போன தலைமுறை எழுத்தார்வலர்களுக்கு கிடைக்காத பெரும் பாக்கியம் இந்த தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் இந்த தலைமுறைக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதன் வழியாக பல அனுகூலங்கள் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. சில அனுகூலங்களும்! கூடவே சில பிரதிகூலங்களும்!
எனக்கு கிடைத்த அனுகூலமாக நான் கருதுவது.... எழுத்தும் அது சார்ந்த விஷயங்களும்! சமூக ஊடகம் இல்லாத காலகட்டத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பதோடு முடிந்துவிடும் எனக்கும் எழுத்தாளருக்குமான பந்தம்! பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு வேண்டுமென்றால் எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்! இலக்கிய சந்திப்புகள் மூலம் அவர்களை முகமுகமாய் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைக்கும்!
என்னை போன்ற சிறுநகர வாசிகளுக்கு, கிராமவாசிகளுக்கு இந்த வாய்ப்பு சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்திருக்கிறது எனலாம்.
கடந்த ஒரு வருடத்தில் கோரோனா நல்கிய ஒரு சில நல்ல நல்ல விஷயங்களில் ஒன்று... ஜூம், கூகுள் மீட் வழியாக நடத்தப்பட்ட இணைய வழி கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள்! இதன் மூலம் ஏராளமான எழுத்தாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
நேற்றிரவு அப்படியொரு அற்புதமான வாய்ப்பு எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுடன் கிடைத்தது.
பா.ராகவன் மிகச்சிறந்த அபுனைவு எழுத்தாளர். அவரது டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், காஷ்மீர் ஆகிய நூல்கள் என் விருப்ப நூல்கள். அவரது எழுத்து நடை மிக எளிமையாக ஒரு சராசரி வாசகனுக்கும் புரியும் வகையிலேயே இருக்கும்.
நேற்று நடந்த பயிலரங்கிலும் அதே அதிசயம் நடந்தது. தனது நெருங்கிய நண்பனிடம் உரையாற்றுவதை போன்று மனதுக்கு நெருக்கமான உரையாடல்!
மிக மென்மையான குரலுடன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். உங்கள் முகத்தை காட்டி அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் என்று இயல்பாக நம்மை நெருங்குகிறார். சிறிதும் தயக்கம் இல்லாமல் தன் குறைகளை ஒத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை கூடியிருக்கிறது.
Bukpet. com ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளனாக ஆசைப்படும் ஒருவர் தன்னை மேம்படுத்திக்கொள்ளஅவர் விவரித்து கூறிய ஒவ்வொன்றும் என்னை போன்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதம்!
வாசகன் என்பவன் யார்?
எழுத்து என்பது என்ன?
எழுத்து என்பது எதை உள்வாங்கியதாக இருக்க வேண்டும்?
எழுத்து யாரை திருப்திபடுத்த வேண்டும்?
எப்படிப்பட்ட மொழிநடை வேண்டும்?
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே மொழி நடையை பின்பற்றலாமா? கூடாதா?
வர்ணனைகள் அவசியமா? அது எவ்வளவு நீளம் வரை போகலாம்?
ஒரு சிறுகதையின் அல்லது ஒரு நாவலின் தொடக்கம்.... அதாவது முதல் வரி, முதல் பத்தி, முதல் அத்தியாயம் எப்படி இருந்தால் அது வாசகனை ஈர்க்கும்?
இன்னும் பல விஷயங்களை மிக எளிமையாக பல்வேறு உதாரணங்களுடன் விவரித்தார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி போயிருக்கலாமோ என்று எண்ண வைத்துவிட்டது.
நன்றி சார்!
எழுத்து எனும் பெருங்கடலின் ஒரு துளியை பகிர்ந்ததற்கு!
எழுத்துலகில் நுழைய ஆசைப்படும் என்னை போன்றோர்க்கு இது சிறு துளியல்ல... பெருங்கடல்!
Pa Raghavan
Bukpet
நன்றி :
திரு. பா. ராகவன்
புக்பெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக