*துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.*
*யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.*
*அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, "இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான்.'*
*'தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்"*
*என்றான் நெசவாளி*
*நூல் நூற்றுக்கொண்டே அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. "இந்தக் குச்சி எதற்கு?" எனக் கேட்டான் அரசன். "வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது*
*என்றான். அந்த நெசவாளி*
*தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். “இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?" எனக் கேட்டான் அரசன்.*
*வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!" என்று பதில் சொன்னான்.*
*அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டான் அரசன்.*
*நூற்பு வேலை செய்து கொண்டிருக்கும் போது வாய் சும்மா தானே இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!" என்றான்.*
*அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம் தானே எனக் கேட்டான் அரசன்.*
*அதற்கு நெசவாளி சொன்னான்: "அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே,*
*அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான்.*
*ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.*
*நெசவாளி சொன்னான்:*
*"இது மட்டுமில்லை.*
*என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்து கொண்டே அதையும் கற்று வருகிறேன்.*
*"ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.*
*நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமஞல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.*
*வெற்றி நமதே..!!*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக