வீட்டுக்கு எப்படி பத்திரம் என்னும் ஆவணம் தேவையோ, அது போன்று ஒரு நாட்டுக்கும் வரலாறு அடிப்படையான தேவையாகும்.
ஒரு நாட்டை அழிக்க படை பட்டாளம் தேவை இல்லை. அதன் வரலாறு, மொழி,பண்பாடு ஆகியவற்றை அழித்தால் போதும். அந்த மக்கள் தாமாகவே பிறருக்கு அடிமை ஆகி விடுவார்கள்.
அத்தகைய நிலை எப்போதும் வரக்கூடாது என்பதற்காகவே அகவாழ்க்கையை இலக்கியமாகவும்,புறவாழ்க்கையை கோட்டை கட்டி போர் பயிற்சி பெறும் வீர வாழ்க்கையாகவும் தமிழர்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொண்டார்கள். பண்பாட்டைப் போற்றிக் காக்கும் இசையும் நாடகமும் சேர்த்து முத்தமிழாக வளர்த்தார்கள். அதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மூவேந்தரின் ஆட்சி நிலைத்து நீடித்தது.இளைஞர்களுக்கு ஏர் உழவும்,போர் புரியவும் பயிற்சி அளித்தனர். ஏரும் போரும் இணை பிரியாது என்னும் பழமொழி தோன்றியது.
ஒரிசா மாநிலத்தில் "அத்திகும்பா" கல்வெட்டில் தமிழர்கள் 1300 ஆண்டுகளாக ஒற்றுமை உடன்படிக்கை ( கி.மு. 1500 முதல் கி.மு. 217 வரை ) செய்து கொண்டு வட நாட்டுப் படைகளை வீழ்த்தினார்கள். அந்த உடன்படிக்கை முடிவுற்றதால் மூவேந்தர்கள் ஒற்றுமை உடைபட்டது.
கி.மு. 217 முதல் கி.மு. 57 வரை பாண்டியர்கள் ஆட்சி நடை பெறவில்லை. இந்த இருண்ட காலத்தில் தான் , ஆரியர்களின் வேள்வி முறை தோன்றி தமிழர்களின் நூல்கள் அழிக்கப்பட்டன, அழிந்தன. கி.மு. 57- ல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் தமிழ்ச்சங்கத்தை மீட்டமைத்தார். சங்க நூல்கள் தொகுக்கப்பட்டன. இதனை, நன்குடி வேளாளர் வரலாறு செய்யுள் நூல் குறிப்பிடுகிறது. தமிழ் மூவேந்தர்கள் தவிர, வேறு மன்னர்கள் தமிழகத்தை சங்க காலத்துக்கு முன்பு ஆட்சி புரிந்ததில்லை.
கி.மு. 3 ஆயிரம் ஆண்டு அளவில் இந்தியாவில் கரும்பு இருந்தது என்று ஆங்கிலக் கலை களஞ்சியம் கூறுகிறது. அதே காலத்தில் தான் அதியன்சேரல் என்ற இளவரசன் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து முதன் முதலில் கரும்பை கண்டுபிடித்து பயிராக்கினார், அந்தக் கரும்பை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவ்வையாரும் இதைப் புறநானூற்றில் பாடி இருக்கிறார்.
மொரீசியஸ் நாட்டில் நடந்த 5 ஆம் உலகத்தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்த பிரஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் , வாஸ்கோட காமாவுக்கு வழிகாட்டி , சேரக் கடற்கரைக்கு அழைத்து வந்தவன், மாலுமி கணக்கன் என்னும் தமிழனே என்றும், பழங்காலத்தில் உலகின் பல் வேறு துறைமுகங்களில் வாழ்ந்த கப்பலை பழுது பார்ப்பவர்களும், ஆழ்கடல் பயணத்துக்கு வழிகாட்டிகளும் தமிழராகவே இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
ரோம் நாட்டு தங்கக்கட்டிகளை சேர நாட்டு மிளகுக்காக கப்பல் ஏற்றி அனுப்பியதால் ரோம் நாட்டு செல்வம் வறண்டு விட்டது என்று அவர்கள் புலம்பிய காலமும் ஒன்று இருந்தது.
மிகப் பழங்காலத்தில் மற்ற நாடுகளை வென்று அடக்கி ஆள தமிழ்ச் சான்றோர் ஒப்பவில்லை. எதிரியை வென்று காட்டி, தன் வல்லமையைக் காட்டுவதே தமிழர் மரபாக இருந்தது என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆரியர் வருகைக்கு முன்பு , இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தனர். தமிழ் அரசர்களே ஆட்சி புரிந்தனர். வந்தாரை வாழ வைத்த தமிழகம் சொந்த மண்ணில் ஏழ்மையுற்றது ஏன் என்பதற்கு ஒரே காரணம் கோட்டைக் கட்டும் நாகரிகம் மறைந்தது என்பதேயாகும். கோட்டை கட்டும் நாகரிகம் போய், கோவில் கட்டும் நாகரிகம் வந்த பிறகு போர் வீரர்களை உருவாக்கும் கோட்டை இல்லாமல் போய் விட்டது. இதனால் தமிழ்நாடு பிறரால் ஆளப்படுவதாயிற்று.
எனவே, தமிழா! உன் வரலாற்றைத் திருப்பிப் பார். உலகம் உன்னைத் திரும்பி பார்த்து பாராட்டும்.
ஆராய்ச்சிக் கட்டுரை: பேராசிரியர் இரா. மதிவாணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக