உமிமாச்சி டயரி - அகிமி யோஷிடா
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே...
__________________________________
”இனிது இனிது வாழ்வு இனிது”. ஆம், வாழ்க்கை இனிது; குடும்பம் இனிது; உறவுகள் இனிது; அன்பும், கருணையும், பாசமும், பந்தங்களும் இனிது; நட்பு இனிது; நண்பர்கள் இனிது; தினங்களின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் இனிது. மனிதம் இனிது. மதுராஷ்டகத்தில் வருவது போல், எல்லாமே இனிதுதான் இல்லையா? நம்மைச் சுற்றி நிறைந்து தளும்பும் மதுரத்தை உணரும் கணங்கள் அனைத்தும் இனிதுதான் இல்லையா?
“Our Little Sister" பார்க்கும்போதும் மனம் நெகிழ்ந்துகொண்டே இருந்தது. நேர்மறை ஆற்றலில் மனம் நிறைந்து வழிந்தது. அம்முவிற்கு உடனே ஃபோன் செய்து சொல்ல வேண்டும் போலிருந்தது. சுற்றிலும் எல்லா எதிர்மறை ஆற்றலும் மறைந்து போய், ஒரு நேர்மறை மேட்ரிக்ஸினுள் நுழைந்ததைப் போல இருந்தது.
ஜப்பானின் ”கமகுரா”-வில் ஒரு கடற்கரையோர குறு நகரின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், தங்களின் தாத்தா/பாட்டியின் வீட்டில் வசிக்கிறார்கள் சகோதரிகள் மூவர். மூத்தவள் ”சாச்சி”க்கு 29 வயது. மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்கிறாள். அடுத்தவள், 22 வயதாகும் “யோஷினோ”, வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறாள். கடைக் குட்டி ”சிக்கா”-விற்கு 19 வயது. ஷுக்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை செய்கிறாள். அவர்களின் அம்மாவும், அப்பாவும் விவாகரத்தாகி பிரிந்து, அவர்களை விட்டுப் போய் பல வருடங்களாயிற்று. அவர்களை வளர்த்தது பாட்டிதான். பாட்டியும் இறந்து ஆறு வருடங்களாயிற்று. தாத்தாவும் கிடையாது. அந்த வீட்டில் அவர்கள் மூன்று பேர் மட்டும்தான். மூத்த பெண் “சாச்சி” அம்மாவின் இடத்தில் இருந்து தங்கைகள் இருவரையும் பார்த்துக் கொள்கிறார்.
அவர்கள் மூவரும் அப்பாவைப் பார்த்து பதினைந்து வருடங்களாயிற்று. ஒருநாள் “யமகடாவ்”-ல் வசிக்கும் அவர்களின் அப்பா இறந்து விட்டாரென்று தகவல் வருகிறது. அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு மூவரும் செல்கிறார்கள். அங்குதான் “அசானோ சுஜு”-வைச் சந்திக்கிறார்கள். அசானோ-விற்கு பதினான்கு வயது. அவர்களின் அப்பாவிற்கு, இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள். அவள்தான், அப்பாவின் இறுதிக் காலங்களில் அவருடன் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டது. அவருக்கு மூன்றாம் மனைவியும், அவள் மூலமாக ஒரு சிறுவயது மகனும் உண்டு.
இறுதிச் சடங்குகளில் மூன்றாம் மனைவியின் நடவடிக்கைகளைக் காணும் ’சாச்சி’க்கு, அவள் இனிமேலும் அசனோ-வைச் சரிவர கவனித்துக்கொள்ள மாட்டாள் என்பது புரிகிறது. இறுதிக் காரியங்கள் முடிந்ததும், ஊருக்குத் திரும்ப ரயில்வே ஸ்டேஷன் வரும்போது, ட்ரெய்ன் ஏற்றிவிட ’அசானோ’வும் ஸ்டேஷன் வருகிறாள். அசானோ-வைப் பார்க்கையில் ’சாச்சி’க்கு தாய்மையின் அன்பு மனதில் ஏற்படுகிறது. அப்பா இல்லாமல் அவள் அங்கு என்ன செய்யப் போகிறாள்? எப்படி வாழப் போகிறாள்? என்று கவலைப் படுகிறாள். ட்ரெய்ன் வந்ததும் ஏறிக்கொண்டு கீழே நிற்கும் அசானோ-விடம் “பேசாம் நீயும் ”கமகுரா”-வுக்கு எங்க வீட்டுக்கு வந்துடேன். நாம நாலு பேரும் சேர்ந்து அங்கேயே இருக்கலாம். நீ அங்கேயே ஸ்கூல்ல படிக்கலாம். உன்ன நாங்க பாத்துக்குறோம்” என்கிறாள் சாச்சி.
அசானோ மறுநாளே கிளம்பிச் சென்று கமகுரா-வில் தன் சகோதரிகளுடன் சேர்ந்து கொள்கிறாள்.
படம் இனிமேல்தான். படத்தில் பரபரப்புக்கள் இல்லை. திருப்பங்கள் இல்லை. ஆனால், வாழ்க்கை இருக்கிறது. ஜப்பானின் ஆன்மா இருக்கிறது. கமகுரா-வின் அழகு இருக்கிறது. நான்கு சகோதரிகளுக்கிடையேயான அந்நியோன்யமும், பாசப் பிணைப்பும் இருக்கிறது. மூத்த சகோதரி சாச்சி-யின் பொறுப்பும் தாய்மையும் இருக்கிறது. தினசரி வாழ்க்கையின் அவர்களின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருக்கின்றன.
(”Our Little Sister" - ஜப்பானின் பிரபல “மங்கா” கார்ட்டூன் தொடரான, ”அகிமி யோஷிடா”-வின் “உமிமாச்சி டயரி”-யைத் தழுவி எடுக்கப்பட்டது)
நன்றி :
திரு வெங்கி
"Our Little Sister"/"Umimachi Diary" (2015 Japanese) - Hirokazu Kore-eda
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக