🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
சூரியின் நாட்குறிப்பு-77: கவிஞர் ஜனநேசனுக்கு கண்ணீர் அஞ்சலி
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
காரைக்குடி புத்தகத் திருவிழா முதல் நான்கினில் கிட்டத்தட்ட நான் நினைத்தபடியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தேன். தோன்றியதையெல்லாம் செயல்படுத்த முயன்றேன், ஓரளவு அதில் வெற்றியும் பெற்றேன். நிறைய கற்றுக் கொண்டேன், நிறையத் தெரிந்து கொண்டேன். பலவிதமான அனுபவங்கள் கிடைத்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பெரியோர் பலரின் தொடர்பு கிடைத்தது. நல்ல நட்புகள் நிறையக் கிடைத்தன. அப்படிக் கிடைத்த ஒரு நட்புதான் நண்பர் ஜனநேசன் அவர்களுடையது.
அப்போது அவர் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நூலகராகப் பணிபுரிந்து வந்தார். இயற்பெயர் வீரராகவன். இடதுசாரி சிந்தனை கொண்டவர். இடதுசாரி அமைப்புகள் பலவற்றுடன் தொடர்புகொண்டவர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர்.
நான் வலதுசாரி, ஆன்மிக சிந்தனை கொண்டவன் எனாறாலும் ஆரம்பத்திலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. புத்தகத் திருவிழாவில் அவருக்கு மேடையில் அவரது திறமைக்குரிய வாய்ப்புகளை பலமுறை உருவாக்கித் தந்தேன், முக்கிய பொறுப்புகளைத் தந்தேன். அவரும் எனக்கு பலவகையிலும் உறுதுணையாக இருந்தார்.
கந்தர்வன் என்ற அற்புதமான சிறுகதை எழுத்தாளரைப் பற்றி நான் அறிந்துகொண்டது அவரால்தான். கந்தர்வன் நூல்களை படிக்கக் கொடுத்து மகிழச் செய்தார்.
பின்னர் தனது ஹைக்கூ நூலையும், சிறுகதைப் புத்தகங்களையும் அன்பளிப்பாகத் தந்தார். அவரது ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தன. அவரது சிறுகதைகளையும் படிப்பேன்.
காரைக்குடி நான்காவது புத்தகத் திருவிழாவுடன் முதல்முறையாக சிற்றிதழ் கண்காட்சியையும் இணைந்து சிறப்பாக நடத்த பலவகையிலும் பேருதவியாகச் செயல்பட்டார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்
நான்காண்டுகளோடு புத்தகத் திருவிழாவின் தொடர்பு எனக்கு விடுபட்டுப் போனது. ஆயினும் பயனளிக்கும் எங்கள் நட்பு தொடர்ந்தது. எனக்கு பல எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்துவைத்ததையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
பணிவோய்வு பெற்றபின் அவர் வீட்டுக்கு அருகிலேயே குடியேற நேர்ந்தது. அடிக்கடி சந்தித்துப் பேசவும் பழகவும் வாய்ப்புகள் அதிகரித்தன. மாதந்தோறும் புத்தக வாசிப்புக் கூட்டங்கள் நடத்தினோம்.
எப்போது புத்தகம் வெளியிட்டாலும் என்னைத்தேடி வந்து ஒரு பிரதியை அன்பளிப்பாகக் கொடுப்பார்.
நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பின்னரும் கைபேசி வழியாகவும் முகநூல் வழியாகவும் எங்கள் நட்பு தொடர்ந்தது.
அவருக்கு இரு புதல்வர்கள். முதல்வர் தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியாளர்- ஐ ஏ எஸ் அதிகாரி. அவரது மனைவியும் அதேபோல். அடுத்த மகன் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று லண்டனில் சிறப்பு மருத்துவராகப் பணிபுரிகிறார்.
அவரது பணிவோய்வுக்குப் பின்னர் தெலுங்கானாவில் தனது மூத்த மகனின் குடும்பத்துடனும், குறிப்பாக பேரப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது துணைவியாருடன் இரண்டாவது மகனனைக் காண லண்டன் சென்ற அனுபவங்களை முகநூலில் எழுதியிருக்கிறார்.
பலமுறை நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு நழுவிப்போய்க் கொண்டே இருந்து, இறுதியில் சந்திக்க முடியாமலேயே போய்விட்டது.
பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும். எழுத்துத்துறையிலும் வெற்றிகண்ட அவர் பெரிதும் பாராட்டுக்குரியவர்.
சற்றும் எதிர்பாராத அவரது மறைவு எனக்கு ஒரு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக