15 ஆக., 2020

நம்பிக்கை நட்சத்திரங்கள் : திரு. அப்துல் நாசர் ஐ.ஏ.எஸ்.

17 ஆண்டுகள் அனாதை ஆசிரம இல்லத்தில் இருந்து உருவான அப்துல் நாசர் இன்று ஐஏஎஸ்; மாவட்ட ஆட்சியர்!

வறுமை காரணமாக 5 வயதிலேயே குடும்பத்தை விட்டுப் பிரிந்து அனாதை இல்லத்தில் தங்கித் துயரங்களோடு படித்தவர் இன்று கலெக்டராகத் தன் தகுதியை உயர்த்தி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பணியிலும் இருக்கிறார். இளம் வயதில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்தால் வாழ்க்கையில் விரும்பிய எதையும் சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாகவும் விளங்குகிறார்!

அவரது பெயர் அப்துல் நாசர். சொந்த ஊர் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி. "எனக்கு நன்றாகத் தமிழ் தெரியும்" என்பவருக்கு, மேலும் ஆறு மொழிகள் நன்றாகத் தெரியும்.

அவரது குழந்தைப் பருவம் கலங்க வைக்கும் நெகிழ்ச்சிப் பின்னணியைக் கொண்டது. நாசர் 5 வயதில் பழக்கடை வைத்திருந்த தந்தையை இழந்து விட்டார். அவருடன் பிறந்தவர்கள் 6 பேர். 4 பெண்கள், 2 ஆண்கள். இவர்தான் கடைக்குட்டி. தாயார் மான்யும்மா ஹஜ்மா அக்கம் பக்கம் வீட்டு சமையல் வேலை சென்று, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருக்கிறார்.

6 பேருக்கும் மூன்று வேளை உணவு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட, மூத்த
பிள்ளை காசிமை முதலில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்த்து இருக்கிறார் அம்மா.அப்போதும் கஷ்டம் தொடரவே, அவரது உறவினர்கள் அப்துல் நாசரையும் அனாதை இல்லத்தில் சேர்த்துப் படிக்க வைக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள். அங்கு மூன்று வேளை உணவு தடையின்றி கிடைக்கும் என்பதால் வேறு வழியின்றி நாசரை தலச்சேரியில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்திருக்கிறார். அங்கு தங்கிப் படித்த நாசர், தாயாரின் பாரத்தை குறைப்பதற்காக பள்ளிக்கூடம் முடிந்த பிறகு அப்போதே வேலைக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்.

ஆசிரமத்தில் இருந்து பள்ளி இரண்டு கிலோ மீட்டர்.பள்ளி முடிந்து வரும் வழியில் அம்மாவைப் போய்ப் பார்ப்பார் நாசர்.சின்ன வயதாகவே அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுவார்.ஆசிரமத்தில் பெரிய பையன்கள் நாசரை வேலை வாங்குவதோடு தலையில் குட்டவும்
செய்திருக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் இவற்றைப் பொறுக்க முடியாத நாசர், ஆசிரமச் சுவர் ஏறிக் குதித்து வெளியே ஓடி வந்து விட்டார். ஓட்டல் ஒன்றில் டேபிள் கிளீனிங் வேலை கிடைத்தது; மூன்று வேளை சாப்பாடும் கிடைத்தது.

வீட்டுக்கு இது தெரியவர, மீண்டும் பள்ளி,
ஆசிரமம் கொண்டு போகப் பட்டார்.
மீண்டும் பெரிய மாணவர்கள் சித்ரவதை.எட்டாம் வகுப்பு படிக்கும்போது மீண்டும் ஓடி வந்து விட்டார் நாசர். 

அப்போது சக்காத் காசு (நோன்பு காலங்களில் பணக்காரர்கள்
ஏழைகளுக்கு வழங்கும் உதவி) கொஞ்சம் கிடைத்தது.அந்தக் காசில்
அரை டிக்கெட் எடுத்து திருவனந்தபுரம்
ரயில் ஏறி விட்டார்.அங்கு ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது.கொஞ்ச நாள் இப்படியே போனது.

‘‘நான் தலச்சேரியில் இருந்து கோழிக்கோடு, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு வேலை தேடிச் சென்றிருக்கிறேன். ஓட்டல்கள், கடைகளில் டெலிவரி பாயாகவும், கிளீனராகவும் வேலை பார்த்தேன். 16 வயதைக் கடந்தபோது கேஷியர், செய்தித்தாள் வினியோகிஸ்தர், எஸ்.டி.டி. பூத் ஆபரேட்டர் போன்ற பணிகளைச் செய்தேன்’’ என்கிறார்
நாசர். வேலை பார்த்த ஓட்டல் முதலாளி
கை தவறி விழுந்து உடைந்த பிளேட்
ஒன்றிற்காகக் கடுமையாகத் திட்ட,
மீண்டும் அம்மாவிடம் தலைச்சேரி வந்து சேர்ந்தார்.

அம்மா எப்படியாவது நாசர் பத்தாவது படித்தால் ஒரு வேலை கிடைக்கும் என்று உறவினர் வீட்டுக்கு கொல்கத்தா அனுப்பி வைத்தார்.அங்கு அப்துல் 10-ஆம் வகுப்பு படித்து முடித்ததும் மீண்டும் தலச்சேரி வந்து விட்டார். திருச்சூரில் உள்ள வட்டனப்பள்ளி அனாதை இல்லத்திற்கு இப்போது கொண்டு விடப் பட்டிருக்கிறார்.

அதன் நிர்வாகி உமர் குட்டி சிறந்த மனிதர்; படி படி என்று நாசரை விடாமல் துரத்திக்கொண்டு இருந்திருக்கிறார் அவர்.படிப்பின் ருசியை நாசருக்குக் காட்டியவர் அவரே‌.

அங்கு தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து முடித்த நாசர் பெங்களூரு சென்று ஒரு வருட டிப்ளமோ கல்வி பயின்று பின்னர் தலச்சேரிக்கு திரும்பி வந்து அரசுக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்தார். அதன்பிறகு கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும், அதைத்தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி படிப்பும் படித்து முடித்தார். 

உமர் தான் நடத்திய பள்ளியில் ஆங்கில ஆசிரியர் வேலை தந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் படிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதில் நாசர் உறுதியாக இருந்திருக்கிறார். படித்துக்கொண்டே கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் படிப்பை விடாமல் தொடர்ந்திருக்கிறார்.

நாசர் 17 வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து அனாதை இல்லத்தில் தங்கி இருந்திருக்கிறார். ஒருமுறை அந்த இல்லத்துக்கு வந்த தலச்சேரி துணை கலெக்டர்தான் நாசரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘‘தற்போதைய நிதி ஆயோக் செயல் அதிகாரி அமிதாப் காந்த், 1983-ஆம் ஆண்டு தலச்சேரி துணை கலெக்டராக இருந்தார். அவர் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களிடத்தில் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார். அவரது வருகையும், பேச்சும் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. அவரைப் பார்த்து பிரமித்துப் போனோம். இன்றும் கூட நிறைய பேர் அவரை அன்போடு நினைவு கூர்கிறார்கள். அவரது நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது’’ என்று கூறும் நாசருக்கு, திருமணம் ஆனது.

அதே நேரம் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையும் கிடைத்தது. அவருடைய மனைவி ருக்சனாதான் உந்து சக்தியாக இருந்து கணவரை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கிறார்.

நாசரின் மனைவி  ஆசிரியை. அவர்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு நாசரை ஊக்கப்படுத்தி இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலின்படி சென்னை, டெல்லி, அலிகார் போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று போட்டி தேர்வுக்குத் தயாராகி இருக்கிறார். 

பின்பு கேரள சர்வீஸ் கமிஷன் தேர்வில் வென்று மாநில அரசுப் பணியில் சேர்ந்திருக்கிறார். சிறப்பாகப் பணிபுரிந்து 2015-ஆம் ஆண்டு சிறந்த துணை கலெக்டர் விருதும் பெற்று இருக்கிறார். கேரள அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். 

நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தும் நடைமுறையைக் கேரளாவில் கொண்டு வந்ததில் நாசரின் பங்களிப்பு முக்கியமானது. நுழைவுத் தேர்வுத் துறை கமிஷனராக சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். தற்போது கொல்லம் மாவட்ட கலெக்டராகப் பொறுப்பேற்று திறமையாக செயல்பட்டு வருகிறார்.

நாசரின் தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தான் நல்ல நிலையில் இருப்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் தாயார் மரணத்தைத் தழுவியது  வெகுவாக பாதித்துள்ளது அப்துல் நாசரை. 

‘‘மகன் நல்ல நிலையில் இருக்கிறான். சிறப்பாகச் செயல்படுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் தாயார் பிரிந்து விட்டது மனதில்வேதனை  வடுவாக இருக்கிறது’’ என்று அப்துல் நாசர் கூறுகிறார், கண்ணீரோடு...


நன்றி : திரு.சத்தியம் சிவம் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: