29 ஆக., 2009

தாயுமானவர் பாடல்-2:

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
ஆளினும் கடல்மீதினிலே
ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.

அமிர்த மொழிகள்-3:

ஆசை, அகங்காரம் என்னும் சுமைகளோடு இருக்கும்வரை இறைவனின் கருணைத் தென்றல் நம்மை உயரே எடுத்துச் செல்லாது. சுமையைக் குறைக்க வேண்டும்.

வீடீயோ கவிதைகள்-2: "கவிப்பேரரசு வைரமுத்துவின் "தோழிமார் கதை"

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-4:

இன்றைய சிந்தனைக்கு-66:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

28 ஆக., 2009

வீடீயோ கவிதைகள்-1: கவிஞர் வைரமுத்துவின், "அம்மாவுக்கு"



கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாப் பொக்கிஷம். அவரது கவித்திறனை வியந்து போற்றி மகிழ்வது மனதுக்கு இனிமை தருவது. தன் தாய் மேல அவர் பாடிய இப்பாடல் அற்புதமான, நெஞ்சை உருக்கும் ஒன்று.

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-3: "இறைவனிடம் கையேந்துங்கள்"



நாகூர் ஹனீஃபாவின் கணீரென்ற குரலும், எளிமையும், இனிமையும், நெஞ்சை உருக்கும் தன்மையும் கூடிய இப்பாடல் என் நெஞ்சில் நிலைத்த பாடல்களில் ஒன்று.

இன்றைய சிந்தனைக்கு-65:

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

27 ஆக., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-2: "பாவேந்தரின் "தமிழுக்கும் அமுதென்று பேர்"

இன்றைய சிந்தனைக்கு-64:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

மேகமே மேகமே-3:

இப்படத்தைப் பார்க்கையில் இரயில்வே கேட்டும், மரங்களும் மேகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செய்வதைப்போல் இருக்கிறதல்லவா?

26 ஆக., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-1: "மகாகவியின் "நிற்பதுவே, நடப்பதுவே"



இப்பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சில் ஒரு இனம்புரியாத வேதனை. மகாகவி வாழ்வில் அனுபவித்த துன்பமெல்லாம் மனதில் தோன்றி மறையும். என்னால் மறக்க முடியாத பாடல் இது என்பது மட்டுமல்ல, பலராலும் மறக்க முடியாத பாடல், கண் கலங்க வைத்த பாடல் இது.

மகாகவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாடலை உயிர்ப்போடு பாடிய ஹரீஷ் ராகவேந்ரா, உணர்வு பூர்வமாக இசையமைத்த இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஞானசேகரன், யூட்யூபில் கொண்டுதந்த 'அர்சரா' மற்றும் யூட்யூப் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும்

மேகமே மேகமே-2:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்காதாகி விடின்.

இன்றைய சிந்தனைக்கு-63:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

25 ஆக., 2009

மேகமே மேகமே-1:

மேகங்களில்தான் எத்தனை வகை! மேகங்களைப் பற்றிக் பாடாத கவிஞர்கள் இல்லை. மேக விடு தூது தொடங்கி மேகங்கள் மேல எத்தனை கவிதைகள்! திரைப்படப் பாடல்கள்தான் எத்தனை! நீலமேகம், கார்மேகம், மேகநாதன் என்று எவ்வளவோ பெயர்கள்! வானம் பார்த்து வேளாண்மை செய்யும் விவசாயிக்கு மேகங்கள் மழையைப் பொழிந்து வாழ்வை வளமாக்கும் கடவுள்கள். எனக்கும் மேகங்கள் மேல மோகம் ஏற்பட, என் கேமராவினால் நிறைய மேகங்களைச் சுட்டுத் தள்ளினேன். ஒவ்வொரு நாளும் ஒரு படம் என் வலைப்பூவில் பதிவு செய்ய உள்ளேன், இன்று தொடங்கி.

இன்றைய சிந்தனைக்கு-62:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

18 ஆக., 2009

இன்றைய சிந்தனைக்கு-56:

மூத்தோர் சொல்லும்,
முது நெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்

- முதுமொழி

எனக்குப் பிடித்த கவிதை-55: "எல்லாம் வசப்படும்" - நாஞ்சில் நாடன்

குற்றாலத்து அருவியின் பாய்ச்சலை
அறைக்குள் நிறுத்தலாம்
வங்காளத்து விரிகுடா ஓசையை
அகழ்ந்து கொணரலாம்
சுந்தர் வனத்து காட்டின் இருட்டை
முன்றில் படர்த்தலாம்
பெரிய கோயில் பிரகாரக் குறிகளைப்
படுக்கையில் புணரலாம்
சிங்கக் குட்டியின் செவியைத் துளைத்து
சங்கிலி கோர்த்து நடத்தித் திரியலாம்
ஆதிகேசவன் கோயிலில் பெயர்த்த
பாளம் பதித்து அழுக்குத் துவைக்கலாம்
கனகவிசயர் சுமந்த கல்லில்
அம்மியும் குழவியும் அடித்துப் போடலாம்
சந்தனக் காட்டின் வைரம் இழைத்து
கக்கூசுக்கு கதவு பூட்டலாம்
வரவேற்பறையின் வளைவில் நிறுத்த
ரோடின் சிற்பம் செதுக்கித் தருவார்
உணவுக் கூட அகலத்துக்கென
சால்வடர் டாலி வரைந்ததும் தருவார்
அடிப்படையாக அறிக நீ ஒன்று
பொருள் மேல் பொருள் செயும் ஆறு
எதுவென

- மண்ணுளிப் பாம்பு
நாஞ்சில் நாடன் கவிதைகள்
விஜயா பதிப்பகம், கோவை
பக்கங்கள் 64
விலை ரூ.30/-

நன்றி: திரு நாஞ்சில் நாடன் அவர்கள் & விஜயா பதிப்பகம்

17 ஆக., 2009

பாரதி கவிதைகள்-16: "நான்"

வானிற் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணிற் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலும் நான்

விண்ணிற் எரிகின்ற மீனெலாம் நான்
வெட்டவெளியின் விரிவெலாம் நான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

கம்பன் இசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் முருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதர் இசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையரும் துன்பப் புணர்ப்பெலாம் நான்

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்ட நற்சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர் வானின் செல்லுவோன் நான்
ஆனா பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதி நான் .

எனக்குப் பிடித்த கவிதை-54: "நிழல்" - வெ.தி.சந்திரசேகரன்

கருவிலே உருவாக்கி வெளியிலே விழும்வரை
கருவறை நிழலானது
தரையிலே தவழ்ந்துடல் நிமிர்நடை இடும்வரை
தாய்மடி நிழலானது
அரங்கிலே சிறந்தவன் ஆகிவிடும் நாள்வரை
தந்தையின் நிழலானது
இறைவனின் நிழல்போல ஈடிணைய ற்றதுஇவ்
இருவரின் நிழலானது.

அறிவினைப் பெறும்வகை உரைத்திடும் குருவடி
ஆனந்த நிழலானது
உறவினைப் பெறுவது சுகமென நினைத்ததோர்
உயிர்நிழல் எனதானது
இருவரும் இணைந்திட எங்களின் நிழலிலே
எண்ணிக்கை பலவானது
ஒருவரின் நிழலிலே இன்னொருவர் வாழ்வது
இயற்கையின் விதியானது.

- "முற்றுப் புள்ளி சற்றுத் தள்ளி : கவிதைகள்"
வெ.தி.சந்திரசேகரன்
ராசி பதிப்பகம், நெய்வேலி
பக்கங்கள் 96
விலை ரூ.45/-

நன்றி: திரு வெ.தி.சந்திரசேகரன் & ராசி பதிப்பகம்

இன்றைய சிந்தனைக்கு-55:

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

14 ஆக., 2009

நினைத்துப் பார்க்கிறேன்-8: "உவமைகளும் உருவகங்களும்"

பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெண்களின் அழகை வர்ணிப்பதென்பது கவிஞர்களுக்கு கைவந்த கலை. கவிஞர்களின் கற்பனை பெண்களைப் பற்றி எழுதும்பொது சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும் திரைப் பாடல்களில் பெண்களை வர்ணிக்க எத்தனை உவமைகள், உருவகங்கள்! மலரும் கொடியும் பெண்ணென்பார்! நதியும் மதியும் பெண்ணென்பார்! மலர்களில் ரோஜாவில் ஆரம்பித்து தாமரை, மல்லிகை, முல்லை, அல்லி, செண்பகம் என்று கொத்தமல்லிப்பூ வரை சென்றுவிட்டு, இன்னும் ஏதாவது பூ மிச்சமிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறது. கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி என்று எழுதி கனிகளையும் விட்டுவைக்க வில்லை.

புதுமையாக ஒரு கவிஞன் புத்தம் புதிய புத்தகமே என்று சற்று மாறுபட்டு எழுதியபோது ஆஹா என்று ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது அதையெல்லாம் தாண்டி கவிஞர்கள் எங்கோ சென்று விட்டார்கள். தேக்குமர ஜன்னல், தேவலோக மின்னல், ஈச்சமர கட்டில், எலந்தைப்பழ தொட்டில் என்று அவர்கள் கற்பனை எங்கெங்கோ செல்லும்போது சிரிப்பை அடக்க முடிவதில்லை. நீங்களே மனக்கண்ணால் இவற்றை கற்பனை செய்து பாருங்களேன்! அப்புறம் கம்ப்யூட்டரில் ஆரம்பித்து, கப்யூட்டர் மென்பொருள், மொபைல் ஃபோன், சிம் கார்டு என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

இன்னும் அவர்களது கற்பனை எப்படியெல்லாம் விரியப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய சிந்தனைக்கு-52:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

2 ஆக., 2009

தேவாரம்-11:

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஓடியும் உறைப்பனாய்த் திரிவேன்;
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்;
பாசுபதா! பரஞ்சுடரே!

- சுந்தரமூர்த்தி நாயனார்

திருமந்திரம்-13: பதைத்து ஒழிந்தேன் பரமா...

பதைத்து ஒழிந்தேன் பரமா உனைநாடி
அதைத்து ஒழிந்தேன் இனியாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே.