29 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-55: நெல்லிக்காய்

பித்த சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது நெல்லிக்காய். மேலும் குடல் கோளாறுகளை போக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரத்த சோகைக்கும் உகந்தது. பற்கள் கெட்டிப்படும். ஈறுகளில் ரத்தம் கசிவதை நிறுத்தும். எலும்புகளை உறுதிப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும், இருதயத்திற்கும் நல்லது.

நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் A மற்றும் B இரண்டும் உள்ளது.

எனக்குப் பிடித்த கவிதை-61:தபசியின் "எல்லாவற்றையும் விழுங்கியவன்"

எப்போது பார்த்தாலும்
எதையாவது
மென்று கொண்டும்
தின்று கொண்டும்
இருக்கிறான் அவன்.

முறுக்கு, சுண்டல், கடலை மிட்டாய்
பட்டாணி, மிக்சர், தட்டை
வத்தல், அப்பளம், சாக்லேட்... என
எது கிடைத்தாலும்
வாயில் போட்டுக் கொள்கிறான்.

சமையலறைக்குள் நுழைந்து
வெளியே வந்தால்
பொட்டுக் கடலையோ, சர்க்கரையோ இல்லை
ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டாவோ
அவன் வாயிலிருக்கும்.

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என
எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.
சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், தயிர்,
கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் என
எதையும் மிச்சம் வைப்பதில்லை அவன்.

மணிக்கொரு முறை
டீயோ, காபியோ குடிக்கிறான்.
கோடை காலங்களில்
இளநீர், மோர், பழரசம், வெள்ளரி,
நுங்கு, தர்பூசணி என
வெளுத்துக் கட்டுகிறான்.

விருந்துகளுக்குச் செல்கையில்
வடை, பாயசம், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா என
மறுமுறை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.

எதுவும் கட்டுப்படியாகாமல் போக
ஒரு நாள்
பிளேடு, செங்கல், நட், போல்ட்,
ஆணி, உடைந்த ட்யூப் லைட் என
சாப்பிட ஆரம்பித்தான்.
அதுவும் கட்டாது போலிருந்தது.

தன பசியைத் தீர்த்துக் கொள்ள
ஓர் அரசியல்வாதியாக மாறினான்.
எல்லாவற்றையும் விழுங்கி
ஏப்பம் விட்டான்.

ஒரு நாள்
அவன் வாயைத் திறந்து காட்டச் சொல்லி
பார்த்தது
கட்சி மேலிடம்.
உலகமே அவன் வாய்க்குள் இருந்தது.

- இனிய உதயம், மாத இதழ், ஏப்ரல் 2010.

நன்றி: கவிஞர் தபசி மற்றும் இனிய உதயம்.

பிருந்தாவின் கவிதைகள்-5: சிறுசேமிப்பு

சிறு சிறு சேமிப்பு
வாழ்க்கையின் பாதுகாப்பு
இருக்காது பரிதவிப்பு
எனவே
ஆகட்டும் பணம் சேர்ப்பு
சிறுதுளி பெருவெள்ளம்
இதை ஏற்கவேண்டும்
நம்முள்ளம்.
ஏற்றால் -
வாழ்க்கையில் இருக்காது
மேடுபள்ளம்.

25 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-54: விளாம்பழம்

விளாம்பழச் சதையை சர்க்கரையுடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். விளாம்பழம் கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளுக்கு நல்லது. மேலும் வாய் துர்நாற்றம், வாய்ப்புண், நாக்கு மற்றும் ஈறுகளில் தோன்றும் புண்கள், காமாலை, பித்தக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து.

24 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-53: அத்திப்பழம்

மலச்சிக்கலுக்கு மிகவும் உகந்தது. உடல் பலம் பெறும், குறிப்பாக இதயம் பலம் பெறும் . சிவப்பு அணுக்கள் பெருகும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

21 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-52: மாதுளம்பழம்

மாதுளம்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அது ஒரு சிறந்த பித்த நிவாரணி. சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. முக்கியமாக மலட்டுத்தன்மையை நீக்கும் ஆற்றல் கொண்டது. நெஞ்செரிச்சலையும், காதடைப்பையும் நீக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.

20 ஏப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-102:

பிரபஞ்சத்தையே உங்களுடையதாக ஆக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல், தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே உங்களுடையதாக்கிக் கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப் படுத்திக்கொள்வதில் சந்தோஷப் படுகிறீர்கள்.

இந்த பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும், அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும், கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும், மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.

- 'சத்குருவின் ஜென்னலில் இருந்து ' , ஆனந்த விகடன், 10.3.2010.

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஆனந்த விகடன்.

எனக்குப் பிடித்த கவிதை-60: பிரச்னை தீர...

சிறு வயதில்
கசாயத்தை
ஒரே மூச்சில் குடித்து
உடனே
டம்ளரைத் தலைகீழாகக்
கவிழ்த்து வை
அப்போதுதான்
நோய் தீரும்ன
மருந்தை முழுதாகக்
காலிசெய்ய
வழி செய்வாள்
என் தாய்.
இப்போது
பெயரை மாற்று
என்னை மாற்று
கல்லை மாற்று
திசையை மாற்று
பிரச்னை தீருமென
என்னைக்
கவிழ்த்துவிடுகிரார்கள்!

- ஞானராஜ் செல்லத்துரை, ஆனந்த விகடன், 10.3.2010.

நன்றி: திரு ஞானராஜ் செல்லத்துரை மற்றும் ஆனந்த விகடன்.

கேள்வியும் பதிலும்-29:

பிராயச்சித்தம் என்றால் என்ன? (ஸ்வேதா அரவிந்த், தஞ்சாவூர்)

மெகா சீரியல்கள் போட்டு மக்களை அழவைக்கும் சேனல்கள், தனியாக நகைச்சுவை சேனல்கள் ஆரம்பிப்பதுதான்!

- நானே கேள்வி, நானே பதில்!, ஆனந்த விகடன், 10.3.2010.

நன்றி: ஸ்வேதா அரவிந்த் & ஆனந்த விகடன்.

நலக்குறிப்புகள்-51: தினம் ஒரு முட்டை!

முட்டையில் தேவையான அமினோ அமிலங்கள் நிறைய உள்ளன. மேலும் வைட்டமின் D, வைட்டமின் B12, செலினியம், கோலைன் ஆகியவையும் உள்ளன. சமீபத்திய ஒரு ஆராய்ச்சிப்படி ஊளைச்சதையைக் குறைக்க தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நல்லது என்று கூறப்படுகிறது.

பிருந்தாவின் கவிதைகள்-4: தலைவர் வருகிறார்!

என்ன உயரமான மதில்சுவர்!
அனைத்திலும் பிரம்மாண்டம்!!
பேரன் படிக்கும்
கான்வென்டைக்
காணவேண்டி,
ரசித்தபடி வருகிறார்,
தலைவர்!
தமிழ்வழிக் கல்விக்கு
குரல்
கொடுக்க! !

19 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-50: வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடொனின் ஆக மாற்றப்படுகிறது. அடிக்கடி 'மூட்-அவுட்' ஆகிறவர்களுக்கு மீண்டும் நல்ல 'மூடிற்குத்' திரும்ப செரோடொனின் பெரிதும் உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால், பிராணவாயுவை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின்கள் திறமையாகச் செயல்பட உதவுகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் அது மலச்சிக்கலுக்கு எதிரி.

பிருந்தாவின் கவிதைகள்-3: வந்தது கோடை!

இல்லத்தரசிகளின் மேடையில்
பொதுக்கூட்டமாய்
எறும்புக்
கூட்டங்கள்.
புன்சிரிப்புடன் சிறுவர்களின்
முட்டுச்சந்தில்
மட்டைப்பந்து
.
குளிர்ந்தகாற்றுடன்
வியர்வை
ஊற்று.
மக்களின் திண்டாட்டத்துடன்
குளிர்பானக்கடைகளின்
கொண்டாட்டம்
.
பருத்திஉடையுடன்,
கறுப்புக்குடையுடன்
வந்தது கோடை!

14 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-49: கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது. எனவே எலும்புகளை உறுதியாக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் கறிவேப்பிலையைத் துவையல் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் பசியைத் தூண்டும், ஜீரண சக்தி அதிகரிக்கும். கண்களுக்கும் நல்லது.

ஆன்மீக சிந்தனை-25:

ஆவிக்குள் ஆவியெனும் அற்புதனார் சிற்சுகந்தான்
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே.

- பைங்கிளிக்கண்ணி, தாயுமானவர்

யோக சித்தி-22: கடவுள் தன்மை-3

மெய்யன்பு நல்லுறுதி மேதக்க ஒப்புரவாந்
துய்யவுளத் தொண்டர் துணை.

உண்மைப் பொருளான கடவுளிடம் உள்ளன்பு, நல்ல சித்த வைராக்கியம், மேலான புண்ணியச்செயல், பொதுநலம், இவையே மாசற்ற மனமுடைய திருத்தொண்டர் துணையாகும்.

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


விக்ருதி வருடம் பிறந்துவிட்டது!

அனைவருக்கும்
இனிய, அன்பான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு அனைவருக்கும் பயனுள்ள, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் -
சூரி

13 ஏப்., 2010

இன்று ஒரு தகவல்-28: சத்திரம் பேருந்து நிலையம் (திருச்சி)

திருச்சிப் பேருந்து நிலையத்தைக் கடந்து போகும் ஒவ்வொரு தருணத்திலும் சத்திரம் என்னும் பெயர் கொண்ட நிறுத்தத்தைப் பார்த்து வியப்பாக இருக்கும். வாகன நெருக்கடி மிகுந்த அந்த இடத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்திருக்கக் கூடும் என்று யோசித்துக் குழம்பியிருக்கிறேன். அங்கே வசிக்கும் பலரிடமும் அதைப்பற்றி விசாரித்தும் என் மனம் ஏற்கத்தக்க விடையை யாரும் சொல்லவில்லை. எதிர்பாராத விதமாக அந்த ஐயத்துக்கான விட இந்த நூலில் (சு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நான் கடந்து வந்த பாதை') உள்ளது.

திருச்சியில்
சின்னையா பிள்ளை ஒரு சத்திரம் கட்டி, ஏழை எளியவர் தங்கிச்செல்லும் வகையில் ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். வெளியூரிலிருந்து வந்து படிக்கிற பிள்ளைகளும் அங்கே இலவசமாக தங்கியிருக்கிறார்கள். பலருக்கும் உதவும் வகையில் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்தச் சத்திரத்துக்கு அவர் பெயராலேயே சின்னையாபிள்ளை சத்திரம் என்று பெயர் வந்து, பிறகு காலவேகத்தில் அதுவும் மருவிச் சுருங்கி, இப்போது வெறும் சத்திரமாக நிற்கிறது.

நன்றி:
பாவண்ணனின் 'சாதனைப்புள்ளியை நோக்கி...' (நூல் மதிப்புரை), புதிய புத்தகம் பேசுது, பிப்ரவரி 2010.

ஆன்மீக சிந்தனை-24:

கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்றறிந்து
கொண்ட நெஞ்சர் நேயம் நெஞ்சிற் கொண்டிருப்பது எந்நாளோ?

- எந்நாட்கண்ணி, தாயுமானவர்

நலக்குறிப்புகள்-48: வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி சரியாக நடக்க உதவுகிறது. மேலும் அரிப்பு, கரப்பான் போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையது.

யோக சித்தி-21: கடவுள் தன்மை-2

வாய்மைநலன் நோன்பு வன்றொன்றடக்கம் இவை
தூயோனைச் சேரும் துணை.

பொய்யாவொழுக்கம், புண்ணிய நல்வினை, மனம், மொழி, மெய்த் தூய்மைக்கேற்ற தவ விரதங்கள், ஆற்றலுள்ள அருட்பணிகள், நான் என்னும் முனைப்பு அற்று எல்லாம் திருவருள் என்று அடங்கி நடத்தல் ஆகிய இச்சாதனங்கள் சுத்தனாகிய இறைவனைக் கூடும் துணையாகும்.

12 ஏப்., 2010

சூரியின் டைரி-8:

குறிப்பெழுதி நாளாகி விட்டது. நேற்று தினமணி நாளிதழ் வாங்கினேன். பெரும்பாலும் நான் ஞாயிரென்று கிடைக்கும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களை வாங்கிவிடுவேன். காரணம் ஞாயிறு மலரில் பல பயனுள்ள செய்திகள், கட்டுரைகள் கிடைக்கும். நேற்றைய தினமணியில் என் கவனத்தை ஈர்த்த சிலவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

முதல் பக்கத்தில் விமான விபத்தில் போலந்து அதிபர், அவர் மனைவி உட்பட 132 பேர் பலியான செய்தி. பொதுவாக நான் விபத்துக்கள், கொலைகள், குற்றங்கள் பற்றிய செய்திகளை ஒதுக்கிவிடுவேன். காலையில் மனத்தை வேதனைப்படுத்தி, உற்சாகத்தைக் குறைக்கும் செய்திகளைத் தவிர்த்துவிடலாமே என்று. ஆனால் பொதுவாக பத்திரிக்கையாளர்கள் இது போன்ற செய்திகளுக்குத்தான் முதலிடம் தருகின்றனர். அதே நேரம் ஆங்கிலக் கவிஞன் ஜான் டன் (John Donne) கூறியது நினைவிற்கு வருகிறது: "யார் மரணமடைந்தாலும் அது என்னைப் பாதிக்கிறது. ஏனெனில் நான் மனித சமுதாயத்துடன் ஒன்றாகக் கலந்தவன்." ("Everyman's death diminishes me; for, I am involved in mankind."). பெரும்பாலான விபத்துக்கள் மனிதத் தவறுகளாலேயே நிகழ்கின்றன. தொடர்ந்து வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலோருக்கு, தங்கள் நீண்ட அனுபவத்தால் ஒரு அலட்சிய மனப்பான்மை வருவதுதான் முக்கிய காரணம். எப்போதும் விழிப்புணர்வுடன், இன்னும் சொன்னால், பய பக்தியுடன் செயல்படும்போது, இம்மாதிரியான விபத்துக்கள் குறையலாம்.

அடுத்த செய்தி. "சீனா பற்றிய அச்சம் தேவையில்லை" என்பது. இது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்றது. பிரதமருடன் அமெரிக்கா மற்றும் பிரேசில் செல்லும் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடிய வெளிவுறவுத்துரை அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி இது. சீனா நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்துடனும் நட்புறவை வளர்த்துக்கொண்டு, அங்கெல்லாம் உதவுகிறது. ஆனால் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உரிமை கொண்டாடுகிறது, நமக்கு எப்போதும் ஏதாவது தலைவலியைத் தந்துகொண்டே இருக்கிறது. பழைய அனுபவத்திலிருந்து நாம் கற்ற பாடம், அவர்களை நம்ப முடியாது என்பதுதான். சொல் ஒன்று, செயல் வேறு என்பது அவர்களுக்கு இயல்பான ஒன்று. எனவே அச்சம் தேவையில்லை என்றாலும், அலட்சியம் கூடாது; விழிப்புணர்வு மிக அவசியம் என்பதுதான் சரியான நிலைப்பாடு.

அடுத்து மதியின் கார்ட்டூன். நான் தினமணி எப்போது வாங்கினாலும் மதியின் கார்ட்டூனை பார்க்கத் தவறுவதில்லை. அவரது கேலியும், கிண்டலும் மிகவும் ரசிக்கத் தக்கவை. மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வு பற்றிய இந்தக் கார்ட்டூனும் அந்த ரகம். மிகவும் ரசித்தேன்.

இரண்டாம் பக்கத்தில் ஆன்மிக சிந்தனையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை. அகங்காரம் உள்ளவரை ஞானமும், முக்தியும் கைகூடாது. அனைவரும், குறிப்பாக ஆன்மிக சாதகர்கள், அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளவேண்டிய ஒன்று.

அடுத்து, சிவகங்கை அரசு கல்லூரியில் மனித உரிமை பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் - ஏப்ரல் 12-13. இதைச் சாக்கிட்டாவது அங்கே செல்லலாமா என்றொரு ஆசை. ஏனெனில் நான் படித்த கல்லூரி அது. கடைசியாகச் சென்று நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. என் கல்லூரி நாட்களில் அப்படியொன்றும் நினைத்து மகிழும் சம்பவங்கள் இல்லைதான் என்றாலும், செல்லவேண்டும்-பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ இருக்கிறது.

அடுத்து நான்காம் பக்கத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சை முகாம் பற்றிய தகவல். எங்கள் ஊர், காரைக்குடி, சுப்பிரமணியபுரத்திலே நடக்கிறது என்பதால்தான் ஆர்வம். மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக நாங்கள் நேமத்தில் நடத்திய இயற்கை மருத்துவ முகாமும், அதில் கலந்துகொண்டு பெற்ற அனுபவங்களும் நினைவிற்கு வருகின்றன. அன்னை சகுந்தலா நேச்சுரோபதி மருத்துவமனையும், புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவிற்கான அமைப்பும் இணைந்து ஏப்ரல் 12 முதல் ஒரு வாரம் இந்த முகாமை நடத்துகின்றன. இலவச பயிற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது இன்னொரு கவனத்தை ஈர்த்த விஷயம். யோகா, இயற்கை உணவு முறை மற்றும் இயற்கை முறையில் நோய்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்து, ஏழாம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி. க்ரையோஜெனிக் எஞ்சினைத் (Cryogenic Engine) தயாரித்து இஸ்ரோ சாதனை. கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து நம் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மைல்கல். உலகில் இத்தொழில் நுட்பம் வைத்துள்ள ஆறாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறுகிறது.

அடுத்தது அனைவரையும் அப்பாடா என்று சொல்லவைக்கும் ஒன்று: "பருப்பு விலை சரிவு"
சென்னைச் சந்தையில் துவரம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூபாய் இரு நூறும், உளுத்தம் பருப்பு ரூபாய் முன்னூறும், பாசிப்பருப்பு ரூபாய் நூறும், சர்க்கரை ரூபாய் நூறும், கோதுமை மைதா ரூபாய் ஐம்பதும் குறைந்துள்ளது. இன்னும் குறையட்டும்!

எட்டாம் பக்கம், தமிழ்மணி. இதற்கென்று தனியாகவே ஒரு பதிவு செய்யலாம். அவ்வளவு நல்ல, பயனுள்ள, இனிமையான செய்திகள். நன்னெறியிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன். கலாரசிகனின், "இந்த வாரம்". அதில் "அர்ஜுனன் தபசு" என்ற நூல், வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மாத இதழ் "தென்றல்", மற்றும் பா.சேதுமாதவன் அவர்களது "புலன் விழிப்பு" என்ற கவிதைத் தொகுப்பு பற்றி படித்து, ரசிக்கும்படி, சுவையாக எழுதியுள்ளார். அதிலும் குறிப்பாக "வார்த்தைகளுக்கு அப்பால்", "தலைமுறை மாற்றம்" என்ற இரண்டு கவிதைகளை அப்படியே தந்துள்ளார். நான் அவற்றை மிகவும் ரசித்தேன்.

தமிழ்மணியில் மற்றவை: "மனம் கவரும் மனோன்மணீயம்" என்ற கவிஞர் மா.உலகநாதனின் கட்டுரை. அதிலும் நான்கு அருமையான கவிதைகள். ஒன்றை மட்டும் கீழே தருகிறேன்:

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதமே.

தேசியக்கவி முகவை முருகனார் பற்றிய லா.சு.ரங்கராஜனின் கட்டுரை. தேசியச் சிந்தனை செறிந்த மகாகவிராயர் என்று போற்றப்பட்ட முருகனார் காந்திஜியைப் போற்றி எழுதிய பாடல்:

தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே
ஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்
சாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்
காந்தி நன்னெறி நடக்குங்கால்.

புற வாழ்வைத் துறந்து, ரமண மகரிஷியைச் சரணடைந்து, அவரது நிழலாகவே வலம்வந்து, அவரது உரைகளை உள்வாங்கி, முருகனார் எழுதிய குருவாசகக் கோவை, ஸ்ரீ ரமண சந்நிதி முறை, ஸ்ரீ ரமண தேவமாலை, ஸ்ரீ ரமண சரணப்பல்லாண்டு, ஸ்ரீ ரமணானுபூதி, ரமண ஞான போதம் பற்றியும், அவர் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தீந்தமிழ் பாக்களை எழுதியது பற்றியும், மேலும் அவரது மற்றைய மேன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். படிப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. உண்மையைச்சொன்னால் இப்படியொருவர் இருந்ததே என் முதல் அநேகருக்குத் தெரியாது என்பதுதான் வேதனை. முருகனாரின் படைப்புகளைத் தொகுத்து யாரேனும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் 'தமிழ் விக்கிப்பீடியாவில்' முருகனார் பற்றி யாரேனும் எழுதவேண்டும் என்பது என் ஆவல். இந்த மகான் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு திரு ரங்கராஜன் அவர்களுக்கும், தினமணி நாளிதழுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒன்பதாம் பக்கத்தில் ஒரு வருத்தம் தரும், அச்சுறுத்தும் செய்தி: "தமிழகத்தில் நெல் உற்பத்தி கடும் சரிவு". 2000-2001 ஆண்டில் 73,66,320 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 2008-2009 ஆண்டு 51,83,385 டன்னாகக் குறைந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் படுமா? உடனே அவர்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்களா?

பத்தாம் பக்கத்தில் "பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதம்: மன்மோகன் கவலை". பயங்கரவாதம் உலகளவில் விரிந்துகொண்டே போகிறது. உலகத் தலைவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; தெளிவான சிந்தனை இல்லை. ஒற்றுமை இல்லை. 'எதிரியின் எதிரி நண்பன்' போன்ற தவறான கருத்துக்களால் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு தற்போது அல்லலுறுவது அனைவரும் அறிந்ததே. பழிவாங்கும் வெறி, கொடூர குணம், சரி-தவறு என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் விவேகமின்மை, இரக்கமின்மை போன்ற தன்மைகள் மேலோங்கியிருக்கும் பயங்கரவாதிகள் அவர்கள் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுபவர்கள். அணு ஆயுதங்கள் அவர்கள் கையில் சிக்கினால் என்னென்ன கொடூரங்கள் நிகழுமோ? வெறும் கவலைப்படுவதோடு விட்டுவிடாமல், உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் வேறுபாடுகளை மறந்து, உடனே செயல் பட்டால் ஒழிய, வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

பதினான்காம் பக்கத்தில் 'துரும்பு' எழுதிய "அது இருந்தா, இது இல்லே..". இதிலிருந்து என் மனதைத் தைத்த சில வரிகள்: "வெள்ளிக்கிழமை காலை பொதிகையில், காந்திய சிந்தனைகளை நினைவூட்ட முயன்று கொண்டிருந்தார் தமிழருவி மணியனார். பொதுவாழ்விற்கு வருபவர்கள் தன்னலம் துறந்து, பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கவேண்டும் என்கிற காந்தியின் சிந்தனையை அவர் எடுத்துரைத்தபோது ஏக்கப் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது."

அடுத்து ஞாயிறு இணைப்பு, "கொண்டாட்டம்". ஒரு கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில், பிறந்து படிப்பின் மூலமாக சாதனைகள் படைத்துள்ள சாதனைப் பெண்மணி பேராசிரியை காஞ்சனா பற்றிய கட்டுரை. குறிப்பாக மாணவிகள் படித்து அவரை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

கொண்டாட்டத்தில் சாருகேசியின் "நகர்வலம்". பாரதி அன்பர் கே.ரவி அவர்கள் பற்றி எழுதியதை மிகவும் ரசித்தேன். ரவி அவர்களின் "சொற்களுக்குள் ஏறிக்கொள்" என்ற கட்டுரைநூலையும், "உன்னோடு நான்" என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுப் பேசிய திரு அரங்க.ராமலிங்கம் அவர்கள் கூறியதை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்: "திருவள்ளுவருக்கு சிலை வைப்போம், வள்ளுவர் கோட்டம் கட்டுவோம். ஆனால் அவருடைய திருக்குறள் முதல் அதிகாரத்தை ஏற்கமாட்டோம் என்பது விந்தையாக இருக்கிறது. அதேபோல், செம்மொழி மாநாட்டுக்கு 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற வரியை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் வரிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வதும் புதிராக இருக்கிறது"

கொண்டாட்டத்தில் வி.ரவிச்சந்திரன் அவர்களின் "படக்காட்சியும், பாடமும்!". eLearning என்ற Smart Class System பற்றி அவர் எழுதியிருப்பதில் சிலவரிகளை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்: "மனிதமூளைக்கு தனியான ஒரு விசேஷ குணம் உள்ளது. அதற்கு எழுத்துக்களைவிட, படங்களை அதிகம் பிடிக்கும். இதனால்தான் என்றோ பார்த்த திரைப்படம் நம் நினைவில் நிற்பதும், நேற்று படித்த பாடப் புத்தகம் மறப்பதும். குழந்தைகள் கூட APPLE என்ற எழுத்துக்களையும், ஆப்பிள் படத்தையும் ஒன்றுசேர்த்து வைக்கும்போது எளிமையாக ஆப்பிள் எனப் படித்துவிடுவதும்."

அடுத்து திருப்பட்டினம் .ஜரினா பானு அவர்களின் "கோடையில் குளிர". கோடையின் வெக்கையிலிருந்து காத்துக்கொள்ளவும், சூட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவும் பழச்சாறுகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள். குறிப்பாகக் கவர்ந்தது: "இரண்டு மூன்று பழச்சாறுகள் கலந்து ஜூஸ் செய்யும்போது, இரண்டு ஸ்பூன் இஞ்சிச்சாறு விட்டுப் பருகுங்கள். சுவை சூப்பராக இருக்கும்."

அடுத்த இணைப்பு: தினமணி கதிர். அட்டையில் நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களது படம். "சாதனையில்" அவரைச் சந்தித்தது பற்றி தமிழ்மகனின் கட்டுரை. மார்ச் 31 அன்று தினமணியும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய பத்ம விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாவில் திடீர் விருந்தாளியாக அவர் வந்து கலந்து கொண்டதைப் பற்றியும், அவரது எளிமை பற்றியும் எழுதியிருந்தார்.

"ஆரோக்கியம்" பகுதியில் .ஜீவா அவர்கள் வேர்க்கடலை பற்றி பல பயனுள்ள, சிறந்த தகவல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக என்னைப்போன்ற சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். வேர்க்கடலையில் க்ளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) குறைவு, எனவே அதைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு மிகக் குறைவு. மேலும் வேர்க்கடலையில் உள்ள மக்னீசியம் இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கும். அனைவரும் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய தகவல் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் (Refined oils) பற்றியது. பல எண்ணெய் பாட்டில்களில் double refined என்று பெருமையாகப் போட்டிருப்பார்கள். சுத்திகரிக்கும் முறையில் கெட்ட கொலஸ்ட்ரால் கூடுகிறது, வேறு பல வேண்டாத ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான். நம்ப முடியவில்லையா? கீழே தந்துள்ள இணைப்பிற்குச் சென்று கார்சன் டிங் (Carson Ding) என்பார் எழுதிய "HEALTH MYTH EXPOSED: HEALTHIEST AND BEST COOKING OIL" என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள்:
http://www.health-myth-exposed.com/2008/10/healthiest-and-best-cooking-oil.html.

"முரண்சுவை" பகுதியில் நடிகர் ராஜேஷ் அவர்கள் சின்ன அண்ணாமலை பற்றி எழுதியிருந்தது சிறப்பாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது சிறையிடப்பட்ட சின்ன அண்ணாமலை அவர்களை, மக்கள் திரண்டெழுந்து வந்து சிறையை உடைத்து விடுதலை செய்தது பற்றியும், அவர் பிறந்த நேரமும், நாளும், இறந்த நேரமும், நாளும் ஒன்றே என்ற தகவலையும் தெரிந்து கொள்ள முடிந்தது. (18.6.1920 காலை 10.45 - 18.6.1980 காலை 10.45 மணி)

தினமணி நாளிதழுக்கும், அதன் வழியே பல பயனுள்ள, சுவையான தகவல்களை வழங்கிய எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Grateful thanks to:
Carson Ding and HEALTH MYTH EXPOSED.com:

http://www.health-myth-exposed.com/