21 ஏப்., 2020

பிரமிள் : முதலும் முடிவும்

இன்று பிரமிள் பிறந்தநாள் (20.4.1939 - 6.1.1997)
------------------------------------------------------
முதலில் பிரசுரமான கவிதை
--------------------------------------------
நான் 
-------
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே 
ஊரீன்று உயிர்க்குலத்தின் 
வேரீன்று வெறும்வெளியில் 
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து 
உருளுகின்ற கோளமெலாம் 
அன்று பெற்று விட்டவளென் 
தாய்! 
வீடெதுவோ எந்தனுக்கு? 
ஆடு(ம்) அரன் தீவிழியால் 
மூடியெரித்துயிரறுத்த 
காடு ஒத்துப் பேய்களன்றி 
ஆருமற்ற சூனியமாய் 
தளமற்ற பெருவெளியாய் 
கூரையற்ற நிற்பது என் 
இல்! 
யாரோ நான்?
ஓ! ஓ!-
யாரோநான் என்றதற்கு 
குரல்மண்டிப் போனதென்ன? 
தேறாத சிந்தனையும் 
மூளாது விட்டதென்ன? 
மறந்த பதில் தேடியின்னும் 
இருள் முனகும் பாதையிலே 
பிறந்திறந்து ஓடுவதோ 
நான்!
..........,,,·
எழுத்து, ஜனவரி 1960.
----------
- பிரமிள்
இறுதியில் பிரசுரமான கவிதை
----------------------------------------------
நித்திரைக்குள்
-------------------- 
நித்திரைக்குள் 
நின்ற நிலவில் 
தஹித்தது தணல். 
நிலவோ,‘நான் 
நெருப்பல்ல இங்கே 
பளிச்சிடுவது 
புழுதிக்கடல்’ என்று 
பசப்பிற்று.
நித்திரைக்குள் 
திரைத்த கடலில் 
எரிமலைப் பிழம்பு. 
கடலோ ‘நான் 
கரிப்பேன் உப்பாய் 
எரித்து அறியேன். 
இந்தப் பிழம்பு 
நிலவின் வம்பளப்பு’ என்று 
இளித்தது. 
நித்திரைக்குள் 
நித்திரை அமிழ்ந்து 
பரி தீ பிறந்தது. 
பசப்பல் இளிப்பு 
இரண்டையும் கிழித்தது. 
நிலவின் மீது 
பிளந்து கிடந்த 
கடலுக்குள் 
எரிந்தது தீயின் 
கள். 
............
(1996) லயம், ஜூலை 1998.
- பிரமிள்

நன்றி: பிரமிளுக்குப் பிறகு பிரமிள், முகநூல்.

கருத்துகள் இல்லை: