அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர்!!
வன்தொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. `புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே` என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், `பத்திமையும் அடிமையையும்` என்று திருப்பதிகம் தொடங்கி, `எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை` என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
திருச்சிற்றம்பலம்
ஏழாம் திருமுறை
திருவாரூர்
பண் :பழம் பஞ்சுரம்
பாடல் எண் : 2
ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவும் கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.
பொழிப்புரை :
ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச்சென்று அவனை வணங்குவேன் .
குறிப்புரை :
` வண்ணம் ` என்பது , வகையைக் குறித்தது . ` மன்மதன் ஐந்து வகையான மலர்களையே அம்பாக உடையவன் ` என்பதும் , அம் மலர்கள் , ` தாமரை , மா , அசோகு , முல்லை , நீலம் ` என்பதும் , அவை முறையே , ` உன்மத்தம் , மதனம் , மோகம் , சந்தாபம் , வசீகரணம் ` என்னும் பெயருடையனவாய் , ` சுப்பிர யோகம் , விப்பிர யோகம் , சோகம் , மோகம் , மரணம் ` என்னும் அவத்தைகளைச் செய்யும் என்பதும் , அவ்வவத்தைகள்தாம் , பேச்சும் நினைவும் , மிகுதலும் , பெருமூச்செறிதலும் , உடல் வெதும்பி உணவை வெறுத்தலும் , அழுது பிதற்றுதலும் , மூர்ச்சையுறுதலுமாம் என்பதும் செய்யுள் வழக்காதலின் , அவை எல்லாம் அடங்க , ` ஐவணமாம் பகழியுடை ` என்றும் , அவனை வென்றார் உலகத்து அரியராகலின் , ` அடல் மதனன் ` என்றும் , அவனை எளிதில் அழித்தமை தோன்ற , ` பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் தீவிழித்த சிவமூர்த்தி ` என்றும் , அம்மூர்த்தியைப் பிரிந்து இங்கே இருப்பேனாயின் , அவனது இன்பத்தை யுணராத பிறர் போல யானும் அம்மன்மதனால் வெல்லப்பட்டேனாவேன் ` என்பார் . ` எம் ஆரமுதை என் ஆரூர் இறைவனை எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் ` என்றும் அருளினார் . மன்மதனது வெற்றிப் பாட்டினை , கந்த புராணத்துக் காமதகனப் படலத்துள் , அவனே கூறு மாறாய் வந்த வற்றான் அறிக
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பொற்கழல் போற்றி ! போற்றி !!
நன்றி :
ஓதுவார் மூர்த்தி சிவத்திரு.அரிஹர தேசிகர் அவர்கள்
திரு மஹா ஷங்கரன்
www.thevaaram.org
மற்றும்
முகநூல்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக