நான் ரசித்த கவிஞர்கள் :
வில்லியம் ஷேக்ஸ்பியர்((23.04.1564- 23-04-1616)
ஷேக்ஸ்பியர் என்னும் உன்னத மகா கலைஞன் இந்த உலகத்தில் வாழ்ந்தது வெறும் ஐம்பத்தி இரண்டு (52) ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவர் விட்டுச்சென்ற அற்புதக் கலை காலங்களைக் கடந்தும் வாழக்கூடியது
நான் ரசித்த கவிதை
(சானட் 116 Sonnet No116 காதல் அழிவற்றது)
இருமனங்கள் இணைவதையே
திருமணம்
என்பேன்
சடங்குகளால் இணைவதல்ல அது
வலிமையானதொரு இரும்புக் கரம்
வளைக்கும் போது
வளைந்து விடுவதல்ல
காதல்
விதி என்னும்
ஓர் கூர் அரிவாள்
அறுத்துச்செல்ல
அது ஒன்றும் எதிர்ப்பில்லாத
புல் அல்ல
கடற்கரையில் சுடர்விடும்
கலங்கரை விளக்கு அது
புயலிலும் மழையிலும்
அணையாது
பல படகுகளுக்கு
வழிகாட்டும்
கலங்கரை விளக்கு
துருவ நட்சத்திரம் அது
அதன் தூரத்தை
நீஅளந்தறியலாம்
ஆனால்
ஆழத்தையோ
உன்னால்ஒருநாளும்முடியாது
காலமோ
தன் மாயக்கரங்களால்
மனிதர்களைத் தடவி தடவி
அவர்களில்
முதுமையை வரைந்து
முட்டாளாக்கிச் சிரிக்கிறது
அல்லது கோமாளிகளாக்கி
அது தன் கதிர் அரிவாளால்
ரோஜா உதடுகளையும்
வெந்நிற மொக்குகளையும்
கன்னத்தையும் கூட
விட்டுவைப்பதில்லை
இளமையை அறுவடைசெய்து
முதுமையை விதைக்கும்
அதன் இரக்கமற்ற கரங்கள்
இதயங்களில்நிரம்பிவழியும்
பிரியங்களை
மட்டும்
அறுவடைசெய்யமுடியாமல்
ஏனோ
தோற்றோடுகிறது
விதியைப் போல
நீண்ட ஆயுள் கொண்டதல்ல காதல்
என்றாலும்
தன் குறுகிய ஆயுளில்
அது ஜெயித்துக்கொண்டேயிருக்கிறது
விதியை.....
மரணம் வரையிலும்
அல்லது என்றென்றைக்கும்
தோற்றதேயில்லைகாதல்....
நான் எழுதும் இந்த
காதல்கவிதை
ஒரு வேளை
பொய்யாகப் போனால்
எப்பொழுதோ
நான் எழுதுவதை
நிறுத்தியிருப்பேன்
அல்லது
மூச்சையே நிறுத்தியிருப்பேன்
மனிதர்களோ பூமியில்
காதலிப்பதை நிறுத்தியிருப்பார்கள்
அவ்வளவுமகத்துவம்வாய்ந்ததது
காதல்
ஆம் அவ்வளவுமகத்துவம்வாய்ந்ததது
காதல்
என் கவிதையை விடவும்
அல்லது பூமியில்
எது ஒன்றை விடவும்!.....
தங்கேஸ்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக