21 ஏப்., 2020

பா.ரா.வின் லாக்டவுண்

மார்ச் 20ம் தேதி முதல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன். இந்த முப்பது நாள்களில் போரடித்துக்கூட வெளியே போகவில்லை. என் ஆபீஸ் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. கட்டாய வேலை என்று ஏதுமில்லாமல் இஷ்டத்துக்குப் படிப்பதும் எழுதுவதுமாகவே இருந்திருக்கிறேன். உருப்படியாக என்ன செய்திருக்கிறேன்?

1. பழையதும் புதியதுமாக மொத்தம் சுமார் 1000-1500 பக்கங்கள் படித்திருப்பேன். ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கள் தனி.

2.  சாரு ஷேர் செய்த குட்டி ரேவதியின் சித்த மருத்துவப் பதிவுகளைப் படித்ததன் விளைவாக அந்த இயல் சார்ந்த சில புராதன நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன் (Thanks to SelvaMani.) பாடல்கள் உள்பட அனைத்துமே எளிமையாக இருக்கிறது, புரிகிறது.

3. எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு ஐம்பது பக்கங்கள் கூடுதலாக எழுதியிருக்கிறேன். எழுதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை டெலிட் செய்திருக்கிறேன்.

4. புதிதாக ஒரு அல்புனை நூல் எழுதத் தொடங்கி ஓரிரு அத்தியாயங்கள் போயிருக்கின்றன.

5. நான்கைந்து வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்து இரண்டு முடித்திருக்கிறேன். (ஃபர்காட்டன் ஆர்மி, இரண்டாம் உலகப் போர்.)

6. மிச்சம் இருந்தவற்றுள் எட்டு புத்தகங்களை கிண்டிலில் ஏற்றினேன். இன்னும் சில உள்ளன. ஆங்கிலச் சொற்களைத் தனியே தேடி மாற்றும் வேலை அலுப்பாக உள்ளதால் நெடுநாள் நிலுவை தொடர்கிறது.

7. ஒரு வெப் சீரிஸுக்கான கதை விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. zoomல் தினசரி ஒரு மணி நேரம் அதில் கழிகிறது. 

8. அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவும் பழக்கம் வந்திருக்கிறது. நாம் சுத்தமாக இருக்கிறோம் என்ற உணர்வு மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவுக்குப் பிறகும் இது தொடரும் என்று நினைக்கிறேன்.

9. மார்ச் மாத அழிச்சாட்டியங்களுக்குப் பரிகாரமாக இந்த முப்பது நாளும் சிறிதும் வழுவாமல் படு உக்கிர பேலியோ டயட் கடைப்பிடித்திருக்கிறேன். இரண்டு ஏகாதசிகளுக்கு 24 மணி நேர விரதம். பிற நாள்களில் இரண்டு வேளை உணவு. ஓரளவு நடை, தினமும் மாப் போடுதல் என்று உடலாலும் சிறிது உழைக்கிறேன்.  [இரண்டு நாள் பாத்திரம் தேய்த்துப் பார்த்தேன். சரிப்பட்டு வராமல் விட்டுவிட்டேன்.] விளைவு, எக்குத்தப்பாக ஏறிக்கொண்டிருந்த எடை நின்று நிதானித்து இறங்கத் தொடங்கிவிட்டது. உடல் லேசாகிக்கொண்டிருப்பதை உணர்கிறேன். டயட் என்பது ஒரு வேலை என்று எப்போதும் எனக்குத் தோன்றுவதை இப்போதும் எண்ணிக்கொள்கிறேன். வேறு கொலைக்கொடூர வேலை இல்லாவிட்டால் மட்டுமே இதைச் சரியாகச் செய்ய முடிகிறது. இன்று என் மகள் எடுத்த சில புகைப்படங்களில் என் க்ளாமர் கூடியிருப்பதை நானே உணர்ந்து கிளுகிளுப்பானேன். நீங்கள் கண்டுகளிக்க ஒரு படம் இத்துடன்.

10. அவ்வளவுதான்.

பகிர்ந்து கொண்டமைக்கு திரு பா.ராகவன் அவர்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை: