26 செப்., 2011

சூரியின் டைரி-52: சித்தப்பா, சித்தப்பா!

நேற்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டுக் கிளம்பி கோட்டையூர் இரயில் நிலையம் அடைந்தேன். திருச்சி செல்லும் இரயில் ஆறு மணி நாற்பத்தைந்து நிமிடத்திற்கு வந்தது.  அது எனக்கு மிகவும் பிடித்த இரயில். கூட்டமிருக்காது.  சௌகர்யமாக, சிறிதும் டென்ஷன் இல்லாமல், மனதையும், உடலையும் தளர்த்தி ஜன்னல் வழியே காலைப் பொழுதைக் கண்டு மகிழ்வது; ஊன்றிப் படிக்கவேண்டும் என்று வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்த புத்தகத்தைப் படிப்பது; எனது கேனன் கேமராவினால் இயற்கையை அள்ளுவது; சுடோக்குப் போடுவது; கொறிப்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது  என்று மனம் போனபடி ஒரு இரண்டு மணி நேரப் பொழுதைச் சுகமாகக் கழிப்பது -  இத்தனையும் வெறும் பதினான்கு ரூபாய்க்கு.(பேருந்துக் கட்டணம்: ரூபாய் இருபத்தொன்பது - முப்பத்துமூன்று!).

நேற்று நான் திருச்சி சென்றது என் பிரியமான சித்தப்பாவின் கருமாதியில் கலந்துகொள்ள. அவரது இறுதிக் காலத்தில் அவரைக் காணமுடியாமல் போனதும், அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் போனதும் ஒரு சோகம்தான். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த எதற்கும் கலங்காத, அசராத அவரது வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். (இறுதிவரை பெரிய நோய்நொடி எதுவும் இருந்திருக்கவில்லை.)

என்னைப் பொறுத்த வரையில், சிறு வயதிலிருந்தே என் மேல் பேரன்பு கொண்டிருந்தார். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் திருச்சி சென்று அவரோடிருப்பது ஒரு சுகமான அனுபவம். ஊரெல்லாம் சுற்றுவோம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு விடுதியில் விதம் விதமான தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார்.  சினிமாவிற்கு கூட்டிச் செல்வார். இனிதாக உரையாடுவார்.  ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் பல செய்திகளைச் சொல்வார்.  அந்த வயதில் இவற்றைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும்? 


அவருக்கு ஒருவயது ஆனபோது அவரது தந்தையார் மறைந்தார்.  இரண்டு வயது ஆனபோது அன்னையார் காலமானார்.  கிட்டத்தட்ட ஒரு அனாதைபோல அவரும், எனது தந்தையாரும் (அவரைவிட ஐந்தாறு வயது பெரியவர்) குழந்தையே இல்லாத, பணக்காரப் பெரியம்மா வீட்டில் வளர்ந்து ஆளாகினர்.  கணவனை இழந்த அந்தப்பாட்டிதான் இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியது.  சித்தப்பா மேல் பாட்டிக்கு அளவு கடந்த பிரியம்.  அவர் பெறாத பிள்ளை சித்தப்பா.  சித்தப்பாவின் திருமணத்திற்குப் பல ஆண்டுகள் முன்னரே பாட்டி காலமானார்.  விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் வரப்போகிறது என்று எண்ணியிருந்த அத்தனை சொத்துக்களும், பாட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு சட்டப்படி போய்ச்சேர்ந்தது.  

இருப்பினும் இரயில்வேயில் வேலை கிடைத்து, பணக்காரக் குடும்பத்தில், வசதி வாய்ப்புடன் திருமணம் ஆனது.  நன்றாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனிதாக இருந்திருக்க வேண்டிய தன் வாழ்க்கையைச் சிக்கலாக்கி, பிரச்சினை மேல் பிரச்சினைகள் உருவாக, தேவையில்லாத துன்பங்களை எல்லாம் எதிர்கொண்டார்.  எனது சித்தியின் மனம் நோகவைத்தார். அவருண்டு அவரது வேலையுண்டு என்று இருந்திருந்தாலே ஓரளவு வசதியாக வாழ்ந்திருக்கலாம்.  வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன், சைடு பிசினஸ் செய்கிறேன் என்று கண்டவர்களையும் நம்பி பெரிதும் நஷ்டப் பட்டார். தவறான ஆட்களுக்கெல்லாம் ஜாமீன் கையெழுத்துப் போட்டார்; அதனாலும் நிறையத் துன்பம். பின்னர் அவரே வட்டிக்கு வாங்கும் நிலை வந்தது, அதுவும் ஈட்டிக்காரர்களிடம்.  அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் பட்டபாட்டை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.  வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வார்கள்.  அக்கம் பக்கம் எல்லாம் மூக்கு வியர்க்கும்.  சித்தி ஒரு சிறிய ஜாமீன் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.  அவர்களது நிலபுலம் எல்லாவற்றையும் அழித்து, அவர்களது நகைகளை அழித்து, அதன் பிறகு இந்த ஈட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.

ஒரு முறை நான் சென்றிருந்தபோது, அவரிடம் கையில் பணம் இல்லை.  ஒரு எட்டிக்காரரிடம் கூட்டிப் போனார்.  அவரிடம்  நூறு ரூபாய் கடன் வாங்கினார்.  என் பொருட்டு என்றுதான் சொல்லவேண்டும். பத்து ரூபாய் மாத வட்டியைக் கழித்துக் கொண்டு, தொண்ணூறு ரூபாயைக் கொடுத்தான் அந்த ஈட்டிக்காரன்.  பிராமிசரி நோட்டில் மொட்டைக் கையெழுத்து வாங்கிக்கொண்டான்.  சுமார் இரண்டு வருடம் மாதாமாதம் பத்து ரூபாய் வீதம் அவனே அலுவலகம் தேடி வந்து வட்டியை வசூலித்துச் சென்றான் (இருநூற்று நாற்பது ரூபாய்!). சித்தப்பா கடனையடைக்க எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.  பின்னர் வட்டியையும் கொடுக்கவில்லை.  இறுதியில் நீதிமன்றத்தில் இக்கடன் பொருட்டு, அவரது சம்பளம்  'அட்டாச்'  செய்யப்பட்டு, அந்த வழியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம்  வரை செலவு.  தொண்ணூறு ரூபாய்க் கடன்! இது ஒரு சிறிய உதாரணம்.

இறுதியில் எல்லாவற்றிலிருந்தும் சிரமப்பட்டு தலையைக் கழற்றிக்கொண்டார். ஆனால் பின்னர் இது அவரது குழந்தைகளின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. சித்தியும் புற்றுநோய் கண்டு காலமானார். அங்கிருந்த இதுபோன்ற கொடுமையான சூழலைக் காண விரும்பாது, அங்கே போவதை படிப்படியாக நிறுத்திக் கொண்டேன்.  அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன்.  அவர்களுக்கு அன்பும், ஆதரவும் தேவைப்பட்ட தருணத்தில், சுயநலமாக, நான் ஒதுங்கிவிட்டேன்.  குற்ற உணர்வு கொல்கிறது.  எனது முதிய நண்பர் ஒருவர் கூறுவார்: "I  have  no  regrets  in  life".  ஆனால் எனது வாழ்க்கையோ FULL OF REGRETS; OF THINGS DONE AND NOT  DONE.


வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களால், எச்சரிக்கை உணர்வுடன்  சில கடமைகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது.  அப்போதெல்லாம் பெருமையுடன் என்னைப் பாராட்டுவார்.  எவ்வளவு பொறுப்புணர்வுடன் வாழ்கிறான் என்று என்னைப் பற்றி பலரிடமும் சொல்லிப் பெருமைபடுவார். 


நேற்று அவரது பேரப்பிள்ளைகளைப் பார்த்தபோது எனது மன வருத்தம் சிறிது குறைந்தது.   ஒரு பேரன் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து, தற்போது அமெரிக்காவில்.  இரண்டாவது பேரன் பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் தருவாயில்.  இரண்டு பேத்திகள் நன்றாகப் படித்து, நல்ல வேலையில்.  இன்னொரு பேத்தி பட்டப்படிப்பில்.  அவரது ஒரே மகனும் இரயில்வேயில் ஓரளவு நல்ல நிலையில்.  சித்தப்பாவின் ஆன்மா ஓரளவு சாந்தி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  கடைசிக் காலத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடிக் கூறிக்கொண்டிருந்தார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது என் குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது.  என்ன செய்ய?  எல்லாம் முடிந்துவிட்டது.

இதமான அவரது அன்பு என்றும் மறக்க இயலாதது.  அவரது வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டவை: 

செய்யக் கூடாதவை: 

1. வட்டிக்குக் கடன் வாங்குவது, அதிலும் கந்து வட்டிக்கு.
2. யாருக்கும் எந்த நிலையிலும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
3. மனைவியின் நகைகளை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது.
4. கோளாறான ஆட்களை விட்டு விலகியிருப்பது.
5. சீட்டாட்டம் போன்ற எந்தச் சூதாட்டத்திலும் ஈடுபடாமல் இருப்பது.


என் அன்பான சித்தப்பா என் கல் மனதை மன்னித்திருப்பார் என்று நம்புகிறேன்.          

21 செப்., 2011

எனக்குப் பிடித்த கவிதை-66: கவிஞர் ஜெ.முருகனின் கவிதை

ஆறாயிரத்துக்கு
வித்துவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோ மீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது...
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு!

19 செப்., 2011

சூரியின் டைரி-51: மேலூரில் சந்திப்போம்

(இடமிருந்து வலம் - நிற்பது) தம்பிகள்: நெல்லை, சந்துரு, விசு, சோமாஸ்.
(அமர்ந்திருப்பது - நான், அம்மா, அப்பா,  சித்தப்பா) 

நேற்று காலை சீக்கிரமே எழுந்து உற்சாகத்துடன் திருப்போரூர் புறப்பட்டேன்.  தம்பிமார் நெல்லையப்பனையும், விசுவையும் சந்திக்கப் போகிறோம், அவர்களுடன் நாள் முழுவதையும் கழிக்கப்போகிறோம் என்று ஒரே குஷி.  நாங்கள் மூவரும் சேர்ந்தால் ஒரே அரட்டையும், கும்மாளமும், சிரிப்பும்தான்.  அதிலும் வீட்டார் யாருமின்றி மூவரும் தனியே என்றால் கேட்கவே வேண்டாம்.

நெல்லையின் வீட்டை நோக்கி நடந்தேன்.  எதிரிலேயே நெல்லையும், விசுவும் வர அப்படியே காலாற நடந்தோம்.  திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவிலில் ஒரே கூட்டம்.  புரட்டாசி மாதப் பிறப்பு என்பதாலேயோ என்னவோ. அருகில் ஒரு சிறிய மெஸ்.  அங்கே இட்லியும், கல்தோசையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு வீடு சென்றோம்.  பேசிக்கொண்டே இருந்தோம்.  இடையிடையே கொறித்தல் வேறு.  அப்புறம் நான் தகவிறக்கம் செய்து, குறுந்தகட்டில் சேமித்து  வைத்திருந்த, நெல்லை விரும்பிவாசிக்கக் கூடிய பல சேதிகளை, அவன் கணினியில் பதிவு செய்தேன்.

 மதிய உணவை முடித்துவிட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த செய்தி வந்தது.  திருச்சியில் எங்கள் அன்பிற்குரிய சித்தப்பா, என் தந்தையாரின் ஒரே தம்பி, காலமானார் என்பது.  சில நாட்களுக்கு முன் அவரது மகன், திருச்சி விசு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைபேசியில் பேசினான்.  அப்போது அவன் சித்தப்பா முடியாமல் இருப்பதாகவும், என்னை பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடி சொல்வதாகவும் கூறினான்.  இருபத்து மூன்றாம் தேதி நான் திருச்சி வழியே ஊர் திரும்ப டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  அவனிடம் அதைக் கூறி அன்று மதியம் சித்தப்பாவைப் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன்.  அதற்குள் இப்படி ஆகும் என்று எண்ணியிருக்கவில்லை.  மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த ஆறுமாத காலமாகவே அவரைப் பார்க்க வேண்டும் என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.  வாழ்க்கையில் இதுபோல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பலமுறை பல முக்கியமானவற்றை கோட்டை விட்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. 

என் மேல் மிகவும் அன்பு செலுத்திய, என்னைப் பற்றி உயர்வாக எண்ணிய ஓரிரு ஜீவன்களில் ஒன்று மறைந்துவிட்டது.  என்னால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது, அவரது கடைசி ஆசையைக்கூட பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டது. அடுத்து உடனே திருச்சி சென்று, அவரது உடலையாவது பார்க்க சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக இல்லை.  தற்செயலாக எனது கைபேசியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது திருச்சி விசு அன்று காலை எட்டு மணி அளவில் சித்தப்பா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். 

நாங்கள் மூவருமே திருச்சி செல்லும் நிலையில் இல்லை.  தம்பி திருச்சி விசு தொலைபேசியில் பேசியபோது, அதை வருத்தத்துடன் அவனிடம் தெரிவித்துவிட்டு, மூவரும் கருமாதியில் கலந்துகொள்கிறோம் என்று கூறினோம்.  நல்லவேளை, என் தங்கை காந்திமதி உடனே திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டாள் என்ற சேதி கிடைத்தது.  எங்கள் குடும்பத்தின் சார்பில் ஒருவராது கலந்துகொள்ள முடிந்ததே என்று ஆறுதலாக இருந்தது.

நேற்றிரவு அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடின.  அவருடன் நான் அதிக நாட்கள் கழித்தது என்னுடைய பதினோராம் வகுப்பு கோடை விடுமுறையில்தான்.  கிட்டத்தட்ட ஒரு மாதம் அவருடன் இருந்தேன்.  இருவரும் சினிமா பார்ப்பது, தினமும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது  என்று ஒரே ஜாலியாக பொழுதைக் கழித்தோம்.  இத்தனைக்கும் அவர் அப்போது பணச்சிக்கல்களில் மாட்டியிருந்தார்.  எனக்காக கடன் வாங்கியாவது, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார்.  அன்றைய நாளில் அதன் தாக்கம் எனக்கு முழுமையாகப் புரிந்திருக்கவில்லை.  சித்தப்பா என்பதைவிட அவர் ஒரு இனிய நண்பராகவே இருந்தார்.  அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பார்ப்பது குறைந்தது.

சென்ற ஆண்டு நெல்லை, விசு மற்றும் நான் அவரை திருச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரச் செய்தோம்.  சித்தப்பா, என் அப்பா எல்லோருமே முன்னாள் இரயில்வே ஊழியர்கள். தம்பி திருச்சி விசு தற்போது ரயில்வே ஊழியன். அதனாலோ என்னவோ எங்களுக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள் மீது ஒரு ஒட்டுறவு இன்றும் இருக்கிறது.   அவர்கள் வீடு ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் சிரமமில்லாமல் அவர் ரயில் நிலையத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எங்களுடன் மகிழ்ச்சியுடன் கழித்தார். அப்போது நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.  அவற்றில் சிலவற்றை எங்கே பதிவு செய்கிறேன்.        

மேலும் என் தந்தையாரின் அறுபதாவது பிறந்த நாளை மிக, மிக எளிமையாக (அடுத்த வீட்டுக்காரருக்கே தெரியாத அளவு) ஓசூரில்  நடத்தினோம்.  (அப்போது என் தந்தையார் என் பெரிய தம்பி, சோமாசுடன் ஓசூரில் இருந்தார்).  அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ஒரே உறவினர் சித்தப்பாதான்.  அப்போது ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட படத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

இனி அவரை எப்போது சந்திக்கப் போகிறேன்? எனக்கு தற்போது அறுபத்து இரண்டு வயது.  உடல் முழுக்க நோய்கள்.  இன்னும் எனக்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று தெரியவில்லை.  எப்படியிருந்தாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை.  "மேலூரில் சந்திப்போம், சித்தப்பா" என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.   

18 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-83: பிரம்மச்சர்யம்

எந்த நேரமும் வெடித்து விடும்
அந்த காற்றடைத்த பலூனை
பல காலம் காத்து அவன் தன்
திருமணத்தில் போட்டுடைத்தான்.

நிர்சிந்தையாய் நிகழவில்லையது.
வெடித்து விடுமோ என்ற பயத்திலும்,
வெடித்துப் பார்ப்போமா எனும் குறுகுறுப்பிலும்,
முடிவெடுக்காமலேயே முடிந்துவிட்ட காலமது.

“மாரத்தான்” ஓட்டத்தில்
விழி பிதுங்கி, தளர்ந்து, மூச்சடைத்து
திருமண எல்லைக்கோடு வரை தாக்குப் பிடித்து
எல்லையை தொட்டு வீழ்ந்தான்.

நெஞ்சு நிமிர்த்தி, கையை உயர்த்தி
முரசு கொட்ட முடியவில்லை வெற்றியென்று.
உடல், எல்லை தொட்டு வீழ்ந்தாலும்
வழியெல்லாம் மனம் எத்தனை முறை
வீழ்வதும் எழுவதுமாய் எல்லை மீறியது.

வெயில், மழைக்கு ஒரே கம்பளியாய்
கவசமாகவும், மூச்சு முட்டும் இம்சையாகவும்
முதுகில் ஊர்ந்த கம்பளிப் பூச்சியாய்
இருந்ததவன் பிரம்மச்சர்யம்.


7 செப்., 2011

ஆன்மீக சிந்தனை-27:

புகழ், செல்வம், பேரறிவுடன் திருப்பொலிவு, உண்மையான இன்பம், முக்தி ஆகியவற்றை பெறவிரும்புவோர் மனதை ஒருநிலைப் படுத்தி இறைவனைத் துதிக்கவேண்டும் - அதிவீரராம பாண்டியன் 

இன்றைய சிந்தனைக்கு-148:

உண்மையான அன்பு முழுமையடையும்போது, அதிலிருந்து அழகான வாசனை கமழும் கருணையாகிய மலர் மலர்கிறது - மாதா அமிர்தானந்தமயி     

எனக்குப் பிடித்த கவிதை-65: முகுந்த் நாகராஜனின் கவிதை

விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி!


- முகுந்த் நாகராஜன்


நெல்லையப்பன் கவிதைகள்-82: திருத்திக் கேட்ட வரம்

பக்தா,
உன்பக்தி மெச்சினேன்.
வேண்டியது கேள்
ஒரு வரம் தருவேன்!


ஆண்டவரே!
என் தேவைகள் அதிகம்
ஒருவரம் போதாதே...


மகனே உன் சமர்த்து;
வேண்டியது கேள்,
வரம் என்னவோ
ஒன்றே ஒன்றுதான்!


யோசித்த பக்தன்
தெளிவு பெற்றான்
தொழுது கேட்டான்-
ஐயனே! என் தொகுதிக்கு
எதிர்க்கட்சிகள் புறக்கணிக்காத
இடைத்தேர்தல் வேண்டும்.


அப்பா வாசம்
முரண்
மலரை தீயிலிட மனம் வருமா?

6 செப்., 2011

இன்றைய சிந்தனைக்கு-147:

ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தொடக்கம்
ஒவ்வொரு காலையும் புத்துலகாக்கும்
வெவ்விய பழிகள் விழுத்துயரடைந்தோர்க்கு
இவ்விடத் துண்டோர் எழில் ஞாயிற்ரொளி அதுவே,
எனக்கும் உனக்கும் விரும்பிய எவர்க்கும்
ஈடில் பேரின்ப வாயிலின் அழைப்பே!  

- கா.அப்பாத்துரையார்

 (Every day is a fresh beginning
  Every morn is the world made new
  Ye who are weary of sorry and sinning
  A hope for me and a hope for you. - James Allen)  

எனக்குப் பிடித்த கவிதை-64: விஜிலா தேரிராஜனின் கவிதை


தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி
கறவைமாடும், கன்றும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும்
அத்தனை அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும்
பாட்டியை
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்!



விஜிலா தேரிராஜன்


5 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-81: பார்த்துப் பிறந்த கவிதை

வெள்ளம் சுழித்தோடிய
ஆற்றின் ஒரு கரையில்
குட்டியுடன் நின்ற கரடி,
மறுகரைக்கு போய் விட்டால்
மாறாத விடுதலை என நம்பி
குட்டியை தலை சுமர்ந்து
நதி கடக்க தொடங்கியது

இடர் பல வந்த போதும்
மெதுவாக முன்னேறியது.
அப்பப்பா எத்தனை துயர்கள்!
விடாது முன்னேறியது கரடி.

நடு வழியில் ஆழமும் இழுப்பும் அதிகமாக
சமாளிக்க முடியாத கரடி
குட்டியை தண்ணீருக்குள் போட்டு
அதன்மீது ஏறிநின்று
தன்தலை காத்துக்கொண்டது.

வெள்ளம் சிறிது வடிய
சிரத்தையுடன் தன் குட்டியை
தண்ணீரிலிருந்து வாரி எடுத்து
தலையில் வைத்துக்கொண்டு
மறு கரை நோக்கி நடந்தது

கரடியை நான் உங்களுக்கு
அடையாளம் காட்டத் தேவையில்லை;
கரடிக்குட்டியது மட்டும் பாவம்
கடல் சூழ்ந்த நாட்டின்
அப்பாவித் தமிழ் மக்கள்.

இன்றைய சிந்தனைக்கு-146:

ஆடும் சிறகில்லை பறந்துவான்  ஏக, இரு தாளுண்டு  அடிபெயர்த் தாடவே - கா.அப்பாத்துரையார் 

(We have not wings, we cannot soar; but we have feet to scale and climb - Longfellow)

எனக்குப் பிடித்த கவிதை-63: கொங்குவேள் கவிதை

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.


- கொங்குவேள் 

4 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-80: கலி காலம்

நல்ல தலைவர்கள்
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.
.
தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.
.
இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.
.
வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.
.
மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு
காலம் இன்னும் கனியவில்லையாம்!


ஆன்மீக சிந்தனை-26:

தொடர்ந்த இறை சிந்தனையால் 
சிறந்த கல்வி
நிறைந்த செல்வம்
உயர்ந்த ஞானம் 
பெறலாம். 

2 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-79: 1. கதை கேளு, கதை கேளு (ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)

ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.

அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு.

( ................. ....................................................... )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம்.
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.

மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு பல நாள் ;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.

வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;

விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!

கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்”.