23 ஜூலை, 2021

நூல் நயம் : செங்கிஸ்கான் - முகில்

புத்தகம்: செங்கிஸ்கான்

எழுத்தாளர்: முகில்

வாசிப்பை நேசிப்போம் குழுவில் எனது இரண்டாம் பதிவு இது.

நாடோடி கூட்டத்தில் பிறந்து சிதறிக் கிடந்த தனது இனக்குழுக்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த மங்கோலியாவை உருவாக்க வேண்டும் என்கிற நண்பனின் ஆசையையும், உலகமே வியக்கும் வண்ணம் மகா பேரரசை உருவாக்க வேண்டும் என்ற தனது கனவையும், சாத்தியமாக்கிய ஒரு சாமானியனின் சரித்திரத்தை சொல்லும் புத்தகமிது.

ஓர் இனக்குழுவினர் இன்னொரு இனக்குழுவினரை தாக்குவது அவர்களுடைய கால்நடைகள், விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடிப்பது இனக்குழு தலைவரின் மனைவியையும் பிற அழகான பெண்களை கடத்திக் கொண்டு வருவது என்று வாழ்ந்து கொண்டிருந்த மங்கோலிய நாடோடி இனத்தில் பிறந்த செங்கிஸ்கான் தன் இன மக்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த மங்கோலியாவை உருவாக்குகிறார். 

    ஒருங்கிணைந்த மங்கோலியாவை உருவாக்கிய பிறகு அண்டைய நாடுகளையும், தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. எதிரிகளின் படைகளோடு ஒப்பிடுகையில், இவரது படை சிறியதாகத் தான் இருந்திருக்கிறது. படைவீரர்கள் இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, விசுவாசம், நேர்மை தவறாமல் அவரது உத்தரவுக்கு அடிபணிந்து நடந்துக் கொண்ட விதம் தான் வெற்றியை வசப்படுத்திக் கொள்ள முடிந்தது.

பிற நாடுகளோடு போர் புரிகையில் தனது போர் கைதிகளை முன்னோக்கி தாக்குதல் நடத்த அனுப்பி அவர்கள் போரிட்டு மடிந்த பின், தனது படை வீரர்களை அனுப்புவது, எதிரிகளின் நகரை கைப்பற்றுவதற்கு அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நதியின் கிளைகளை வெட்டி திருப்பி விட்டு அவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்து அழித்தது, தனக்கு பிடிக்காத இனத்தை சார்ந்த பெண், குழந்தை, மூதாட்டி என்றெல்லாம் பேதம் பிரித்து பார்க்காமல் கொல்லப்பட்டது போன்ற கொடூரத்தையும் செய்திருக்கிறார். ஆனால் போரில் தனது செல்லப் பேரன் இறந்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார். இது " தனக்கு வந்தால் ரத்தம் பிறர்க்கு வந்தால் தக்காளி சட்னி" என்பதை நியாபகப்படுத்துகிறது.

உலகம் வசப்பட வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு, அவர் விட்டுப் போன மங்கோலிய பேரரசு , அவரது மகன்களால், அளவில் இரண்டு மடங்காகப் பெருகி, சூரியன் உதிப்பதும் மறைவதும் மங்கோலிய பேரரசின் எல்லைக்குள்ளேயே நிகழ்ந்தது.

நன்றி :

கருத்துகள் இல்லை: