனிதனுக்கு வெளியே அமைந்து கிடப்பது அல்ல; அது நடைமுறை நிகழ்வுகளில் சம்பத்தப் பட்டிருக்க வேண்டும்; எடுத்துக் காட்டாக, ஏதேனும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்," என்ற பார்வை வைக்கப் படுகின்றது. ஒரு கருத்து எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என முதலில் கணித்துக் கொள்ள வேண்டும். பின், அந்தக் கருத்தை, அப் பயன்களைக் கொண்டு வரையறை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், அறிவு எனக் கருதப் படும் கருத்துக்கள் நமக்கு நடை முறையில் துணை புரியும் கருத்தாக்களாக ஆகிவிடும்.

நடைமுறை அறிவாய்வியல்

நடைமுறை அறிவு ஆய்வியல் (Naturalized epistemology) என்னும் பிரிவு, பயன்பாட்டு முறை வாதத்தைப் (Pragmatism) போன்றே, ஒரு கருத்தின் பயனைப் பற்றி, குறிப்பாக, அக் கருத்து எவ்வாறு நடை முறையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து பயன் தருகின்றது என்பதை பற்றி பேசுகின்றது. ஒரு கருத்து உண்மையானதா, அதற்கு ஆதாரம் உள்ளதா என்பன கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிராமல், அக் கருத்து ஒருவருக்கு தம் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த அளவுக்குப் பயன் தரும் என்பது இன்றியமையாததாகக் கருதப் படுகின்றது.

ஐயுறவியல்

அறிவு ஆய்வியலில், ஐயுறவியல் (Skepticism) என்பது உண்மை எனக் கருதப் படும் ஒவ்வொரு கருத்தையும் ஐயத்தோடு (சந்தேகத்தோடு) பார்ப்பது ஆகும். பலரும் அறிந்த கிரேக்க அறிஞர் சாக்கிரட்டீசு(Socrates) ஒரு ஐயுறுவாளர் (சந்தேகப் படுபவர்,skeptic) எனக் கருதப் படுபவர். இவர் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தபோது, எதைப்பற்றியும் இவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதாவது, "எனக்கு எதைப் பற்றியும் முழுவதுமாகத் தெரியாது என்பதுதான் எனக்கு முழுவதுமாகத் தெரிந்த ஒன்று," என்று கூறினார். அதன் பிறகு, 16-ஆம் நூற்றாண்டில் வந்த டேக்கார்ட் (René Descartes) இதே பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து, அதன் பயனாக, (நாம் அனைவரும் அறிந்த) "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என்ற கருத்தை முன் மொழிந்தார். அடிப்படைக் கருத்துக்கள் வாதம் (Foundationalism), பயன்பாட்டு முறை வாதம் (Pragmatism) ஆகியன ஐயுறவியல் வாதத்திற்கு எதிராகத் தோன்றியவை. அதன் பிறகு, ஏரண நேர்க் கருத்து வாதம் (Logical Positivism) மற்றும் குகன் (Kuhn), பாப்பர் (Popper) ஆகியோரின் கருத்துக்கள், அறிவியல் உண்மைகளையும் ஐயுறவியல் கண்கொண்டு பார்த்தவை.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு


கருத்துகள் இல்லை: