13 நவ., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் #1308


திருமந்திரம் - பாடல் #1308: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1308/

நன்றி :

கருத்துகள் இல்லை: