அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர்!!
வன்தொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. `புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே` என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், `பத்திமையும் அடிமையையும்` என்று திருப்பதிகம் தொடங்கி, `எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை` என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
திருச்சிற்றம்பலம்
ஏழாம் திருமுறை
திருவாரூர்
பண் :பழம் பஞ்சுரம்
பாடல் எண் : 1
பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.
பொழிப்புரை :
பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
குறிப்புரை :
` போய்த் தொழுவேன் ` என்றது , வருகின்ற திருப் பாடல்களிலும் சென்று இயையும் . ` அது ` , பகுதிப்பொருள் விகுதி . உயிரோடு ஒன்றித்து நிற்பது உடம்பேயாகலின் , ` இது ` என்றது , அதனையே ஆயிற்று . ` இத்தன்மைத்தாகிய உடலின்பங் கருதி ஈண்டு இரேன் ` என்பார் , ` இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் ` என்று அருளினார் . பின்னும் பலவிடங்களில் உடம்பை இகழ்ந்து அருளுவனவெல்லாம் , இக்கருத்தானே என்க . ` என் இறைவன் ` என இயையும் .
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பொற்கழல் போற்றி ! போற்றி !!
நன்றி :
ஓதுவார் மூர்த்தி சிவத்திரு.அரிஹர தேசிகர் அவர்கள்
திரு மஹா ஷங்கரன்
www.thevaaram.org
மற்றும்
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக