2 மே, 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7:


ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7ம் பாடல்:

ஏது பிழைசெய்தாலும் ஏழையேனுக் கிரங்கி
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு.

10 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-6:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-6ம் பாடல்:

நீலக்கடல் முகட்டில் நேருதய சூரியன்போற்
கோலக் கலாபக் குரகதமேல் – சாலவும்நீ
தோன்றி அடியேன் துயர்தீரப் போரூரா
உன்றியடி என்முடிமேல் ஓது.

7 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-5:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-5:
கேட்டதெல்லாம் பாலிக்கும் கேடிலாத் தாதாவும்
வீட்டுநெறி காட்டும் வியன்குருவும் – நாட்டமென
உள்நின்று நாயேற் கொளிகாட்டுஞ் சிற்பரனும்
எண்நின்ற போரூர் இறை

4 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-4:



கண்ணிற் கருமணியே கற்பகமே கற்றோர்கள்
உள்நிற்கும் ஓரொளியே ஓர்பொருளே – எண்நிற்கும்
போரூர் இறையே புனிதநிறை ஆனந்தச்
சீரூரில் நாயேனைச் சேர்.

3 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-3:

எனக்கவலம் வாராமல் எந்நாளுங் காத்து
மனக்கவலை மாற்றும் மருந்தாம் – புனச்சிறுமி
முத்துவடக் கொடுமுத முந்நான்கு தோளுடையான்
தத்துபுனற் போரூரான் தாள்.

2 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-2:

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் – சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா
என்றே நான் ஈடேறுவேன்.

1 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-1:

இன்று காலை தம்பி நெல்லையப்பனின் நண்பர் திரு பாலசுப்ரமணியன் அவர்களை திருப்போரூரில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு இனிய அனுபவம்.

அவர் திருப்போரூர் ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறையிலிருந்து 108 பாடல்களை கையினால் எழுதி பிரதியெடுத்து, பாராயணம் செய்ததை அறிந்தேன். அவரது அந்த குறிப்பேட்டைப் பெற்று தினமும் ஒரு பாடல் அனைவரும் படித்துப் பயன்பெற, என்னுடைய வலைப்பூவிலும், முகனூலிலும் பதிவதாகச் சொன்னேன்.

அதன்படி, முதற் பாடல்:

நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை – நீயே
பொறுத்தாள்வ துன்கடனாம் போரூரா என்னை
ஒறுத்தால் எனக்கார் உறவு. 

நன்றி:

திரு பாலசுப்ரமணியன் அவர்கள்

28 பிப்., 2015

பாரதிதாசன் கவிதைகள்-14: தூய்மை

தூய்மை

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
     தூய்மை சேரடா தம்பி!

பாரதி கவிதைகள்-25: விடுதலை - சிட்டுக்குருவி

விடுதலை - சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2.
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3.
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)