நான்காம் ஆண்டு வாசிப்பு போட்டி
#வரலாறு_சார்ந்த_நூல்கள்
உப்பு வேலி
ராய் மாக்ஸம்
தமிழில்: சிறில் அலெக்ஸ்
உப்பு என்பது ஒரு மனிதனுக்கு அவன் வாழ்வில் அடிப்படை தேவையாகும். நாம் சாதரணமாக ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை வாங்க லிஸ்ட் போட்டால் கூட அதில் பலர் உப்பை சேர்க்க மாட்டோம். என்ன ஒரு 15 ரூபாய் வருமா? அதை தெரு கடைகளிலேயே வாங்கி கொள்ளலாம். ஆனால் திடீரென அந்த உப்பின் விலை அதிகமானால், ஒரு கிலோ உப்பின் விலை 1000 ரூபாயாக இருந்தால் நமது நிலை என்னவாக இருக்கும்.
உப்பு வேலி உலக அளவில் மிக முக்கியமான புத்தகமாகும். உலக வரலாற்றில் யாருமே பதிவு செய்யாத ஒரு இரத்தம் பொதிந்த வரலாற்றை பதிவு செய்துள்ளது. ராய் மாக்ஸம் ஒரு டீ எஸ்டேட்டின் முதலாளி ஆவார். இது இல்லாமல் ஒரு நூலகத்தில் பணி புரிந்து வருகிறார். அவர் இலண்டனில் உள்ள பழைய புத்தக கடையான குயிண்டோ என்ற புத்தக கடையில் பழைய புத்தகங்கள் வாங்குவது வாடிக்கை.
அப்படி அவர் வாங்கிய புத்தகம் தான் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ‘ஒரு இந்திய அதிகாரியும் புலம்பல்களும் நியாபகங்களும்’ இந்த புத்தகத்தில் ஒரு சிறு பகுதியில் 1869 இல் 2,300 மைல்களுக்கு உப்பு வேலி இருந்ததாகவும் அதை பராமரிக்க 12,000 பேர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளது. இதை படித்தபோது அவருக்கு ஆச்சரியம். இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க வேலியை பற்றி அவர் இப்போதுதான் படிக்கிறார்.
பிறகு அதன் மீது ஈர்ப்பு உண்டாகவே அவர் இதுக்குறித்து பிரிட்டன் இந்திய அருங்காட்சியகத்தில் கோப்புகளை அலசுகிறார். அதில் ஆண்டு கணக்கு விவரங்களில் உப்பு வேலிக்கு ஒதுக்கிய தொகை குறித்தும் ஆட்கள் குறித்தும் விவரங்கள் கிடைக்கின்றன.
ஆனால் எங்குமே உப்பு வேலி குறித்து ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே அந்த உப்பு வேலியை தேடி இந்தியா கிளம்புகிறார் ராய் மாக்ஸம். இந்த வரலாறு பயணம் மூலமாக அவர் உப்பு வேலியை மீட்டெடுப்பதே இந்த புத்தகம். இதன் மூலமாக ஏன் இந்தியாவில் ஒரு உப்பு வேலி உருவாகியது என்றும் உப்பின் முக்கியத்துவத்தையும் நம்மால் அறிய முடியும்.
உப்பு வேலி
வெள்ளையர்கள் இந்தியாவை சுரண்டுவதற்காகவே அதை அடிமைப்படுத்தினர் என்பது பலரும் அறிந்ததே. அதில் சில அதிகாரிகளின் பெயர் நமது சிறு மூளையில் சிறிதாக நினைவில் இருக்கலாம். அப்படி ஒரு பெயர்தான் ராபர்ட் க்ளைவ். ராபர்ட் க்ளைவ் இந்தியாவில் உப்பு உற்பத்தி மீது கவனம் செலுத்தினார். உப்பு என்பது அப்போது பல நாடுகளிலும் பணக்காரர்களுக்கான பொருளாக இருந்தது. இதனால் சுத்தமான உப்பு சற்று அதிக விலையில் விற்றன. ஆனால் தரம் குறைவான உப்புகள் ஏழைகளுக்கு கிடைத்தன. இதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் உப்பின் மீது விதித்திருந்த வரி.
ராபர் க்ளைவ் உப்பின் வழியாக கொள்ளை லாபம் பார்க்க திட்டமிட்டார். எனவே உப்பின் மீதான வரியை அதிகப்படுத்தினார். இதனால் ஒரு அளவிற்கு மேல் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் உப்பு எட்டா கனியானது. அப்போதுதான் கள்ளச்சந்தை உருவானது. தரம் குறைவான உப்புகள் ஏழை மக்களுக்கு கருப்பு சந்தையில் விற்கப்பட்டன.
க்ளைவிற்கு உப்பு வரி மூலமாக அதிகமான பணம் கிடைத்தது. எனவே அதை இன்னும் நெருக்க நினைத்தார். இதற்காக யாரும் உப்பை கடத்தா வண்ணம் வீரர்களை பணிக்கு அமர்த்தி சுங்கங்களை நிறுவினார். இந்த சுங்கங்களை இணைக்கும் விதமாக ஒரு வேலியை அமைத்தார். அதுதான் உப்பு வேலி இந்த உப்பு வேலியை தாண்டி போகும் ஒவ்வொரு உப்பு மூட்டைக்கும் ஆங்கிலேயர்களிடம் வரி செலுத்த வேண்டும்.
உலகின் மிக நீண்ட வேலி என இது அழைக்கப்படுகிறது. காஷ்மீருக்கு அருகே உருவான இந்த வேலி ஒடிசாவிற்கு அருகே வந்து முடிவடைகிறது. இதனால் க்ளைவ் இலட்சங்களில் புரண்டார். ஆனால் மக்களோ பஞ்சத்தில் வாடி வந்தனர் அப்போது ஒரு வருடத்திற்கு தேவையான உப்பின் விலையானது 6 ரூபாய் ஆகும். ஆனால் ஒரு விவசாயியின் மாத வருமானம் சராசரியாக 1 ரூபாய் ஆகும். தன் வருமானத்தில் கால் பகுதியை செலவு செய்தால் மட்டுமே அவனால் ஒரு மாதத்திற்கு தேவையான உப்பை பெற முடியும். உணவுக்கே அந்த ரூபாய் பத்தாத போது உப்பு என்பது அவர்களுக்கு சொகுசு பொருளாக ஆனது.
பிறகு 1770 களில் க்ளைவ் அரிசியையும் அதிகமாக பதுக்கினார். இதன் மூலம் ஆங்கிலேய பணக்காரர்களில் ஒருவராக இவர் ஆனார். இதற்கு இங்கிலாந்தும் சப்போர்ட்டாக இருந்தது. ஆனால் இதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் வங்கத்தில் இறந்தனர். ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் நடந்த பட்டினி சாவு அவை. அதன் பின்னர் 90 வருடங்களுக்கு இந்தியாவில் உப்பு வரி இருந்தது. இறுதியாக 1942 இல் உப்பு வரி நிறுத்தப்பட்டது.
உப்பு உடலுக்கு இன்றியமையாத பொருளாகும். உப்பு சரியான அளவில் உடலுக்கு கிடைக்காமல் பலர் இறந்ததாகவும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் உப்பு குறைவால் இறப்பு நிகழும்போது அது உப்பு குறைப்பாட்டால் நிகழ்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே அது பட்டினி சாவுகளாகவும் தொற்றுநோய் சாவுகளாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
உப்பு வேலி பராமரிப்பு, மக்களின் பாடுகள், ஆசிரியரின் பயணம் என இன்னும் புத்தகம் நீள்கிறது.
இந்த புத்தகம் வரலாற்றில் பதிவிடப்படாத ஒரு முக்கியமான விஷயத்தை பற்றிய புத்தகம் ஆகும். கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக