என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 ஜன., 2009
புறநானூறு-1: "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொருது இறங்கும் அல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்.
- கணியன் பூங்குன்றனார்
நெல்லையப்பன் கவிதைகள்-45: "கலி காலம்"
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.
தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.
இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.
வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.
மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு
காலம் இன்னும் கனியவில்லையாம்!
29 ஜன., 2009
ஆன்மிக சிந்தனை-16:
28 ஜன., 2009
நலக்குறிப்புகள்-३०: "பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்"
27 ஜன., 2009
கருத்துக்கள்-13: "எப்படி உருப்படும் இந்த நாடு?"
"உரத்த சிந்தனை: 'பொய் 'சத்தியமும்', இந்திய பொருளாதாரமும்!" - சாரு நிவேதிதாவின் கட்டுரையிலிருந்து, தினமலர்.
நன்றி: திரு சாரு நிவேதிதா & தினமலர்.
நலக்குறிப்புகள்-29: "நோய் தடுப்பாற்றலுக்கு காரட்!"
நெல்லையப்பன் கவிதைகள்-44: "அவர் வருவாரா?"
இலங்கையில் இனப்படுகொலை,
இட ஒதுக்கீடு 33 சதவிகிதம்,
இறக்கை கட்டும் பெட்ரோல்,
இன்டர்நெட் வழி கலாச்சார சீரழிவு,
பயமுறுத்தும் பணவீக்கம்,
பங்குச்சந்தை தொடர் சறுக்கல்,
பெரிதாகும் ஓசோன் ஓட்டை,
உயரும் பூமியின் வெப்பம்,
வளரும் வன்முறைக் கலாச்சாரம்,
அதிகரித்துவரும் எய்ட்ஸ் பயங்கரம்,
இருதுருவமாகும் பொருளாதாரம்:
பற்றி எரியும் பிரச்சினைகள் இவையல்ல;
தமிழனின் தலையாய பிரச்சினை -
அரசியலுக்கு அந்த நட்சத்திரம்
வருவாரா மாட்டாரா?
23 ஜன., 2009
நெல்லையப்பன் கவிதைகள்-43: "எங்கே தொலைத்தோம்?"
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?
எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?
படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?
அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?
என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?
21 ஜன., 2009
நெல்லையப்பன் கவிதைகள்-42: "கருகும் மொட்டுக்கள்"
வெடிக்காத பட்டாசு சொன்னது:
"பிஞ்சு விரல்கள் எனைச் செய்தபோதே
வெடித்துவிட்டது என் இதயம்
வெடித்த வெடி எப்படி
வெடிக்கும் மறுபடியும்?"
உரசிய பின்னும் ஒளி கொடுக்காத
தீக்குச்சி சொன்னது:
"எனைச் செய்த சிறார்களின் கண்கள்
ஒளியிழந்து கிடந்ததே!
நான் எப்படி ஒளி கொடுப்பேன்?"
சாயம் போன பனியன் சொன்னது:
"கைகழுவிய பின்னும்
சாயக்கரையோடு தானே
சாப்பிடப் போவார்கள் சிறுவர்கள்!
எங்கு மட்டும்
சாயம் போன மாயம் என்ன?"
ட்ராஃபிக் சிக்னல் சொன்னது:
"பிச்சை கேட்கும் சிறுவர்களின்
கை நிறைந்துவிடும் தினமும்,
வயிறு நிறைவதில்லை ஒருபொழுதும் -
பங்கு கொடுக்க வேண்டுமே பலருக்கும்."
உணவகத்தின் மேஜை சொன்னது:
"உணர்ச்சியற்ற மரக்கட்டைகள் நாங்கள் -
எழுதுகோல் ஏந்தவேண்டிய விரல்கள்,
எங்களைச் சுத்தம் செய்யும்போதும்
வாழாவிருக்கிறோம் நாங்கள்."
திருட்டுச் சிறுவனின் வாக்குமூலம்:
"படிப்பு சரியா வரலைங்க, ஐயா!
மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னாங்க.
பேப்பர் போட்டேங்க வீடு வீடா.
ஹோட்டல் வேலைக்கு போனேங்க;
காச ஏமாத்துனாங்க; ராத்திரில
கெட்ட வார்த்த பண்ணினாங்க;
பிடிக்கலீங்க எனக்கு.
ஓடிவந்து இப்படி ஆயிட்டங்க."
நலக்குறிப்புகள்-28: "ஆயுளைக் கூட்டும் கற்றாழை!"
20 ஜன., 2009
என்ன நடக்கிறது?-9: "ஒரே மழைக்கு சாலைகள் வாய் பிளந்தது ஏன்?"
கடிதம்-9: "அவமானம் ஒரு சிலருக்கு மட்டும்தானா?"
நன்றி: திரு எம்.கோவிந்தராஜன் & தினமணி, மதுரை, 13.1.2009.
கேள்வியும் பதிலும்-27:
நெல்லையப்பன் கவிதைகள்-41: "அரசியல் பிழைத்தோர்"
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்,
மற்றொரு பாதியை எதிர்த்து!
அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?
அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,
அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!
அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;
பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;
பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.
பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?
சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருவரும் சேர்ந்தே,
சாக்கடையை!
15 ஜன., 2009
திருவள்ளுவர் தினம்
இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொது மறை திருக்குறளை உலகிற்கீந்த உத்தமர்; இரண்டு வரிகளில் பிரபஞ்சத்தையே அடக்கும் வித்தை கற்றவர்; தமிழின் தலை சிறந்த நீதிநூலை வழங்கியவர்; அவர் உரைத்த குரள்நெறிப்படி வாழ்ந்து காட்டியவர் - அப்பெருமகனாரை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இன்று போற்றி, வணங்கி மகிழ்கின்றனர். பைபிள், பகவத் கீதைக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மொழிகளில் வடிக்கப்பட்ட நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. எக்காலத்திற்கும், எவ்வினத்தவர்க்கும் பொதுவான வாழ்கலை நூலாம் வள்ளுவத்தை நாளும் போற்றிப் பயின்று, அதன்படி வாழ்தலே வள்ளுவப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.
எனக்கு மிக, மிகப் பிடித்த சில குறள்கள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."
"புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்."
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று."
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து."
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை."
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை."
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்."
"அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்."
13 ஜன., 2009
2 ஜன., 2009
இயற்கை உணவுக் குறிப்பு-4: கார அவல்"
கார அவல் தயாரிப்பது சுலபம். சத்து மிகுந்த இந்த உணவை சர்க்கரை வியாதி அன்பர்களும் அளவாகச் சாப்பிடலாம். மலச்சிக்கல் நீங்கும். பசிப்பிணி தீரும். உடல் சதை குறையும். இயற்கை நலவாழ்வு முகாம்களில் இவ்வுணவு வழங்கப்படுகிறது.