“எழுத்தாளன் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறான் என்றால் அந்தச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறான், ஒரு வாக்கியத்தை ஏன் ஒரு தனியான விதத்தில் சொல்கிறான் என்பதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்வதற்கு அவன் எழுதிய எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாசித்து அவனை முழுசாக உள்வாங்கிக் கொண்டிருக்கவேண்டும். ஒரு வாசகனைவிட ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இது முக்கியமான தேவை.”
ஒன்பது மாதங்களுக்கு முன் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் BRAVE NEW WORLD என்ற புகழ்பெற்ற நாவலை மொழிபெயர்ப்பதற்கு என்னைக் கேட்டுக்கொண்டபோது க்ரியா ராமகிருஷ்ணன் சொன்ன மேற்கண்ட வாசகம் அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை அளித்துவிடும்.
ஒரு மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்குவதற்குமுன் எவ்வளவு முன்தயாரிப்புகளை மொழிபெயர்ப்பாளன் மேற்கொள்ளவேண்டும் என்பதை அவரிடமிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் மொழிபெயர்க்கக் கொடுத்திருந்த அந்நாவலைப் பற்றி அதுவரை நான் அறிந்திராத பல்வேறு விஷயங்களை முதலில் விரிவாக எடுத்துரைத்தார். அவற்றுக்கான இணைப்புகளை அனுப்பிவைத்தார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் வாசித்திருந்த அந்நாவலை மீண்டும் எடுத்து வாசிக்கச் சொன்னார். “இன்றைய காலகட்டத்துக்கு அது எவ்வளவு பொருத்தமான நாவல் என்று உங்களுக்குப் புரியும்” என்றார். சில போதை மருந்துகளை உட்கொண்டு உயர்நிலை தியான முறைகளை ஹக்ஸ்லி முயன்றுபார்த்தை விளக்கினார். The Doors of Perception படித்துப்பாருங்கள், என்றார். மேலும் அவருடைய முக்கியமான நாவலான Island –ஐ நிச்சயம் படிக்கவேண்டும் என்றார். 1930களில் எழுதப்பட்ட ஒரு துர்க்கற்பனை நாவலான BRAVE NEW WORLD -ல் முன்யூகித்திருந்தவை எப்படி வெகு சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கியிருக்கின்றன என்று Brave New World – Revisited என்றொரு புத்தகத்தை முப்பது வருடங்கள் கழித்து எழுதியிருப்பதைச் சொன்னார். நான்கு நாட்கள் கழித்து இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அவரிடமிருந்து வந்து சேர்ந்தன. ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்து நன்றி சொன்னபோது, “இந்த புத்தங்கள் எல்லாவற்றையும் முழுசா படிச்சிட்டுத்தான் பிரேவ் நியூ வேர்ல்டு நாவலை மொழிபெயர்க்க ஆர்ம்பிக்கணும்” என்றார். மேலும் www.wordreference.com என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தினார். மொழிபெயர்க்கும்போது நமக்குப் புரியாத நுட்பமான இடங்களுக்கு இந்தத் தளத்தில் விளக்கம் தருவார்கள் என்றார்.
நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியதும் அவ்வப்போது அழைத்துப் பேசுவார். இந்நாவல் முழுக்க ஷேக்ஸ்பியர் நாடக வசனங்கள் வந்துகொண்டே இருப்பதைப்பற்றி அவரிடம் குறிப்பிட்டு, அந்த இடங்களை எப்படி மொழிபெயர்க்கலாம் என்று கேட்டேன். ” மூல நூலில் அந்த வரிகளைத் தனியா குறிப்பிட்டு இருக்காதே, உங்க ஐடியா என்ன?” என்றார். “நாவலில் இடம்பெறுகிற ஷேக்ஸ்பியர் வரிகளை தமிழில் மொழிபெயர்த்துவிட்டு, அந்த வரிக்கு நட்சத்திரக் குறியிட்டு கீழே அடிக்குறிப்பில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளைப் போட்டுவிடலாம் சார்” என்றேன். சற்று நேர அமைதிக்குப் பின், “வெரி குட்” என்றார் மென்மையாக.
“நீங்க ஒவ்வொரு அத்தியாயத்தையும் மொழிபெயர்த்து அனுப்பிக்கிட்டே இருங்க. டிக்ஷனரி வேலை முடியும் வரை நீங்க அனுப்புவதை என்னால் சரிபார்க்கவே முடியாது. நவம்பர் ரெண்டாம் வாரத்தில ஃப்ரீயாயிடுவேன்.’’ என்றார்.
கடைசியாக அவர் பேசியது நோய்த்தொற்று தாக்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் இருக்கக்கூடும். "எவ்வளவு முடிச்சிருக்கீங்க?" என்றார். அப்போது கிட்டத்தட்ட 60% முடித்திருந்தேன்.
இனி என் மொழிபெயர்ப்பை மேலாய்வு செய்யவும், செம்மையாக்கவும் அவர் இல்லை. இனி க்ரியா தொடருமா என்பதும் தெரியாது.
ஆனால் அவருக்கு நான் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது 'தீரமிக்க புது உலகம்' மொழிபெயர்ப்பை ராமகிருஷ்ணன் அவர்கள் மானசீகமாக என் அருகில் அமர்ந்திருப்பது போன்ற பாவனையில் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு வரியையும் அவரது ஒப்புதலுக்கிணங்க எழுதி முடிப்பது மட்டுமே. அவர் நிச்சயமாக என்னோடும் ஹக்ஸ்லியோடும் இருப்பார் என்று எனக்குத் தெரியும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக