6 டிச., 2020

நூல் நயம் : நண்டு - சிவசங்கரி

நண்டு - சிவசங்கரி

நதி

ராம், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில், ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்த பையன். சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவினால் அவதியுண்டு அவனுக்கு. அவன் குடும்பம் பெரியது. அவனுக்கு அம்மா என்றால் மிகப் பிரியம். குடியும், கூத்துமாக இருக்கும் அப்பாவை கொஞ்சமும் பிடிப்பதில்லை. அப்பா, தான் சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியில் போகுமாறும் ஒருநாள் கத்த, மறுத்து வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறான்.

இஞ்சினியரிங் படித்த அவனுக்கு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறது. குடியிருக்க வாடகைக்கு வீடு தேடும்போது, புரோக்கர், சன்னதி தெருவில், கோவிலுக்கு எதிர்ப்புறம், ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டின் மாடி போர்ஷனைக் காட்டுகிறார். வீட்டில் குடித்தனக் குடும்பங்களில் இளம்பெண்கள் இருப்பதால், பேச்சிலரான ராமிற்கு மாடி அறையை வாடகைக்கு விட ஹவுஸ் ஓனர் தயங்குகிறார். ஆனால் ராமின் இயல்பான, தண்மையான குணத்தைப் பார்த்து சம்மதிக்கிறார்.
 

அவ்வீட்டினுள்தான், ஒரு குடித்தனத்தில் ராமின் கம்பெனி அலுவலகத்தில் வேலை பார்க்கும் சீதா தன் அம்மாவுடன் வசிக்கிறாள். சீதாவிற்கு அப்பா கிடையாது. சீதாவின் அக்காவிற்கு திருமணமாகி விட்டாலும், கணவனால் சீதாவின் அக்கா துன்பப்படுகிறாள். சீதாவிற்கு, லட்சுமி அலுவலகத்தில் உடன் பணி புரியும் தோழி. ஹவுஸ் ஓனரின் மகள் உமா, ராமைக் காதலிக்கிறாள்.

ராமிற்கும், சீதாவிற்கும் இடையில் காதல் மலர்ந்து சீதாவின் அம்மாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் (ராமின் அப்பா இந்த திருமணத்திற்கு சம்மதிப்பதில்லை. லக்னோ வீட்டிற்கே வரவேண்டாமென்று சொல்லிவிடுகிறார்). ராம், சீதாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.

ராமின் தங்கைக்கு லக்னோவில் திருமணம் நிச்சயமாக, சீதா ராமின் குடும்பத்தினர் அனைவரையும் பார்க்க ஆசைப்பட, அப்பாவின் தடையை மீறி, ராம் சீதாவையும், குழந்தையையும் லக்னோ அழைத்துச் செல்கிறான். சீதாவை ராமின் அப்பா தவிர அனைவருக்கும் பிடித்துப் போகிறது. ராமின் அப்பா மறுபடியும் அவர்களை வீட்டை விட்டுத் துரத்துகிறார்.

குளிரில், இரவில் ட்ரெய்னில் சென்னை திரும்பும்போது  ராமிற்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகிறது. வீட்டில் குழந்தைக்குப் பெயர் வைக்கும் ஃபங்ஷன் வைத்திருந்தாலும், இருமல் அதிகமாக தனியே செக்கப்பிற்கு மருத்துவமனை செல்கிறான் ராம். பரிசோதனைகளின் பின், ராமிற்கு முற்றிய கேன்சர் இருப்பது தெரிய வருகிறது. 

***

1975-ல் வெளியான சிவசங்கரியின் “நண்டு” கதையை, மஹேந்திரன் எனும் படைப்பாளன், கலைஞன் மாயங்கள் செய்து 81-ல் திரையில் ஒரு அற்புதமான எவர்கிரீன் கிளாஸிக்காகப் படைத்திருக்கிறார்.

“நண்டு” பார்த்து முடித்ததும், நினைவு, ராமிலிருந்து மஹேந்திரனுக்குத் தாவி, அப்புறம் சிவசங்கரிக்குத் தாவியது. சிவசங்கரியைப் பற்றி நினைத்ததும், இந்துமதியும், பாலாவும், ராஜூவும் நினைவில் வந்தார்கள். இந்துமதி நினைவு வந்தவுடன், “தரையில் இறங்கும் விமானங்கள்” நினைவு வந்தது. ருக்மிணி அண்ணி, அவரின் சிறிய வெண்கல் மூக்குத்தியுடன் நினைவில் மேலெழுந்தார்.

ஆம், “நண்டு” படத்தின் அழகு, முன்னிரவில் வாசல் படியில் உட்கார்ந்திருக்கும் ருக்மிணி அண்ணியின் ஒற்றை சிறிய வெண்கல் மூக்குத்தி, தெருவிளக்கின் ஒளியில் மின்னிடும் அழகு.

வெங்கி

நன்றி :

கருத்துகள் இல்லை: